அகநானூறு

அகநானூறு

களிற்றியாணை நிரை


37
பாடியவர்: விற்றூற்று மூதெயினனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது

மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்
மங்குல் வானின் மாதிரம் மறைப்ப
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டித்  5
தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
கிளி போல் காய கிளைத் துணர் வடித்துப்
புளிப்பதன் அமைந்த புதுக்குட மலிர் நிறை
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங்குடைக்  10
கய மண்டு பகட்டின் பருகிக் காண்வரக்
கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை ஓங்கிய
பருதி அம் குப்பை சுற்றிப் பகல் செல  15
மருத மர நிழல் எருதொடு வதியும்
காமர் வேனில் மன் இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே.  18

38
பாடியவர்: வடம வண்ணக்கன் பேரி சாத்தனார், 
திணை:  குறிஞ்சித் திணை 
தோழி சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்
அம் சிலை இடவது ஆக வெஞ்செலல்
கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி
வருதல் வாய்வது வான் தோய் வெற்பன்  5
வந்தனன் ஆயின் அம் தளிர்ச் செயலைத்
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும் பாய்பு உடன்
ஆடா மையின் கலுழ்பு இல தேறி
நீடு இதழ் தலயிய கவின் பெறு நீலம்  10
கண் என மலர்ந்த சுனையும் வண் பறை
மடக் கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல்
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி
கொய்து ஒழி புனமும் நோக்கி நெடிது நினைந்து
பைதலன் பெயரலன் கொல்லோ ஐ தேய்கு  15
அம் வெள் அருவி சூடிய உயர் வரைக்
கூஉம் கண் அஃது எம் ஊர் என
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே.  18

39
பாடியவர்: மதுரை செங்கண்ணனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவன் தலைவியிடம் சொன்னது

ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து
உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின்
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின்
ஆய் நலம் மறப்பேனோ மற்றே சேண் இகந்து  5
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
படு ஞெமல் புதையப் பொத்தி நெடு நிலை
முளி புல் மீ மிசை வளி சுழற்றுறாஅக்
காடு கவர் பெருந் தீ ஓடு வயின் ஓடலின்
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு  10
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
இனம் தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டெனக்
கள் படர் ஓதி நின் படர்ந்து உள்ளி
அருஞ்செலவு ஆற்றா ஆர் இடை ஞெரேரெனப்  15
பரந்து படு பாயல் நவ்வி பட்டென
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு
நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு
இன்னகை இனையம் ஆகவும் எம் வயின்
ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின்  20
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி
நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து
வறுங்கை காட்டியவாய் அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே.  25

40
பாடியவர்: குன்றியனார், 
திணை:  நெய்தற் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப
நீல் நிறப் பெருங்கடல் பாடு எழுந்து ஒலிப்ப
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
குவை இரும் புன்னைக் குடம்பை சேர
அசை வண்டு ஆர்க்கும் அல்குறு காலைத்  5
தாழை தளரத் தூக்கி மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க்
காமர் நெஞ்சம் கையறுபு இனையத்
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
அறாஅலியரோ அவருடைக் கேண்மை  10
அளி இன்மையின் அவண் உறை முனைஇ
வாரற்க தில்ல தோழி  கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
செறி மடை வயிரின் பிளிற்றிப் பெண்ணை  15
அக மடல் சேக்கும் துறைவன்
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே.  17

41
பாடியவர்: குன்றியனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவன் சொன்னது

வைகு புலர் விடியல் மை புலம் பரப்பக்
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரி மருள் பூஞ்சினை இனச் சிதர் ஆர்ப்ப
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர  5
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதைத் தெள் விளி புலம் தொறும் பரப்பக்
கோழ் இணர் எதிரிய மரத்த கவினிக்
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்  10
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
நல் தோள் நெகிழ வருந்தினள் கொல்லோ
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந்துணர்
தாது இன் துவலை தளிர் வார்த்தன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய  15
நுண் பல் தித்தி மாஅயோளோ?  16

42
பாடியவர்: கபிலர், 
திணை:  குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்
தளிர் ஏர் மேனி மாஅயோயே
நாடு வறம் கூர நாஞ்சில துஞ்சக்  5
கோடை நீடிய பைது அறு காலைக்
குன்று கண்டன்ன கோட்ட யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள உள் இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசிப்
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை  10
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்று சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்தமாறே.


43
பாடியவர்: மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

கடல் முகந்துகொண்ட கமஞ்சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி
என்றூழ் உழந்த புன்தலை மடப் பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி  5
குறு நீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது அஞ்சுவரப் பாஅய்
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி
மை இருங்கானம் நாறும் நறு நுதல்  10
பல் இருங்கூந்தல் மெல் இயல் மடந்தை
நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும்
அளியரோ அளியர் தாமே அளி இன்று
ஏதில் பொருட்பிணிப் போகித் தம்
இன்துணைப் பிரியும் மடமையோரே!  15

44
பாடியவர்: குடவாயில் கீரத்தனார், 
திணை:  முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

வந்து வினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே நின் தேர்
முன் இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது  5
ஊர்க பாக ஒரு வினை கழிய
நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அருங்கடுந்திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அருங்கட்டூர்  10
பருந்து படப் பண்ணிப் பழையன் பட்டெனக்
கண்டது நோனானாகித் திண் தேர்க்
கணையன் அகப்படக் கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணிப் பெரும்பூட் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர்  15
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை
பொங்கடி படி கயம் மண்டிய பசுமிளை
தண் குடவாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே.

45
பாடியவர்: வெள்ளிவீதியார்,  
திணை:  பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடு களப் பறையின் அரிப்பன ஒலிப்பக்
கோடை நீடிய அகன் பெருங்குன்றத்து
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்  5
காடு இறந்தனரே காதலர் மாமை
அரி நுண் பசலை பாஅய் பீரத்து
எழில் மலர் புரைதல் வேண்டும் அலரே
அன்னி குறுக்கைப் பறந்தலை திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணி  10
புன்னை குறைத்த ஞான்றை வயிரியர்
இன்னிசை ஆர்ப்பினும் பெரிதே யானே
காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
ஆதிமந்தி போலப் பேதுற்று
அலந்தனென் உழல்வென் கொல்லோ பொலந்தார்  15
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே!

46
பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார், 
திணை:  மருதத் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

சேற்று நிலை முனைஇய செங்கண் காரான்
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
அம் தூம்பு வள்ளை மயக்கித் தாமரை  5
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர
யாரையோ நிற் புலக்கேம் வாருற்று
உறை இறந்து ஒளிரும் தாழ் இருங்கூந்தல்
பிறரும் ஒருத்தியை நம் மனைத் தந்து
வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம்  10
கூறேம் வாழியர் எந்தை செறுநர்
களிறு உடை அருஞ்சமம் ததைய நூறும்
ஒளிறு வாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க  15
சென்றீ பெரும நின் தகைக்குநர் யாரோ?

47
பாடியவர்: ஆலம்பேரி சாத்தனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

அழிவில் உள்ளம் வழி வழிச் சிறப்ப
வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே ஒலிதலை
அலங்கு கழை நரலத் தாக்கி விலங்கு எழுந்து
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி  5
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
அமைக்கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம்முனை அருஞ்சுரம் நீந்திக் கைம்மிக்கு
அகன் சுடர் கல் சேர்பு மறைய மனைவயின்
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின்  10
குறு நடைப் புறவின் செங்கால் சேவல்
நெடு நிலை வியன் நகர் வீழ் துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
யாண்டு உளர் கொல் எனக் கலிழ்வோள் எய்தி
இழை அணி நெடுந்தேர்க் கைவண் செழியன்  15
மழை விளையாடும் வளங் கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின்
வேய் புரை பணைத்தோள் பாயும்
நோய் அசா வீட முயங்குகம் பலவே.

48
பாடியவர்: தங்கால் முடக்கொற்றனார், 
திணை:  குறிஞ்சித் திணை 
தோழி செவிலித்தாயிடம் சொன்னது

அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள்
பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு
நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம்
யானும் தெற்றென உணரேன் மேல் நாள்
மலி பூஞ்சாரல் என் தோழிமாரோடு  5
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி
புலி புலி என்னும் பூசல் தோன்ற
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்  10
குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு
யாதோ மற்று அம் மா திறம் படர் என
வினவி நிற்றந்தோனே அவர் கண்டு
எம்முள் எம்முள் மெய் மறைபு ஒடுங்கி  15
நாணி நின்றனெமாகப் பேணி
ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர் நும் வாய்ப்
பொய்யும் உளவோ என்றனன் பையெனப்
பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர் மறுத்து  20
நின் மகள் உண்கண் பன் மாண் நோக்கிச்
சென்றோன் மன்ற அக் குன்று கிழவோனே
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன்
மகனே தோழி என்றனள்  25
அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே.