அகநானூறு

அகநானூறு

களிற்றியாணை நிரை


85
பாடியவர்: காட்டூர் கிழார் மகனார், 
திணை:  பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

நன்னுதல் பசப்பவும் பெருந்தோள் நெகிழவும்
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர்
அறவர் அல்லர் அவர் எனப் பல புலந்து
ஆழல் வாழி தோழி சாரல்  5
ஈன்று நாள் உலந்த மென் நடை மடப்பிடி
கன்று பசி களைஇய பைங்கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும்
வென்வேல் திரையன் வேங்கட நெடு வரை  10
நன்னாள் பூத்த நாகு இள வேங்கை
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
நனைப் பசும் குருந்தின் நாறு சினை இருந்து
துணைப் பயிர்ந்து அகவும் துணை தரு தண் கார்
வருதும் யாம் எனத் தேற்றிய  15
பருவம் காண் அது பாயின்றால் மழையே.

86
பாடியவர்: நல்லாவூர் கிழார், 
திணை:  மருதத் திணை 
தலைவன் தோழியிடம் சொன்னது

உழுந்து தலைப்பெய்த கொழுங்கனி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து மாலை தொடரிக்
கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக்  5
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென
உச்சிக் குடத்தர் புத்தகன் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்  10
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி  15
பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன் மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேர் இற் கிழத்தி ஆக எனத் தமர் தர
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்  20
கொடும் புறம் வளஇக் கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த காலை யாழ நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என  25
இன் நகை இருக்கை பின் யான் வினவலின்
செஞ்சூட்டு ஒண் குழை வண் காது துயல் வர
அகமலி உவகையள் ஆகி முகன் இகுத்து
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
மடங் கொள் மதைஇய நோக்கின்  30
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே.

87
பாடியவர்: மதுரைப் பேராலவாயர், 
திணை:  பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

தீந் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்
கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை
நல்கூர் சீறூர் எல்லித் தங்கிக்
குடுமி நெற்றி நெடு மரச் சேவல்  5
தலைக் குரல் விடியல் போகி முனாஅது
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங்கண் பாணி
அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனக்
குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம்  10
நனி நீடு உழந்தனை மன்னே அதனால்
உவ இனி வாழிய நெஞ்சே மை அற
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியன் நகர்ச்
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டித்
தாழ் இருங்கூந்தல் நம் காதலி  15
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே.

88
பாடியவர்: ஈழத்து பூதந்தேவனார், 
திணை:  குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

முதைச்சுவல் கலித்த மூரிச் செந்தினை
ஓங்கு வணர்ப் பெருங்குரல் உணீஇய பாங்கர்ப்
பகு வாய்ப் பல்லி பாடு ஓர்த்துக் குறுகும்
புருவைப் பன்றி வருதிறம் நோக்கி
கடுங்கைக் கானவன் கழுது மிசைக் கொளீஇய  5
நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்து நம்
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
சென்றனன் கொல்லோ தானே குன்றத்து
இரும் புலி தொலைத்த பெருங்கை யானைக்
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்  10
இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து
இருங்கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றிக்
கொடு விரல் உளியம் கெண்டும்
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே?  15

89
பாடியவர்: மதுரைக் காஞ்சிப் புலவர், 
திணை:  பாலைத் திணை 
மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது

தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந்தலை
உருத்து எழு குரல குடிஞைச் சேவல்
புல் சாய் விடரகம் புலம்ப வரைய
கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண்  5
சிள்வீடு கறங்கும் சிறி இலை வேலத்து
ஊழுறு விளை நெற்று உதிரக் காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழியக்
களரி பரந்த கல் நெடு மருங்கின்
விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர்  10
மை படு திண் தோள் மலிர வாட்டிப்
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள் வயவர் அருந்தலை துமித்த
படு புலாக் கமழும் ஞாட்பில் துடி இகுத்து
அருங்கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்  15
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள் கொல்லோ தானே தேம் பெய்து
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்  20
இடு மணல் பந்தருள் இயலும்
நெடு மென் பணைத்தோள் மாஅயோளே.

90
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை:  நெய்தற் திணை, 
தோழி தலைவனிடம் சொன்னது

மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி
இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும்
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந்துறை
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ
இல் வயின் செறித்தமை அறியாய் பன்னாள்  5
வருமுலை வருத்தா அம் பகட்டு மார்பின்
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின் வயின்
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ
அருந்திறள் கடவுள் செல்லூர்க் குணாஅது
பெருங்கடல் முழக்கிற்று ஆகி யாணர்  10
இரும்பு இடம்படுத்த வடுவுடை முகத்தர்
கருங்கண் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்குநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே.

91
பாடியவர்: மாமூலனார், 
திணை:  பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

விளங்கு பகல் உதவிய பல்கதிர் ஞாயிறு
வளங் கெழு மாமலை பயங் கெடத் தெறுதலின்
அருவி ஆன்ற பெருவரை மருங்கில்
சூர்ச் சுனை துழைஇ நீர்ப் பயங் காணாது
பாசி தின்ற பைங்கண் யானை  5
ஓய் பசிப் பிடியொடு ஒரு திறன் ஒடுங்க
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்
பெரும் பேர் அன்பினர் தோழி இருங்கேழ்
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கைக்  10
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்
விசி பிணி முழவின் குட்டுவன் காப்பப்
பசி என அறியாப் பணை பயில் இருக்கைத்
தட மருப்பு எருமை தாமரை முனையின்  15
முட முதிர் பலவின் கொழு நிழல் வதியும்
குடநாடு பெறினும் தவிரலர்
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே.

92
பாடியவர்: மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார், 
திணை:  குறிஞ்சித் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

நெடுமலை அடுக்கம் கண் கெட மின்னிப்
படுமழை பொழிந்த பானாள் கங்குல்
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடு வரிச்
செங்கண் இரும் புலி குழுமும் சாரல்
வாரல் வாழியர் ஐய நேர் இறை  5
நெடுமென் பணைத்தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே நாளை
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
ஒண் செங்காந்தள் அவிழ்ந்த ஆங்கண்
தண் பல் அருவித் தாழ் நீர் ஒரு சிறை  10
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்
திரு மணி விளக்கின் பெறுகுவை
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே.

93
பாடியவர்: கணக்காயனார் மகனார் நக்கீரனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்
ஆள் வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து
ஆரங்கண்ணி அடு போர்ச் சோழர்
அறங் கெழு நல் அவை உறந்தை அன்ன  5
பெறல் அரு நல் கலம் எய்தி நாடும்
செயல் அருஞ்செய் வினை முற்றினம் ஆயின்
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வாடா வேம்பின் வழுதி கூடல்
நாள் அங்காடி நாறும் நறு நுதல்  10
நீள் இருங்கூந்தல் மாஅயோளொடு
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர்
நுரை முகந்தன்ன மென் பூஞ்சேக்கை
நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து
நலங் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப  15
முயங்குகம் சென்மோ நெஞ்சே வரிநுதல்
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி
ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தடக்கைக்
கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை  20
திருமா வியன் நகர்க் கருவூர் முன் துறைத்
தெண் நீர் உயர் கரைக் குவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.

94
பாடியவர்: நன்பலூர் சிறுமேதாவியார், 
திணை:  முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது, அல்லது, தலைவன் நண்பனிடம் சொன்னது

தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவை இலை முசுண்டை வெண்பூக் குழைய
வான் எனப் பூத்த பானாள் கங்குல்
மறித் துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன்
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ 5
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்
ஐது படு கொள்ளி அங்கை காயக்
குறுநரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
சிறுகண் பன்றிப் பெரு நிரை கடிய
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்  10
கருங்கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
வன்புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
ஆர்வம் சிறந்த சாயல்
இரும் பல் கூந்தல் திருந்து இழை ஊரே.

95
பாடியவர்: ஓரோடோகத்து கந்தரத்தனார், 
திணை:  பாலைத் திணை, 
தலைவி தோழியிடம் சொன்னது

பைப்பயப் பசந்தன்று நுதலும் சாஅய்
ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும்
பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்
உயிர்கொடு கழியின் அல்லதை நினையின்
எவனோ வாழி தோழி பொரி கால்  5
பொகுட்டு அரை இருப்பைக் குவி குலைக் கழன்ற
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க
ஈனல் எண்கின் இருங்கிளை கவரும்
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்  10
கௌவை மேவலர் ஆகி இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்ல என் மகட்கு எனப் பரைஇ
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர் யாம் என் இதற்படலே?  15

96
பாடியவர்: மருதம் பாடிய இளங்கடுங்கோ, 
திணை:  மருதத் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

நறவு உண் மண்டை நுடக்கலின் இறவுக் கலித்துப்
பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அரவாய் அன்ன அம் முள் நெடுங்கொடி
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி  5
அசைவரல் வாடை தூக்கலின் ஊது உலை
விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும்
கழனி அம் படப்பைக் காஞ்சி ஊர
ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
கொண்டனை என்ப ஓர் குறுமகள் அதுவே  10
செம்பொன் சிலம்பின் செறிந்த குறங்கின்
அம் கலுழ் மாமை அஃதை தந்தை
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய  15
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை
களிறு கவர் கம்பலை போல
அலர் ஆகின்றது பலர் வாய்ப்பட்டே.