அகநானூறு

அகநானூறு

நித்திலக்கோவை


313
பாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, 
திணை: பாலைத் திணை
தோழி தலைவியிடம் சொன்னது

இனிப் பிறிதுண்டோ அஞ்சல் ஓம்பென
அணிக் கவின் வளர முயங்கி நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும்
குளித்துப் பொரு கயலிற் கண்பனி மல்க
ஐயவாக வெய்ய உயிரா  5
இரவும் எல்லையும் படரட வருந்தி
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்பத்
தம்மலதில்லா நம்மிவண் ஒழியப்
பொருள் புரிந்து அகன்றனராயினும் அருள் புரிந்து
வருவர் வாழி தோழி பெரிய  10
நிதியஞ்சொரிந்த நீவி போலப்
பாம்பூன் தேம்பும் வறங்கூர் கடத்திடை
நீங்கா வம்பலர் கணையிடத் தொலைந்தோர்
வசிபடு புண்ணின் குருதி மாந்தி
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல  15
இல்வழிப் படூஉங் காக்கைக்
கல்லுயர் பிறங்கல் மலை இறந்தோரே.

314
பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார், 
திணை: முல்லைத் திணை
தோழி தலைவனிடம் சொன்னது

நீலத்து அன்ன நீர் பொதி கருவின்
மாவிசும்பு அதிர முழங்கி ஆலியின்
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப
இனந்தேர் உழவர் இன் குரல் இயம்ப
மறியுடை மடப்பிணை தழீஇப் புறவின்  5
திரிமருப்பு இரலை பைம்பயிர் உகள
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவிக்
கல்லெனக் கறங்கு மணி இயம்ப வல்லோன்
வாய்ச் செல வணக்கிய தாப் பரி நெடுந்தேர்  10
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்பத் தீந்தொடைப்
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப
இந்நிலை வாரார் ஆயின் தம் நிலை
எவன் கொல் பாண உரைத்திசின் சிறிதெனக்
கடவுட் கற்பின் மடவோள் கூறச்  15
செய் வினை அழிந்த மையல் நெஞ்சில்
துனி கொள் பருவரல் தீர வந்தோய்
இனிது செய்தனையால் வாழ்க நின் கண்ணி
வேலி சுற்றிய வால் வீ முல்லைப்
பெருந் தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின்  20
இன்னகை இளையோள் கவவ
மன்னுக பெரும நின் மலர்ந்த மார்பே.

315
பாடியவர்: குடவாயில் கீரத்தனார்,
திணை: பாலைத் திணை
மகட் போகிய தாய் சொன்னது

கூழையும் குறு நெறிக் கொண்டன முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின
பெண் துணை சான்றனள் இவளெனப் பன் மாண்
கண் துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று மன்னே நெஞ்சம் பெயர்த்தும்  5
அறியாமையிற் செறியேன் யானே
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
அருங்கடி வியன் நகர்ச் சிலம்பும் கழியாள்
சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி
புறவுக் குயின்று உண்ட புன் கால் நெல்லிக்  10
கோடையுதிர்த்த குவி கண் பசுங்காய்
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப
வறுநிலத்து உதிரும் அத்தம் கதுமெனக்
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகிச்
சேக்குவள் கொல்லோ தானே தேக்கின்  15
அகல் இலை குவித்த புதல் போல் குரம்பை
ஊன் புழுக்கு அயரும் முன்றில்
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே.

316
பாடியவர்: ஓரம்போகியார், 
திணை: மருதத் திணை
தோழி தலைவியிடம் சொன்னது

துறை மீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ந் தண் எருமைச் சுவல்படு முது போத்துத்
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து  5
குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்
தேர்தர வந்த தெரி இழை நெகிழ்தோள்
ஊர் கொள்கல்லா மகளிர் தரத்தரப்
பரத்தைமை தாங்கலோ இலனென வறிது நீ  10
புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை
அது புலந்து உறைதல் வல்லியோரே
செய்யோள் நீங்கச் சில் பதங்கொழித்துத்
தாம் அட்டு உண்டு தமியர் ஆகித்
தேமொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப  15
வைகுநர் ஆகுதல் அறிந்தும்
அறியார் அம்மவஃது உடலுமோரே.

317
பாடியவர்: வடமோதங்கிழார், 
திணை: பாலைத் திணை
தோழி தலைவியிடம் சொன்னது

மாக விசும்பின் மழை தொழில் உலந்தெனப்
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பிப்
புகை நிற உருவின் அற்சிரம் நீங்கக்
குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்  5
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்துடன்
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்பப்
பொன் செய் கன்னம் பொலிய வெள்ளி
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல
அரவ வண்டினம் ஊது தொறுங்குரவத்து  10
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்பத்
துவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி
உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும்
மான் ஏமுற்ற காமர் வேனில்
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக்  15
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம் என்ற பருவம் ஆண்டை
இல்லை கொல்லென மெல்ல நோக்கி
நினைந்தனம் இருந்தனமாக நயந் தாங்கு
உள்ளிய மருங்கின் உள்ளம் போல  20
வந்து நின்றனரே காதலர் நம் துறந்து
என் உழியது கொல் தானே பன்னாள்
அன்னையும் அறிவுற அணங்கி
நன்னுதல் பாஅய பசலை நோயே.

318
பாடியவர்: கபிலர், 
திணை: குறிஞ்சித் திணை, 
தலைவி தலைவனிடம் சொன்னது

கான மான் அதர் யானையும் வழங்கும்
வான மீ மிசை உருமு நனி உரறும்
அரவும் புலியும் அஞ்சுதகவுடைய
இரவுச் சிறு நெறி தமியை வருதி
வரை இழி யருவிப் பாட்டொடு பிரசம்  5
முழவுச் சேர் நரம்பின் இம்மென இமிரும்
பழ விறல் நனந்தலைப் பயமலை நாட
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ
இன்று தலையாக வாரல் வரினே
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய  10
எம் கண்டு பெயரும் காலை யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே.  15

319
பாடியவர்: எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், 
திணை: பாலைத் திணை
தோழி தலைவனிடம் சொன்னது

மணிவாய்க் காக்கை மா நிறப் பெருங்கிளை
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறிக்
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
படுபிணங்கவரும் பாழ் படு நனந்தலை  5
அணங்கென உருத்த நோக்கின் ஐயென
நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமைப்
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய
நல் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலைச்
சுரும்பு ஆர் கூந்தல் பெருந்தோள் இவள் வயின்  10
பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள்
எய்துக மாதோ நுமக்கே கொய் குழைத்
தளிர் ஏர் அன்ன தாங்கரு மதுகையள்
மெல் இயள் இளையள் நனி பேர் அன்பினள்
செல்வேம் என்னும் நும் எதிர்  15
ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே.

320
பாடியவர்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், 
திணை: நெய்தற் திணை
தோழி தலைவனிடம் சொன்னது

ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇத்
திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர்
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும்
கானல் அம் சிறுகுடிப் பெரு நீர்ச் சேர்ப்ப  5
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்
அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும்
நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம்
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும்
தடவு நிலைப் புன்னைத் தாது அணி பெருந்துறை  10
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
வண்டல் பாவை சிதைய வந்து நீ
தோள் புதிது உண்ட ஞான்றைச்
சூளும் பொய்யோ கடல் அறிகரியே?

321
பாடியவர்: கயமனார், 
திணை: பாலைத் திணை 
மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது

பசித்த யானைப் பழங்கண் அன்ன
வறுஞ்சுனை முகந்த கோடைத் தெள் விளி
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்பக்
கதிர்க் கால் அம்பிணை உணீஇய புகல் ஏறு
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது  5
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப்
படுமணி இன நிரை உணீஇய கோவலர்
விடு நிலம் உடைத்த கலுழ்கண் கூவல்
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும்
புன்தலை மன்றத்து அம் குடிச் சீறூர்  10
துணையொடு துச்சில் இருக்கும் கொல்லோ
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு
எல்லி முன்னுறச் செல்லும் கொல்லோ
எவ்வினை செயுங்கொல் நோகோ யானே
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ  15
யாய் அறிவுறுதல் அஞ்சி
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே.

322
பாடியவர்: பரணர், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

வயங்கு வெயில் ஞெமியப் பாஅய் மின்னு வசிபு
மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல்
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப
இறு வரை வீழ்நரின் நடுங்கித் தெறுவரப்
பாம்பு எறி கோலின் தமியை வைகி  5
தேம்புதி கொல்லோ நெஞ்சே உருமிசைக்
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்
ஒளிறு வேல் தானைக் கடுந்தேர்த் திதியன்
வருபுனல் இழிதரு மரம் பயில் இறும்பில்
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றிக்  10
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல்
அறையுறு தீந்தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ்சிமைப்
புகல் அரும் பொதியில் போலப்
பெறல் அருங்குரையள் எம் அணங்கியோளே.  15

323
பாடியவர்: புறநாட்டுப் பெருங்கொற்றனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

இம்மென் பேர் அலர் இவ்வூர் நம்வயின்
செய்வோர் ஏச் சொல் வாடக் காதலர்
வருவர் என்பது வாய்வதாக
ஐய செய்ய மதனில சிறிய நின்
அடி நிலன் உறுதல் அஞ்சிப் பையத்  5
தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலிக்
காணிய வம்மோ கற்பு மேம்படுவி
பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து
யானைச் செல் இனம் கடுப்ப வானத்து
வயங்கு கதிர் மழுங்கப் பாஅய்ப் பாம்பின்  10
பை பட இடிக்கும் கடுங்குரல் ஏற்றொடு
ஆலி அழி துளி தலைஇக்
கால் வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே.

324
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார், 
திணை: முல்லைத் திணை
வெளியூர் சென்று வீடு நோக்கி வரும் தலைவனுடன் தேரில் இருந்தவர்கள் சொன்னது

விருந்தும் பெறுகுநள் போலும் திருந்திழைத்
தட மென் பணைத்தோள் மடமொழி அரிவை
தளிரியல் கிள்ளை இனிதின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன
வார் பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவில்  5
பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும்
துளிபடு மொக்குள் துள்ளுவன சாலத்
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய
வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய்ச்
சிரல் சிறகு ஏய்ப்ப அறல் கண் வரித்த  10
வண்டு உண் நறுவீ  துமித்த நேமி
தண்ணில மருங்கில் போழ்ந் வழியுள்
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுகச்
செல்லும் நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே.  15