அகநானூறு

அகநானூறு

மணிமிடை பவளம்


205
பாடியவர்: நக்கீரர், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது 

உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின்
செயிர்தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போலத்
தையல் நின் வயின் பிரியலம் யாம் எனப்
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி
துணிவு இல் கொள்கையர் ஆகி இனியே  5
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர
நாம் அழத் துறந்தனர் ஆயினும் தாமே
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல்லிசை
வளங்கெழு கோசர் விளங்கு படை நூறி
நிலங்கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி  10
பூ விரி நெடுங்கழி நாப்பண் பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
செழு நகர் நல் விருந்து அயர்மார் ஏமுற
விழு நிதி எளிதினின் எய்துக தில்ல
மழைகால் அற்சிரத்து மால் இருள் நீக்கி  15
நீடு அமை நிவந்த நிழல்படு சிலம்பில்
கடாஅ யானைக் கவுள் மருங்கு உதிர
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி
புலி உரி வரி அதள் கடுப்பக் கலி சிறந்து
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர  20
மேக்கு எழு பெருஞ்சினை ஏறிக் கணக்கலை
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக்
கல் பிறங்கு ஆரிடை விலங்கிய
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே.

206
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: மருதத் திணை
தலைவி விறலிக்கு வாயில் மறுத்தது

என்னெனப் படுங்கொல் தோழி நல் மகிழ்ப்
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை
மயிர்க் கவின் கொண்ட மாத்தோல் இரும் புறம்
சிறு தொழில் மகாஅர் ஏறிச் சேணோர்க்குத்  5
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்
மாரி ஈங்கை மாந்தளிர் அன்ன
அம் மா மேனி ஆய் இழை மகளிர்
ஆரந்தாங்கிய அலர் முலை ஆகத்து
ஆராக் காதலொடு தாரிடை குழைய  10
முழவு முகம் புலரா விழவுடை வியன் நகர்
வதுவை மேவலன் ஆகலின் அது புலந்து
அடு போர் வேளிர் வீரை முன் துறை
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை
பெரும் பெயற்கு உருகியாஅங்குத்  15
திருந்து இழை நெகிழ்ந்தன தட மென் தோளே.

207
பாடியவர்: மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார், 
திணை: பாலைத் திணை 
மகட்போக்கிய தாய் அல்லது செவிலித்தாய் சொன்னது

அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் உய்ம்மார் புள் ஓர்த்துப்
படை அமைத்து எழுந்த பெருஞ்செய் ஆடவர்
நிரைப் பரப் பொறைய நரைப் புற கழுதைக்  5
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்
வெஞ்சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள
வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல்
பிணர் அழி பெருங்கை புரண்ட கூவல்  10
தெண் கண் உவரிக் குறைக்குட முகவை
அறன் இலாளன் தோண்ட வெய்து உயிர்த்துப்
பிறை நுதல் வியர்ப்ப உண்டனள் கொல்லோ
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக்
கூழை உளர்ந்து மொழிமை கூறவும்  15
மறுத்த சொல்லள் ஆகி
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே.

208
பாடியவர்: பரணர், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

யாம இரவின் நெடுங்கடை நின்று
தே முதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண் கோல் அகவுநர் வேண்டின் வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்  5
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தெனப் புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று  10
ஒண் கதிர் தெறாமை சிறகு அரில் கோலி
நிழல் செய்து உழறல் காணேன் யான் எனப்
படுகளம் காண்டல் செல்லான் சினஞ்சிறந்து
உருவினை நன்னன் அருளான் கரப்பப்
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர்  15
குரூஉப்பூம் பைந்தார் அருக்கிய பூசல்
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந்தானை
அகுதை கிளை தந்தாங்கு மிகு பெயல்
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி  20
நல்கினள் வாழியர் வந்தே ஓரி
பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லிக்
கார் மலர் கடுப்ப நாறும்
ஏர் நுண் ஓதி மாஅயோளே.

209
பாடியவர்: கல்லாடனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

தோளும் தொல்கவின் தொலைந்தன நாளும்
அன்னையும் அருந்துயர் உற்றனள் அலரே
பொன் அணி நெடுந்தேர்த் தென்னர் கோமான்
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்
நேரா எழுவர் அடிப்படக் கடந்த  5
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என
ஆழல் வாழி தோழி அவரே
மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து  10
உள்ளார் ஆதலோ அரிதே செவ்வேல்
முள்ளூர் மன்னன் கழல் தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி  15
நிலைபெறு கடவுள் ஆக்கிய
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே.

210
பாடியவர்: உலோச்சனார், 
திணை: நெய்தற் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

குறி இறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர்
எறி உளி பொருத ஏமுறு பெருமீன்
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட
விசும்பு அணி வில்லின் போகி பசும் பிசிர்த்
திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து  5
நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன்
பானாள் இரவில் நம் பணைத்தோள் உள்ளி
தான் இவண் வந்த காலை நம் ஊர்க்
கானலம் பெருந்துறைக் கவின் பாராட்டி
ஆனாது புகழ்ந்திசினோனே இனித் தன்  10
சாயல் மார்பின் பாயல் மாற்றிக்
கைதை அம் படுசினைக் கடும் தேர் விலங்கச்
செலவு அரிது என்னும் என்பது
பல கேட்டனமால் தோழி நாமே.

211
பாடியவர்: மாமூலனார்,
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

கேளாய் எல்ல தோழி வாலிய
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம்
பறை கண்டன்ன பாவடி நோன் தாள்
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும்
தண் மழை ஆலியின் தாஅய் உழவர்  5
வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர்
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை
பிடி படு பூசலின் எய்தாது ஒழியக்  10
கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி
நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்
மத்தி நாட்டிய கல் கெழுப் பனித் துறை 15
நீர் ஒலித்தன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய அழப் பிரிந்தோரே.

212
பாடியவர்: பரணர், 
திணை: குறிஞ்சித் திணை
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

தா இல் நன்பொன் தைஇய பாவை
விண் தவழ் இளவெயிற் கொண்டு நின்றன்ன
மிகு கவின் எய்திய தொகு குரல் ஐம்பால்
கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற
முளை ஓரன்ன மின் எயிற்றுத் துவர் வாய்  5
நயவன் தைவரும் செவ்வழி நல்யாழ்
இசை ஓர்த்தன்ன இன் தீங்கிளவி
அணங்கு சால் அரிவையை நசைஇப் பெருங்களிற்று
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்
பெறல் அருங்குரையள் என்னாய் வைகலும் 10
இன்னா அருஞ்சுரம் நீந்தி நீயே
என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை  15
மட்டு அவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன்
பொரு முரண் பெறாஅது விலங்கு சினஞ்சிறந்து
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி
ஓங்கு திரைப் பௌவம் நீங்க ஓட்டிய
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்  20
கூர் மதன் அழியரோ நெஞ்சே ஆனாது
எளியள் அல்லோள் கருதி
விளியா எவ்வம் தலைத்தந்தோயே.

213
பாடியவர்: தாயங்கண்ணனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

வினை நவில் யானை விறல் போர்த் தொண்டையர்
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங்கோட்டு
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்க்
கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி  5
இகல் முனைத் தரீஇய ஏருடைப் பெரு நிரை
நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும்
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
அழல் அவிர் அருஞ்சுரம் நெடிய என்னாது  10
அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செலப்
பல் கதிர் வாங்கிய படுசுடர் அமையத்துப்
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து
எரி மருள் கதிர திருமணி இமைக்கும்
வெல் போர் வானவன் கொல்லிக் குடவரை  15
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறைப் பணைத்தோள்
பெருங்கவின் சிதைய நீங்கி ஆன்றோர்
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்
சென்று தாம் நீடலோ இலரே என்றும்
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக்கை  20
வலம்படு வென்றி வாய்வாள் சோழர்
இலங்கு நீர்க் காவிரி இழி புனல் வரித்த
அறலென நெறிந்த கூந்தல்
உறலின் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.

214
பாடியவர்: வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய்ப்
பகலுடன் கரந்த பல் கதிர் வானம்
இருங்களிற்று இன நிரை குளிர்ப்ப வீசிப்
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்திலை  5
விடு கதிர் நெடுவேல் இமைக்கும் பாசறை
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே
அமரும் நம் வயினதுவே நமர் என
நம்மறிவு தெளிந்த பொம்மல் ஓதி
யாங்கு ஆகுவள் கொல் தானே ஓங்கு விடைப்  10
படு சுவல் கொண்ட பகுவாய்த் தெள் மணி
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளஇப்
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப
ஆருயிர் அணங்கும் தெள் இசை
மாரி மாலையும் தமியள் கேட்டே?  15

215
பாடியவர்: இறங்குகுடிக் குன்ற நாடன், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

விலங்கு இருஞ்சிமையக் குன்றத்து உம்பர்
வேறு பன் மொழிய தேஎம் முன்னி
வினை நசைஇப் பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு
புனை மாண் எஃகம் வலவயின் ஏந்தி
செலல் மாண்பு உற்ற நும் வயின் வல்லே  5
வலன் ஆகு என்றலும் நன்று மன் தில்ல
கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த
கை விரல் கவ்வும் கல்லாக் காட்சிக்
கொடு மரம் பிடித்த கோடா வன்கண்
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்  10
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கைக்
கூர் நுதிச் செவ்வாய் எருவைச் சேவல்
படுபிணப் பைந்தலை தொடுவன குழீஇ
மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு
வல்வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண்  15
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே.

216
பாடியவர்: ஐயூர் முடவனார், 
திணை: மருதத் திணை 
பரத்தை தன் தோழியிடம் சொன்னது

நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள்
தாள் புனல் அடைகரைப்படுத்த வராஅல்
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப்  5
பெட்டாங்கு மொழிப என்ப அவ்வலர்
பட்டனம் ஆயின் இனியெவன் ஆகியர்
கடலாடு மகளிர் கொய்த ஞாழலும்
கழனி உழவர் குற்ற குவளையும்
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு  10
பல் இளம் கோசர் கண்ணி அயரும்
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
பெருங்களிற்று எவ்வம் போல  15
வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே.