அகநானூறு

அகநானூறு

மணிமிடை பவளம்


217
பாடியவர்: கழார்க்கீரன் எயிற்றியார், 
திணை: பாலைத் திணை
தலைவி தோழியிடம் சொன்னது

பெய்து புலம் திறந்த பொங்கல் வெண்மழை
எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டன்ன
துவலை தூவல் கழிய அகல் வயல்
நீடு கழைக் கரும்பின் கணைக்கால் வான் பூக்
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர  5
பாசிலை பொதுளிய புதல் தொறும் பகன்றை
நீல் உண் பச்சை நிற மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலரக்
கோழ் இலை அவரைக் கொழு முகை அவிழ
ஊழுறு தோன்றி ஒண்பூத் தளை விட  10
புலம் தொறும் குருகினம் நரலக் கல்லென
அகன் துறை மகளிர் அணி துறந்து நடுங்க
அற்சிரம் வந்தன்று அமைந்தன்று இதுவென
எப்பொருள் பெறினும் பிரியன்மினோ எனச்
செப்புவல் வாழியோ துணையுடையீர்க்கே  15
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த
பாழ்படு மேனி நோக்கி நோய் பொர
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு
எயிறு தீப் பிறப்பத் திருகி
நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே.  20

218
பாடியவர்: கபிலர், 
திணை: குறிஞ்சித் திணை
தோழி தலைவனிடம் சொன்னது

கிளை பாராட்டும் கடு நடை வயக்களிறு
முளை தருபு ஊட்டி வேண்டு குளகு அருத்த
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி
பரூஉ உறைப் பல் துளி சிதறி வான் நவின்று
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்துப்  5
புயல் ஏறு உறைஇய வியல் இருள் நடுநாள்
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல்
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை
படாஅ வாகும் எம் கண் என நீயும்
இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி  10
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும்
பெருமலை விடரகம் வர அரிது என்னாய்
வர எளிதாக எண்ணுதி அதனால்
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்
தண்ணிது கமழும் நின் மார்பு ஒருநாள்  15
அடைய முயங்கேம் ஆயின் யாமும்
விறல் இழை நெகிழச் சாஅய்தும் அதுவே
அன்னை அறியினும் அறிக அலர் வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு  20
ஒண் பூ வேங்கை கமழும்
தண் பெருஞ்சாரல் பகல் வந்தீமே.

219
பாடியவர்: கயமனார், 
திணை: பாலைத் திணை 
மகட்போக்கிய தாய் சொன்னது

சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்
வாராயோ என்று ஏத்திப் பேர் இலைப்
பகன்றை வான் மலர் பனி நிறைந்தது போல்
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி  5
என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால்
நுந்தை பாடும் உண் என்று ஊட்டிப்
பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்து யான்
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள்
அறனிலாளனொடு இறந்தனள் இனி என  10
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச்
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்
பொரி அரை விளவின் புன்புற விளை புழல்
அழல் எறி கோடை தூக்கலின் கோவலர்  15
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை
மடத் தகை மெலியச் சாஅய்
நடக்கும் கொல் என நோவல் யானே.

220
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: நெய்தற் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

ஊருஞ்சேரியும் உடன் இயைந்து அலர் எழத்
தேரொடு மறுகியும் பணி மொழி பயிற்றியும்
கெடாஅத்தீயின் உருகெழு செல்லூர்க்
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய
மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்  5
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல யாவரும்
காணலாகா மாண் எழில் ஆகம்
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே  10
நெடும் புற நிலையினை வருந்தினை ஆயின்
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும்
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்
நோலா இரும்புள் போல நெஞ்சு அமர்ந்து
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்  15
இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும்
நெடுங்கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து
யாணர்த் தண் பணை உறும் எனக் கானல்
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத்தோள் 20
நல் எழில் சிதையா ஏமம்
சொல் இனித் தெய்ய யாம் தெளியுமாறே.

221
பாடியவர்: கயமனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

நனை விளை நறவின் தேறல் மாந்திப்
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇப்
பொம்மல் ஓதி எம் மகள் மணன் என
வதுவை அயர்ந்தனர் நமரே அதனால்
புதுவது புனைந்த சேயிலை வெள் வேல்  5
மதி உடம்பட்ட மை அணல் காளை
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்துத்
தேம் பாய் மெல்லிணர் தளிரொடு கொண்டு நின்
தண் நறு முச்சி புனைய அவனொடு
கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை  10
களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை
காய் சினம் சிறந்து குழுமலின் வெரீஇ
இரும் பிடி இரியும் சோலை
அருஞ்சுரம் சேறல் அயர்ந்தனென் யானே.

222
பாடியவர்: பரணர், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

வானுற நிவந்த நீல் நிறப் பெருமலைக்
கான நாடன் உறீஇய நோய்க்கு உன்
மேனி ஆய் நலம் தொலைதலின் மொழிவென்
முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண்
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்  5
ஈட்டெழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத்
தாழ் இருங்கதுப்பின் காவிரி வவ்வலின்
மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதி மந்தி காதலற் காட்டிப்  10
படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்
சென்மோ வாழி தோழி பல் நாள்
உரவுரும் ஏறொடு மயங்கி
இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந்தண் ஆறே.  15

223
பாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

பிரிதல் வல்லியர் இது நத்துறந்தோர்
மறந்தும் அமைகுவர் கொல் என்று எண்ணி
ஆழல் வாழி தோழி கேழல்
வளை மருப்பு உறழும் உளைநெடும் பெருங்காய்
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கல்  5
காய் சினக் கடு வளி எடுத்தலின் வெங்காட்டு
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும்
நிழலில் ஓமை நீரில் நீளிடை
இறந்தனர் ஆயினும் காதலர் நம்வயின்
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ்  10
அம் பணை நெடுந்தோள் தங்கித் தும்பி
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால்
நுண்கேழ் அடங்க வாரிப் பையுள் கெட
நன் முகை அதிரல் போதொடு குவளைத்
தண் நறுங்கமழ் தொடை வேய்ந்த நின்  15
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே?

224
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

செல்க பாக எல்லின்று பொழுதே
வல்லோன் அடங்கு கயிறு அமைப்பக் கொல்லன்
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிராக்
கொடு நுகத்து யாத்த தலைய கடு நடைக்
கால் கடுப்பு அன்ன கடுஞ்செலல் இவுளி  5
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
சிலம்பி நூலின் நுணங்குவன பாறிச்
சாந்து புலர் அகலம் மறுப்பக் காண்தகப்
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில்  10
தெறி நடை மரைக் கணம் இரிய மனையோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த
திரிமரக் குரலிசைப் கடுப்ப வரி மணல்
அலங்கு கதிர் திகிரி ஆழி போழ
வரும் கொல் தோழி நம் இன் உயிர்த் துணை எனச்  15
சில் கோல் எல்வளை ஒடுக்கிப் பல் கால்
அருங்கடி வியன் நகர் நோக்கி
வருந்துமால் அளியள் திருந்திழை தானே.

225
பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

அன்பும் மடனும் சாயலும் இயல்பும்
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி
இன்றே இவணம் ஆகி நாளைப்
புதல் இவர் ஆடு அமைத் தும்பி குயின்ற  5
அகலா அம் துளை கோடை முகத்தலின்
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல்
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ்சுரத்து
யாத்த தூணித் தலை திறந்தவை போல்  10
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர்
கழல் துளை முத்தின் செந்நிலத்து உதிர
மழை துளி மறந்த அங்குடிச் சீறூர்ச்
சேக்குவம் கொல்லோ நெஞ்சே பூப் புனை
புயல் என ஒலிவரும் தாழ் இருங்கூந்தல்  15
செறி தொடி முன் கை நம் காதலி
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?

226
பாடியவர்: பரணர், 
திணை: மருதத் திணை 
தோழி தலைவனிடம்சொன்னது

உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம்
நாணிலை மன்ற யாணர் ஊர
அகலுள் ஆங்கண் அம் பகை மடிவைக்
குறுந்தொடி மகளிர் குரூஉப் புனல் முனையின்
பழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக்  5
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும்
வல் வில் எறுழ்த் தோள் பரதவர் கோமான்
பல் வேல் மத்தி கழாஅர் முன் துறை
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய்
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி  10
தொடி அணி முன் கை நீ வெய்யோளொடு
முன் நாள் ஆடிய கவ்வை இந்நாள்
வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி  15
போர் அடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.

227
பாடியவர்: நக்கீரர், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது

நுதல் பசந்தன்றே தோள் சாயினவே
திதலை அல்குல் வரியும் வாடின
என் ஆகுவள் கொல் இவள் எனப் பல் மாண்
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி
இனையல் வாழி தோழி நனை கவுள்  5
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு
முன்னிலை பொறாஅது முரணிப் பொன் இணர்ப்
புலிக் கேழ் வேங்கைப் பூஞ்சினை புலம்ப
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல்
செந்நிலப் படு நீறு ஆடிச் செரு மலைந்து  10
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பல இறந்து அகன்றனர் ஆயினும் நிலைஇ
நோய் இலராக நம் காதலர் வாய்வாள்
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை  15
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல்லிசைப்
பிடிமிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப்பட்டினத்து  20
எல் உமிழ் ஆவணத்து அன்ன
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே.

228
பாடியவர்: அண்டர் மகன் குறவழுதியார், 
திணை: குறிஞ்சித் திணை
தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

பிரசப் பல் கிளை ஆர்ப்பக் கல்லென
வரை இழி அருவி ஆரம் தீண்டித்
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில்
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக்
கல் முகை நெடுஞ்சுனை நம்மொடு ஆடிப்  5
பகலே இனிதுடன் கழிப்பி இரவே
செல்வர் ஆயினும் நன்று மன் தில்ல
வான் கண் விரிந்த பகல் மருள் நிலவின்
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப்  10
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின் கய வாய்
இரும் பிடி இரியும் சோலைப்
பெருங்கல் யாணர்த் தம் சிறுகுடியானே.