ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

குறிஞ்சித்திணை


251.
குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி
நுன்பல் அழிதுளி பொழியும் நாட
நெடுவரைப் படப்பை நும்மூர்க்
கடுவரல் அருவி காணினும் அழுமே.

252.
குன்றக் குறவன் புல்வேய்க் குரம்பை
மன்றாடு இளமழை மறைக்கும் நாடன்
புரையோன் வாழி தோழி விரைபெயல்
அரும்பனி அளைஇய கூதிர்ப்
பெருந்தண் வாடையின் முந்துவந் தனனே.

253.
குன்றக் குறவன் சார்ந்த நறும்புகை
தேஙகமழ் சிலம்பின் வரையகம் கமழும்
கானக நாடன் வரையின் 
மன்றலும் உடையள்கொல் தோழி யாயே.

254.
குன்றக் குறவன் ஆரம் அறுத்தென
நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும்
வண்ட்மிர் சுடர்நுதல் குறுமகள்
கொண்டனர் செல்வர்தம் குன்றுகெழு நாட்டே.

255.
குன்றக் குறவன் காதல் மடமகள்
வரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள்
ஐயள் அரும்பிய முலையள்
செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே.

256.
குன்றக் குறவன் காதல் மடமகள்
வண்படு கூந்தல் தந்தழைக் கொடிச்சி
வளையள் முளைவாள் எயிற்றள்
இளையள் ஆயினும் ஆரணங் கினனே.

257.
குன்றக் குறவன் கடவுட் பேணி
இரந்தனன் பெற்ற வெள்வளைக் குறுமகள்
ஆயரி நெடுங்கள் கலிழச்
சேயதால் தெய்யநீ பிரியும் நாடே.

258.
குன்றக் குறுவன் காதல் மடமகள்
அணிமயில் அன்ன அசைநடைக் கொடிச்சியைப்
பெருவரை நாடன் வரையும் ஆயின்
கொடுத்தனெம் ஆயினோம் நன்றே
இன்னும் ஆனாது நன்னுதல் துயிரே.

259.
குன்றக் குறவன் காதல் மடமகள்
மன்ற வேங்கை மலர்சில கொண்டு
மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தித்
தேம்பலிச் செய்த ஈர்நறுங் கையள்
மலர்ந்த காந்தள் நாறிக்
கவிழ்ந்த கண்ணள்எம் அணங்கி யோளே.

260.
குன்றக் குறவன் காதல் மடமகள்
மெந்தோள் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல
பைம்புறப் பைங்கிளி ஒப்பலர்
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே.