ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

குறிஞ்சித்திணை


291.
மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்
துறுகல் அடுக்கத்து அதுவே பணைத்தோள்
ஆய்தழை நுடங்கும் அல்குல்
காதலி உறையும் நனிநல் லூரே.

292.
மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிரத்
தண்மழை தழீஇய மாமலை நாட 
நின்னினும் சிறந்தனள் எமக்கே நீநயந்து
நன்மனை அருங்கடி அயர 
எம்நலம் சிறப்பயாம் இனிப்பெற் றோளே.

293.
சிலம்புகமழ் காந்தன் நறுங்குலை யன்ன
நலம்பெறு கையின்என் கண்புதைத் தோயே
பாயல் இந்துணை யாகிய பணைத்தோள்
தோகை மாட்சிய மடந்தை 
நீயலது உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே.

294.
எரிமருள் வேங்கை இருந்த தோகை
இழையணி மடந்தையின் தோன்றும் நாட
இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்
நன்மனை வதுவை அயர இவள்
பின்னருங் கூந்தல் மலர் அணிந் தோரே.

295.
வருவது கொல்லோ தனே வாராது
அவணுறை மேவலின் அமைவது கொல்லோ
புனவர் கொள்ளியின் புகல்வரும் மஞ்ஞை 
இருவி யிருந்த குருவி வருந்துறப் 
பந்தாடு மகளிரின் படர்தரும்
குன்றுகெழு நாடனொடு சென்றஎன் நெஞ்சே.

296.
கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல்
அடுக்கல் மஞ்ஞை கவரு நாட
நடுநாள் கங்குலும் வருதி
கடுமா தாக்கின் அறியேன் யானே.

297.
விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை
பூக்கொய் மகளிரின் தோன்றும் நாட
பிரியினும் பிரிவ தன்றே
நின்னொடு மேய மடந்தை நட்பே.

298.
மழைவரவு அறியா மஞ்ஞை ஆலும்
அடுக்கல் நல்லூர் அசைநடைக் கொடிச்சி
தான்எம் அருளாள் ஆயினும்
யாம்தன் உள்ளுபு மற்ந்தறி யேமே.

299.
குனற நாடன் குன்றத்துக் கவாஅன்
பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
அம்சில் ஓதி அசைநடைக் கொடிச்சி 
கண்போல் மலர்தலும் அரிதுஇவள்
தன்போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே.

300.
கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அம்சிறை விவரிக்கும் பெருங்கல் வெற்பன் 
வந்தனன் எதிர்ந்தனர் கொடையே
அம்தீம் கிளவி பொலிகநின் சிறப்பே.