ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

மருதத்திணை


31.
அம்ம வாழி தோழி மகிழ்நன்
கடனன்று என்னும் கொல்லோ
நம்மூர் முடமுதிர் மருதத்துப் பெருந்துறை
உடனாடு ஆயமோடு உற்ற சூளே.

32.
அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒருநாள் நம்மில் வந்ததற்கு எழுநாள்
அழுப என்பஅவன் பெண்டிர்
தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே.

33.
அம்ம வாழி தோழி மகிழ்நன்
மருதுயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறைப்
பெண்டிரோடு ஆடும் என்பதன்
தண்தார் அகலம் தலைத்தலைக் கொளவே.

34. 
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பொய்கைப் பூத்த புழற்கால் ஆம்பல்
தாதுஏர் வண்ணம் கொண்டன
ஏதி லாளற்குப் பசந்தஎன் கண்ணே.

35.
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால்
நிறத்தினும் நிழற்றுதல் மன்னே
இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே.

36.
அம்ம வாழி தோழி யூரன்
நம்மறந்து அமைகுவன் ஆயின் நாம்மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே
கயலெனக் கருதிய் உண்கண்
பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே.

37.
அம்ம வாழி தோழி மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பசந்துபனி மல்க
வல்லன் வல்லன் பொய்த்தல்
தேற்றான் உற்ற சூள்வாய்த் தல்லெ

38.
அம்ம வாழி தோழி மகிநன்
தன்சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்
தந்தளிர் வெளவும் மேனி
ஒள்தோடி முன்கை யாம்அழப் பிரிந்தே.

39.
அம்ம வாழி தோழி யூரன்
வெம்முலை யடைய முயங்கி நம்வயின்
திருந்திழைப் பணைத்தோள் ஞெகிழப்
பிரிந்தனன் ஆயினும் பிரியலன் மன்னே.

40.
அம்ம வாழி தோழி மகிநன்
ஒள்தொடி முன்கை யாம் அழப் பிரிந்துதன்
பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப
கெண்டை பாய்தர அவிழ்ந்த
வண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே.