ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

பாலைத்திணை


311.
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்
ஆரிடைச் செல்வோர் ஆறுநனி வெரூஉம்
காடுஇறந் தனரே காதலர்
நீடுவர் கொல்என நினையும்என் நெஞ்சே.

312.
அறஞ்சா லியரோ அறஞ்சா லியரே
வறனுண் டாயினும் அறஞ்சா லியரோ
வாள்வனப் புற்ற அருவிக்
கோள்வல் என்னையை மறிந்த குன்றே.

313.
தெறுவது அம்ம நும்மகள் விருப்பே
உறுதுயர் அவலமொடு உயிர்செலச் சாஅய்ப்
பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்க
நாடுஇடை விலங்கிய வைப்பின்
காடுஇறந் தனள்நம் காத லோனே

314.
அவிர்தொடி கொட்பக் கழுதுபுகவு அயரக்
கர்ங்கண் காக்கையொடு கழுகுவிசும்பு அகலச்
சிறுகண் யானை ஆள்வீழ்துத் திரித்ரும்
நீளிடை அருஞ்சுரம் என்பநம்
தோளிடை முனிநர் சென்ற ஆறே.

315.
பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கண்
பூசல் கேளார் சேயர் என்ப
விழைநெகிழ் செல்லல் உறீஇக்
கழைமுதிர் சோலைக் காடுஇறந் தோரே.

316.
பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்தத்
தேரகல் அல்குல் அவ்வரி வாட
இறந்தோர் மன்ற தாமே பிறங்குலைப்
புல்லரை ஓமை நீடிய
புலிவழங்கு அதர கானத் தானே.

317.
சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்
பைதற வெந்த பாலை வெங்காட்டு
அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்
சென்ர நெஞ்சம் நீடிய பொருளே.

318.
ஆய்நலம் பசப்ப அரும்படர் நலிய
வேய்மருள் பணைத்தோள் வில்லிலை நெகிழ
நசைநனி கொன்றோர் மன்ற இசைநிமிர்ந்து
ஓடெரி நடந்த வைப்பின்
கோடுயர் பிறங்கல் மலை இறந் தோரே.

319.
கண்பொர விளங்கிய கதிர்தெறு வைப்பின்
மண்புரை பெருகிய மரம்முளி கானம்
இறந்தன ரோநம் காதலர்
மறந்தன ரோதில் மறவா நம்மே.

320.
முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான்பூ
முழங்கல் அசைவளி எடுப்ப வானத்து
உருமுப்படு கனலின் இருநிலத்து உறைக்கும்
கவலை அருஞ்சுரம் போயினர்
தவலில் அருநோய் தலைதந் தோரே.