ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

மருதத்திணை


91.
நெறிமருப்பு எருமை நீலைரும் போத்து
வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும்
கழனியூரன் மகளிவள்
பழன வெதிரின் கொடிப்பிணை யலளே.

92.
கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்றுஆக்
காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்
நுந்தை நும்மூர் வருதும்
ஒண்தொடி மடந்தை நின்னையாம் பெறினே.

93.
எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தெனப்
பசுமோ ரோடமோடு ஆம்பல் ஒல்லா
செய்த இனைய மன்ற பல்பொழில்
தாதுண வெறுக்கைய ஆகி இவள்
போதுஅவிழ் முச்சி யூதும் வண்டே.

94.
மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை
மகளிர் அன்ன துணையோடு வதியும்
நிழல்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவே
கழனித் தாமரை மலரும்
கவின்பெறு சுடர்நூதல் தந்தை ஊரே.

95.
கருங்கோட்டு எருமை கயிறுபரிந்து அசைஇ
நெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆரும்
புனல்முற் றூரன் பகலும்
படர்மலி அருநோய் செய்தனன் எமக்கே.

96.
அணிநடை எருமை ஆடிய அள்ளல்
மணிநிற நெய்தல் ஆமபலொடு கலிக்கும்
கழனி ஊரன் மகளிவள்
பழன் ஊரன் பாயல்இன் துணையே.

97.
பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக்
கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்
பொய்கை ஊரன் மகளிவள்
பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியளே.

98.
தண்புணல் ஆடும் தடங்கோட்டு எருமை
திண்பிணி அம்பியின் தோன்றும் ஊர
ஒண்டொடி மடமகள் இவளினும்
நுந்தையும் யாயும் துடியரோ நின்னே.

99.
பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை
கழனி யெருமை கதிரொடு மயக்கும்
பூக்கஞல் ஊரன் மகளிவள்
நோய்க்குமருந் தாகிய பணைத்தோ ளோளே.

100.
புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை 
மணலாடு சிமையத்து எருமை கிளைக்கும்
யாணர் ஊரன் மகளிவள்
பாணர் நரம்பினும் இன்கிள வியளே.