ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

முல்லைத்திணை


411.
ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக்
கார்தொடங் கின்றால் காமர் புறவே
வீழ்தரு புதுப்புனல் ஆடுகம்
தாழிருங் கூந்தல் வம்மடி விரைந்தே.

412.
காயா கொன்றை நெய்தல் முல்லை
போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்
பூவணி கொண்டன்றால் புறவே
பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே.

413.
நின்னுதல் நாறும் நறுந்தண் புறவின்
நின்னே போல மஞ்ஞை யாலக் 
கார்தொடங் கின்றால் பொழுதே
பேரியல் அரிவை நாநயத்தகவே.

414.
புள்ளும் மாவும் புணர்ந்தினது உகளக்
கோட்டவும் கொடியவும் பூப்பல பழுனி
மெல்லியல் அரிவை கண்டிகு 
மல்லல் ஆகிய மணங் கமழ் புறவே.

415.
இதுவே மடந்தைநாம் மேவிய பொழுதே
உதுவே மடந்தைநாம் உள்ளிய புறவே
இனிதுடன் கழிக்கின் இளமை
இனிதால் அம்ம இனிஅவர்ப் புணர்வே.

416.
போதார் நறுந்துகள் கவினிப் புறவில் தாதார்ந்து 
களிச்சுரும்பு அரற்றும் காமர் புதலின்
மடப்பிடி தழீஇய மாவே
சுடர்த்தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே.

417.
கார்கலந் தன்றால் புறவே பலவுடன்
நேர்பரந் தனவால் புனமே ஏர்கலந்து
தாதார் பிரசம் மொய்ப்பப்
போதார் கூந்தல் முயங்கினள் எம்மே.

418.
வானம் பாடி வறங்களைந்து ஆனாது
அழிதுளி தலைஇய புறவின் காண்வர
வானர மகளா நீயே
மாண்முலை அடைய முயங்கி யோயே.

419.
உயிர்கலந்து ஒன்றிய செயிர்தீர் கேண்மைப் 
பிரிந்துறல் அறியா விருந்து கவவி
நம்போல் நயவரப் புணர்ந்தன
கண்டிகு மடவரல் புறவின் மாவே.

420.
பொன்னெனமலர்ந்த கொன்றை மணியெனத்
தேம்படு காயா மலர்ந்த தொன்றியொடு
நன்னலம் எய்தினை புறவே நின்னைக்
காணிய வருதும் யாமே
வாள்நுதல் அரிவையொடு ஆய்நலம் படர்ந்தே.