அகநானூறு

அகநானூறு

களிற்றியாணை நிரை


25
பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், 
திணை:  பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய்
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
தண் கயம் நண்ணிய பொழில் தொறும் காஞ்சிப்
பைந்தாது அணிந்த போது மலி எக்கர்
வதுவை நாற்றம் புதுவது கஞல  5
மா நனை கொழுதிய மணி நிற இருங்குயில்
படு நா விளியால் நடு நின்று அல்கலும்
உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ
இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
சினைப் பூங்கோங்கின் நுண் தாது பகர்நர்  10
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன
இகழுநர் இகழா இள நாள் அமையம்
செய்தோர் மன்ற குறி என நீ நின்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
வாராமையின் புலந்த நெஞ்சமொடு  15
நோவல் குறுமகள் நோயியர் என் உயிர் என
மெல்லிய இனிய கூறி வல்லே
வருவர் வாழி தோழி பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
பொதியில் செல்வன் பொலந்தேர்த் திதியன்  20
இன்னிசை இயத்தின் கறங்கும்
கல் மிசை அருவிய காடு இறந்தோரோ. 22

26
பாடியவர்: பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி, 
திணை:  மருதத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

கூன் முள் முள்ளிக் குவி குலைக் கழன்ற
மீன் முள்ளன்ன வெண் கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும்
அவ் வயல் தண்ணிய வளங் கேழ் ஊரனைப்
புலத்தல் கூடுமோ தோழி அல்கல்  5
பெருங்கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி
மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை என மயங்கி
யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று  10
இவை பாராட்டிய பருவமும் உளவே இனியே
புதல்வன் தடுத்த பாலொடு தடஇத்
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
நறுஞ்சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே  15
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ஆயிடைக்
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடைச்
செவிலி கை என் புதல்வனை நோக்கி
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என்  20
மகன் வயின் பெயர்தந்தேனே அதுகண்டு
யாமும் காதலம் அவற்கு எனச் சாஅய்
சிறுபுறம் கவையினனாக உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய்
மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்தே  25
நெஞ்சு அறை போகிய அறிவினேற்கே?  26

27
பாடியவர்: மதுரைக் கணக்காயனார், 
திணை:  பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

கொடு வரி இரும் புலி தயங்க நெடு வரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார் நாம் அழ
நின்றது இல் பொருட்பிணிச் சென்று இவண் தருமார்
செல்ப என்ப என்போய் நல்ல  5
மடவை மன்ற நீயே வட வயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெருந்துறை முத்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்  10
தகைப்பத் தங்கலர் ஆயினும் இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத்
தெள் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளைப்
பெருந்தகை சிதைத்தும் அமையா பருந்து பட
வேந்து அமர்க் கடந்த வென்றி நல் வேல்  15
குருதியொடு துயல்வந்தன்ன நின்
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே?  17

28
பாடியவர்: பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி, 
திணை:  குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது , தலைவன் கேட்கும்படியாக

மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி
கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே
அருவி ஆன்ற பைங்கால் தோறும்
இருவி தோன்றின பலவே நீயே  5
முருகு முரண் கொள்ளும் தேம்பாய் கண்ணி
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை யாழ நின்
பூக்கெழு தொடலை நுடங்க எழுந்து எழுந்து
கிள்ளைத் தெள் விளி இடை இடை பயிற்றி  10
ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் அன்னை
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் எனப்
பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின்
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே. 14

29
பாடியவர்: வெள்ளாடியனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவன் தலைவியிடம் சொன்னது

தொடங்கு வினை தவிரா அசைவில் நோன் தாள்
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின்
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வு இல் உள்ளம் தலைத்தலைச் சிறப்பச்
செய் வினைக்கு அகன்ற காலை எஃகு உற்று  5
இரு வேறு ஆகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறுவடி போலக் காண்தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம்
வாழலென் யான் எனத் தேற்றிப் பல் மாண்  10
தாழக் கூறிய தகை சால் நன் மொழி
மறந்தனிர் போறிர் எம் எனச் சிறந்த நின்
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனாப் புனை இழை கேள் இனி
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை  15
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி
அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங்கடத்திடை
எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு  20
நாணுத் தளை ஆக வைகி மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை
மடங் கெழு நெஞ்சம் நின் உழையதுவே!  24


30
பாடியவர்: முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன், 
திணை:  நெய்தற் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ் வலை
கடல் பாடு அழிய இன மீன் முகந்து
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
உப்பு ஒய் உமணர் அருந்துறை போக்கும் 5
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப்
பெருங்களம் தொகுத்த உழவர் போல
இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி
பாடு பல அமைத்துக் கொள்ளை சாற்றிக்  10
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறும் கானல் வந்து நும்
வண்ணம் எவனோ என்றனிர் செலினே?  15

31
பாடியவர்: மாமூலனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலங்கடை மடங்க தெறுதலின் ஞொள்கி
நிலம் புடை பெயர்வது அன்று கொல் இன்று என
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து  5
மேல் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்குக்
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட
நிண வரிக் குறைந்த நிறத்த அதர் தொறும்
கணவிர மாலை அடூஉக் கழிந்தன்ன
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்  10
கண் உமிழ் கழுகின் கானம் நீந்திச்
சென்றார் அன்பு இலர் தோழி வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே.  15


32
பாடியவர்: நல்வெள்ளியார், 
திணை:  குறிஞ்சித் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது

நெருநல் எல்லை ஏனல் தோன்றிச்
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து
புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள
இரவல் மாக்களின் பணி மொழி பயிற்றிச்
சிறு தினைப் படுகிளி கடீஇயர் பன் மாண்  5
குளிர் கொள் தட்டை மதன் இல புடையாச்
சூரர மகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ எம் அணங்கியோய் உண்கு எனச்
சிறுபுறம் கவையினனாக அதற்கொண்டு
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என்  10
உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல்
கடிய கூறி கை பிணி விடாஅ
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற
என் உரத் தகைமையின் பெயர்த்து பிறிது என் வயின்
சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து  15
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ
சாய் இறைப் பணைத்தோள் கிழமை தனக்கே
மாசு இன்றாதலும் அறியான் ஏசற்று
என் குறைப் புறனிலை முயலும்  20
அங்கணாளனை நகுகம் யாமே.   21

33
பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி
மனை மாண் கற்பின் வாணுதல் ஒழியக்
கவை முறி இழந்த செந்நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்  5
வளை வாய்ப் பேடை வருதிறம் பயிரும்
இளி தேர் தீங்குரல் இசைக்கும் அத்தம்
செலவு அருங்குரைய என்னாது சென்று அவண்
மலர் பாடு ஆன்ற மை எழில் மழைக்கண்
தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய்  10
வெம் பரல் அதர குன்று பல நீந்தி
யாமே எமியம் ஆக நீயே
ஒழியச் சூழ்ந்தனை ஆயின் முனாஅது
வெல்போர் வானவன் கொல்லி மீமிசை
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத்தோள்  15
வரி அணி அல்குல் வால் எயிற்றோள் வயின்
பிரியாய் ஆயின் நன்று மற்றில்ல
அன்று நம் அறியாய் ஆயினும் இன்று நம்
செய் வினை ஆற்றுற விலங்கின்
எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளோ?  20

34
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை:  முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்
தொடுதோல் கானவன் கவை பொறுத்தன்ன
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலைப் பதவின் செங்கோல் மென் குரல்  5
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தித்
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை
மெல்கிடு கவுள துஞ்சுபுறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுறச்
செல்க தேரே நல் வலம் பெறுந  10
பசை கொல் மெல் விரல் பெருந்தோள் புலைத்தி
துறை விட்டன்ன தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்
செந் தார்ப் பைங்கிளி முன் கை ஏந்தி
இன்று வரல் உரைமோ சென்றிசினோர் திறத்து என  15
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
மழலை இன் சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே.  18

35
பாடியவர்: அம்மூவனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவியின் தாய் சொன்னது

ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்
வான் தோய் இஞ்சி நன் நகர் புலம்பத்
தனி மணி இரட்டும் தாள் உடைக் கடிகை
நுழை நுதி நெடு வேல் குறும்படை மழவர்
முனை ஆத் தந்து முரம்பின் வீழ்த்த  5
வில் ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல் ஆண் பதுக்கைக் கடவுள் பேண்மார்
நடுகல் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
போக்கு அருங்கவலைய புலவு நாறு அருஞ்சுரம்  10
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து அணிந்து
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇத் தன்
மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல
துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன் துறை  15
பெண்ணையம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறி இருங்கதுப்பின் என் பேதைக்கு
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே.  18


36
பாடியவர்: மதுரை நக்கீரர், 
திணை:  மருதத் திணை 
தலைவி தலைவனிடம் சொன்னது

பகுவாய் வராஅல் பல் வரி இரும் போத்துக்
கொடுவாய் இரும்பின் கோள் இரை துற்றி
ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக்
கூம்பு விடு பன் மலர் சிதையப் பாய்ந்து எழுந்து
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கித்  5
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
கயிறு இடு கதச் சேப் போல மதம் மிக்கு
நாள் கயம் உழக்கும் பூக்கேழ் ஊர
வருபுனல் வையை வார் மணல் அகன் துறைத்
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்  10
நறும் பல் கூந்தல் குறுந்தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப அலரே
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்பச்
சேரல் செம்பியன் சினங் கெழு திதியன்  15
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி
நார் அரி நறவின் எருமையூரன்
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல் தேர்ப் பொருநன் என்று
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல்  20
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செலக்
கொன்று களம் வேட்ட ஞான்றை
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே.  23