அகநானூறு

அகநானூறு

நித்திலக்கோவை


325
பாடியவர்: மாமூலனார் 
திணை: பாலைத் திணை
தலைவி தோழியிடம் சொன்னது

அம்ம வாழி தோழி காதலர்
வெண்மணல் நிவந்த பொலம் கடை நெடுநகர்
நளி இருங்கங்குல் புணர் குறி வாய்த்த
களவும் கைம்மிக அலர்ந்தன்று அன்னையும்
உட்கொண்டு ஓவாள் காக்கும் பிற் பெரிது 5
இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி
ஆடு நடைப் பொலிந்த புகற்சியின் நாடு கோள்
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை
வள் உயிர் மாக்கிணை கண் அவிந்தாங்கு
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ்சுரம் 10
வெய்ய மன்ற நின் வை எயிறு உணீஇய
தண் மழை ஒரு நாள் தலைஇய ஒண்ணுதல்
ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம்
சில் நாள் ஆன்றனை யாகஎனப் பன்னாள்
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ 15
எல்லாம் பெரும்பிறி தாக வடாஅது
நல் வேல் பாணன் நல் நாட்டு உள்ளதை
வாட்கண் வானத்து என்றூழ் நீள் இடை
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
சோலை அத்தம் மாலைப் போகி 20
ஒழியச் சென்றோர் மன்ற
பழியெவன் ஆங்கொல் நோய் தரு பாலே?

326
பாடியவர்: பரணர், 
திணை: மருதத் திணை 
தோழி தலைவனிடம்சொன்னது

ஊரல் அவ்வாய் உருத்த தித்திப்
பேர் அமர் மழைக் கண் பெருந்தோள் சிறு நுதல்
நல்லள் அம்ம குறுமகள் செல்வர்
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
நெடுங்கொடி நுடங்கும் அட்டவாயில்  5
இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன
நலம் பாராட்டி நடையெழில் பொலிந்து
விழவிற் செலீஇயர் வேண்டும் வென் வேல்
இழை அணி யானைச் சோழர் மறவன்
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பைப்  10
புனன் மலி புதவின் போஒர் கிழவோன்
பழையன் ஓக்கிய வேல்போற்
பிழையல கண்ணவள் நோக்கியோர் திறத்தே.

327
பாடியவர்: மருங்கூர்ப்பாகைச் சாத்தன் பூதனார், 
திணை: பாலைத் திணை
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன்பகல் அமையமும் இரவும் போல
வேறு வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து
உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்
இன்னா வெஞ்சுரம் நம் நசை துரப்பத்  5
துன்னலும் தகுமோ துணிவு இல் நெஞ்சே
நீ செல வலித்தனை ஆயின் யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மோ கனை கதிர்
ஆவி அவ்வரி நீரென நசைஇ
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலைக் 10
களர் கால் யாத்த கண் அகன் பரப்பில்
செவ் வரை கொழி நீர் கடுப்ப அரவின்
அவ்வரி உரிவை அணவரும் மருங்கில்
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த
மைந் நிற உருவின் மணிக் கண் காக்கை  15
பைந் நிணம் கவரும் படுபிணக் கவலைச்
சென்றோர் செல் புறத்து இரங்கார் கொன்றோர்
கோல் கழிபு இரங்கும் அதர
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே.

328
பாடியவர்: மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார், 
திணை: குறிஞ்சித் திணை
தலைவி தோழியிடம் சொன்னது

வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர்
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து
அரவின் பைந்தலை இடறிப் பானாள்
இரவின் வந்து எம் இடைமுலை முயங்கித்  5
துனி கண் அகல வளைஇக் கங்குலின்
இனிதின் இயைந்த நண்பு அவர் முனிதல்
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின்
இலங்கு வளை நெகிழப் பரந்து படர் அலைப்ப யாம்
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு  10
அடக்குவம் மன்னோ தோழி மடப்பிடி
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று
கழை தின் யாக்கை விழை களிறு தைவர
வாழை அம் சிலம்பில் துஞ்சும்
சாரல் நாடன் சாயல் மார்பே.  15

329
பாடியவர்: உறையூர் முதுகூத்தனார்,
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

பூங்கணும் நுதலும் பசப்ப நோய் கூர்ந்து
ஈங்கியான் வருந்தவும் நீங்குதல் துணிந்து
வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர்
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர்ப்
படுமணி இயம்பப் பகல் இயைந்து உமணர்  5
கொடு நுகம் பிணித்த செங்கயிற்று ஒழுகைப்
பகடு அயாக் கொள்ளும் வெம்முனைத் துகள் தொகுத்து
எறி வளி சுழற்றும் அத்தம் சிறிது அசைந்து
ஏகுவர் கொல்லோ தாமே பாய் கொள்பு
உறுவெரிந் ஒடிக்கும் சிறுவரிக் குருளை 10
நெடு நல் யானை நீர் நசைக்கிட்ட
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்
புலி புக்கு ஈனும் வறுஞ்சுனைப்
பனிபடு சிமையப் பன் மலை இறந்தே.

330
பாடியவர்: உலோச்சனார், 
திணை: நெய்தற் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

கழிப்பூக் குற்றும் கானல் அல்கியும்
வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும்
இன்புறப் புணர்ந்தும் இளி வரப் பணிந்தும்
தன் துயர் வெளிப்பட தவறு இல் நம் துயர்
அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு  5
செல்லும் அன்னோ மெல்லம்புலம்பன்
செல்வோன் பெயர் புறத்து இரங்கி முன்னின்று
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்
எய்தின்று கொல்லோ தானே எய்தியும்
காமம் செப்ப நாணின்று கொல்லோ  10
உதுவ காண் அவர் ஊர்ந்த தேரே
குப்பை வெண் மணல் குவவு மிசையானும்
எக்கர்த் தாழை மடல் வயினானும்
ஆய் கொடிப் பாசடும்பு அரிய ஊர்பு இழிபு
சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த  15
கடும் செலல் கொடுந் திமில் போல
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே.

331
பாடியவர்: மாமூலனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

நீடு நிலை அரைய செங்குழை இருப்பைக்
கோடு கடைந்தன்ன கொள்ளை வான் பூ
ஆடு பரந்தன்ன ஈனல் எண்கின்
சேடு சினை உரீஇ உண்ட மிச்சில்
பைங்குழை தழையர் பழையர் மகளிர்  5
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து
குன்றகச் சிறுகுடி மறுகு தொறும் மறுகும்
சீறூர் நாடு பல பிறக்கு ஒழியச்
சென்றோர் அன்பிலர் தோழி என்றும்
அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ்ப்  10
பாணர் ஆர்ப்பப் பல் கலம் உதவி
நாள் அவை இருந்த நனை மகிழ் திதியன்
வேளிரொடு பொரீஇய கழித்த
வாள்வாய் அன்ன வறுஞ்சுரம் இறந்தே.

332
பாடியவர்: கபிலர், 
திணை: குறிஞ்சித் திணை
தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி

முளை வளர் முதல மூங்கில் முருக்கிக்
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய
பொரு முரண் உழுவை தொலைச்சிக் கூர் நுனைக்
குருதிச் செங்கோட்டு அழி துளி கழாஅக்  5
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலிச்
செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால்
யாழிசைப் பறவை இமிரப் பிடி புணர்ந்து
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
நின் புரைத் தக்க சாயலன் என நீ  10
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல்
வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடைப்படாஅ முயக்கமும்
தண்டாக் காதலும் தலை நாள் போன்மே.  15

333
பாடியவர்: கல்லாடனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின்
ஆக மேனி அம் பசப்பு ஊர
அழிவு பெரிது உடையையாகி அவர் வயின்
பழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டு
தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்கு நின்  5
எவ்வம் பெருமை உரைப்பின் செய் பொருள்
வயங்காது ஆயினும் பயங் கெடத் தூக்கி
நீடலர் வாழி தோழி கோடையில்
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது
தூம்புடைத் துய்த்தலைக் கூம்புபு திரங்கிய  10
வேனில் வெளிற்றுப் பனை போலக் கையெடுத்து
யானைப் பெரு நிரை வானம் பயிரும்
மலைச் சேண் இகந்தனர் ஆயினும் நிலை பெயர்ந்து
நாள் இடைப் படாமை வருவர் நமர் எனப்
பயம் தரு கொள்கையின் நயந் தலை திரியாது  15
நின் வாய் இன்மொழி நன்வாயாக
வருவர் ஆயினோ நன்றே வாராது
அவணர் காதலர் ஆயினும் இவண் நம்
பசலை மாய்தல் எளிது மன் தில்ல
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி  20
மறுதரல் உள்ளத்தர் எனினும்
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே.

334
பாடியவர்: மதுரைக் கூத்தனார், 
திணை: முல்லைத் திணை
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க
நாடு திறை கொண்டனம் ஆயின் பாக
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
பெருங்களிற்றுத் தடக்கை புரையக் கால் வீழ்த்து  5
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்கு உறழ் ஆலியொடு கதழுறை சிதறிப்
பெயல் தொடங்கின்றால் வானம் வானின்
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப  10
நால்குடன் பூண்ட கால் நவில் புரவிக்
கொடிஞ்சி நெடுந்தேர் கடும் பரி தவிராது
இனமயில் அகவும் கார் கொள் வியன் புனத்து
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப
ஈண்டே காணக் கடவுமதி பூங்கேழ்ப்  15
பொலிவன அமர்த்த உண்கண்
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே.

335
பாடியவர்: மதுரைத் தத்தங்கண்ணனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென் மன்னே யானை தன்
கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ் சிறந்து  5
இன்னா வேனில் இன் துணை ஆர
முளி சினை யாஅத்துக் பொளி பிளந்து ஊட்ட
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ்சுரம்
அரிய அல்லமன் நமக்கே விரி தார்
ஆடு கொள் முரசின் அடுபோர்ச் செழியன் 10
மாட மூதூர் மதில் புறம் தழீஇ
நீடு வெயில் உழந்த குறி இறைக் கணைக்கால்
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த
குடை ஓரன்ன கோள் அமை எருத்திற்
பாளை பற்று அழிந்து ஒழியப் புறம் சேர்பு  15
வாள் வடித்தன்ன வயிறு உடைப் பொதிய
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின்
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ
வார் உறு கவரியின் வண்டு உண விரிய
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்  20
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
நகை நனி வளர்க்குஞ் சிறப்பின் தகை மிகப்
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்
நீரினும் இனிய ஆகிக் கூர் எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ்வாய்  25
ஒண் தொடிக் குறுமகள் கொண்டனம் செலினே.

336
பாடியவர்: பாவை கொட்டிலார், 
திணை: மருதத் திணை 
பரத்தைபிறப் பரத்தையரைப் பற்றிச் சொன்னது

குழற்கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப்
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய
நாள் இரை தரீஇய எழுந்த நீர்நாய்
வாளையொடு உழப்பத் துறை கலுழ்ந்தமையின்  5
தெண் கள் தேறல் மாந்தி மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க்
காஞ்சி நீழல் குரவை அயரும்
தீம் பெரு பொய்கைத் துறை கேழ் ஊரன்  10
தேர் தர வந்த நேரிழை மகளிர்
ஏசுப என்ப என் நலனே அதுவே
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
கொல் களிற்று யானை நல்கல்மாறே
தாமும் பிறரும் உளர் போல் சேறல்  15
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யானவண் வாராமாறே வரினே வான் இடைச்
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
என்னொடு திரியான் ஆயின் வென் வேல்
மாரியம்பின் மழைத்தோற் சோழர்  20
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை
ஆரியர் படையின் உடைக என்
நேரிறை முன் கை வீங்கிய வளையே.