அகநானூறு

அகநானூறு

மணிமிடை பவளம்


133
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர்ப்
புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி
நன்னாள் வேங்கை வீ  நன்களம் வரிப்பக்
கார் தலைமணந்த பைம்புதல் புறவின்  5
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும்பொறை மருங்கில்
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
எரி பரந்தன்ன இல மலர் விரைஇப்
பூங்கலுழ் சுமந்த தீம் புனல் கான் யாற்று  10
வான் கொள் தூவல் வளி தர உண்கும்
எம்மொடு வருதல் வல்லையோ மற்று எனக்
கொன் ஒன்று வினவினர் மன்னே தோழி
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
கொல் புனக் குருந்தொடு கல் அறை தாஅம்  15
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ்சுவல் கலித்த
வரி மரல் கறிக்கும் மடப்பிணைத்
திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே.


134
பாடியவர்: சீத்தலைச் சாத்தனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மா மழை கார் பயந்து இறுத்தென
மணி மருள் பூவை அணி மலர் இடை இடைச்
செம்புற மூதாய் பரத்தலின் நன்பல
முல்லை வீ கழல் தாஅய் வல்லோன்  5
செய்கை அன்ன செந்நிலப் புறவின்
வாஅப் பாணி வயங்கு தொழில் கலி மாத்
தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க
இடி மறந்து ஏமதி வலவ குவி முகை
வாழை வான் பூ ஊழ் உறுபு உதிர்ந்த  10
ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை
கடு மான் தேர் ஒலி கேட்பின்
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே.

135
பாடியவர்: பரணர், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

திதலை மாமை தளிர் வனப்பு அழுங்கப்
புதலிவர் பீரின் எதிர்மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி
எழுதெழில் மழைக்கண் கலுழ நோய் கூர்ந்து
ஆதிமந்தியின் அறிவு பிறிதாகிப்  5
பேதுற்றிசினே காதல் அம் தோழி
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி
ஆடு தளிர் இருப்பைக் கூடுகுவி வான்பூக்
கோடு கடை கழங்கின் அறை மிசைத் தாஅம்
காடு இறந்தனரே காதலர் அடு போர்  10
வீயா விழுப்புகழ் விண் தோய் வியன் குடை
ஈர் எழு வேளிர் இயந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்று மாது அவர்த் தெளிந்த என் நெஞ்சே.

136
பாடியவர்: விற்றூற்று மூதெயினனார், 
திணை: மருதம் தினை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

மைப்பு அறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்
புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்துக்  5
கடி நகர் புனைந்து கடவுள் பேணிப்
படு மண முழவொடு பரூஉப்பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை  10
பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மா இதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெந்நூல் சூட்டித்
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி  15
மழை பட்டன்ன மணன் மலி பந்தர்
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித்
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்
உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம் படுவி
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்  20
பெரும் புழுக்குற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென 25
நாணினள் இறைஞ்சியோளே பேணிப்
பரூஉப் பகை ஆம்பல் குரூஉத் தொடை நீவிச்
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.


137
பாடியவர்: உறையூர் முதுகூத்தனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறும் பல் கேணிப் பிடி அடி நசைஇச்
களிறு தொடூஉக் கடக்கும் கான் யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கே
வென்று எறி முரசின் விறல் போர்ச் சோழர்  5
இன் கடுங்கள்ளின் உறந்தை ஆங்கண்
வருபுனல் நெரிதரும் இகு கரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழி நாள்
வீ  இலை அமன்ற மரம் பயில் இறும்பில்  10
தீ இல் அடுப்பின் அரங்கம் போலப்
பெரும் பாழ் கொண்டன்று நுதலே தோளும்
தோளா முத்தின் தெண் கடல் பொருநன்
திண்தேர்ச் செழியன் பொருப்பின் கவாஅன்
நல் எழில் நெடு வேய் புரையும்  15
தொல் கவின் தொலைந்தன நோகோ யானே.

138
பாடியவர்: எழூஉப்பன்றி நாகன் குமரனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

இகுளை கேட்டிசின் காதலம் தோழி
குவளை உண்கண் தெண் பனி மல்க
வறிதியான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிதொன்று கடுத்தனள் ஆகி வேம்பின்
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி 5
உடலுநர்க் கடந்த கடல் அம் தானைத்
திருந்து இலை நெடுவேல் தென்னவன் பொதியில்
அருஞ்சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியின்
ததும்பு சீர் இன்னியங்கறங்கக் கைதொழுது
உருகெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇக்  10
கடம்பும் களிறும் பாடி நுடங்குபு
தோடுந் தொடலையும் கைக்கொண்டு அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ நீடு
நின்னொடு தெளித்த நன் மலை நாடன்
குறிவரல் அரை நாள் குன்றத்து உச்சி  15
நெறி கெட வீழ்ந்த துன்னரும் கூர் இருள்
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள்
கொழு மடல் புதுப் பூ ஊதும் தும்பி
நன்னிறம் மருளும் அரு விடர்
இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சே.  20

139
பாடியவர்: இடைக்காடனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

துஞ்சுவது போல இருளி விண் பக
இமைப்பது போல மின்னி உறைக்கொண்டு
ஏறுவதுப் போலப் பாடு சிறந்து உரைஇ
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு
ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்  5
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறைப்
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலைத்
தண் நறும் படுநீர் மாந்திப் பதவு அருந்து
வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை  10
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல்
காமர் துணையொடு ஏமுற வதிய
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பியவை போல் பாஅய்ப் பலவுடன்
நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ  15
இன்னும் வாரார் ஆயின் நன் நுதல்
யாது கொல் மற்று அவர் நிலையே காதலர்
கருவிக் கார் இடி இரீஇய
பருவம் அன்று அவர் வருதும் என்றதுவே.

140
பாடியவர்: அம்மூவனார், 
திணை: நெய்தற் திணை 
தலைவன் தோழனிடம் சொன்னது

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்கழி செறுவின் உழாஅது செய்த
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ் கோல் உமணர் காதல் மட மகள்  5
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண் கல் உப்பு எனச்
சேரி விலைமாறு கூறலின் மனைய
விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எனக்கு  10
இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும்
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்குந் தந்தை
கை பூண் பகட்டின் வருந்தி
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே.  15

141
பாடியவர்: நக்கீரர், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

அம்ம வாழி தோழி கைம்மிகக்
கனவும் கங்குல் தோறு இனிய நனவும்
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின
நெஞ்சும் நனி புகன்று உறையும் எஞ்சாது
உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி  5
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய  10
விழவு உடன் அயர வருக தில் அம்ம
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலித்
தகரம் நாறுந் தண் நறுங்கதுப்பின்
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ  15
கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு
தீங்குலை வாழை ஓங்கு மடல் இராது  20
நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்
செல்குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல்லிசை வெறுக்கை தருமார் பல் பொறிப்
புலிக்கேழ் உற்ற பூ இடைப் பெருஞ்சினை  25
நரந்த நறும்பூ நாள் மலர் உதிரக்
கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கைத்
தேங்கமழ் நெடுவரைப் பிறங்கிய
வேங்கட வைப்பில் சுரன் இறந்தோரே.

142
பாடியவர்: பரணர், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

இலமலர் அன்ன அம் செந் நாவில்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்தப்
பலர் மேந்தோன்றிய கவி கை வள்ளல்
நிறை அருந்தானை வெல் போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற  5
குறையோர் கொள் கலம் போல நன்றும்
உவ இனி வாழிய நெஞ்சே காதலி
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற
கறையடி யானை நன்னன் பாழி
ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேய்எக்  10
கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ளத் தானை அதிகன் கொன்று உவந்து
ஒள் வாள் அமலை ஞாட்பின்
பலர் அறிவுறுதல் அஞ்சிப் பைப்பய  15
நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச்
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன் கைக்
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்
இடனில் சிறு புறத்து இழையொடு துயல் வரக்
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து  20
உருவு கிளர் ஏர் வினைப் பொலிந்த பாவை
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங்கோதை
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்பத்
தொடிக்கண் வடுக் கொள முயங்கினள் 25
வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே.

143
பாடியவர்: ஆலம்பேறிச் சாத்தனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

செய் வினைப் பிரிதல் எண்ணிக் கைம்மிகக்
காடு கவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்
நீடு சினை வறியவாக ஒல்லென
வாடு பல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு  5
முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரிச்
சுடர் நிமிர் நெடுங்கொடி விடர் முகை முழங்கும்
வெம்மலை அருஞ்சுரம் நீந்தி ஐய
சேறும் என்ற சிறு சொற்கு இவட்கே
வசை இல் வெம்போர் வானவன் மறவன்  10
நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும்
பொய்யா வாய்வாள் புனை கழல் பிட்டன்
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
அகல் அறை நெடுஞ்சுனை துவலையின் மலர்ந்த
தண் கமழ் நீலம் போலக்  15
கண் பனி கலுழ்ந்தன நோகோ யானே.

144
பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தேர்ப்பாகன் கேட்கும்படியாக

வருதும் என்ற நாளும் பொய்த்தன
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா
தண் கார்க்கு ஈன்ற பைங்கொடி முல்லை
வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்  5
அருள் கண் மாறலோ மாறுக அந்தில்
அறன் அஞ்சலரே ஆய் இழை நமர் எனச்
சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும்
பனி படு நறும் தார் குழைய நம்மொடு
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல  10
உவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பின்
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறைப்
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர் வாள் குவி முகம் சிதைய நூறி  15
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின் வயின் இமைப்ப
அமரோர்த்து அட்ட செல்வம்
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.