அகநானூறு

அகநானூறு

மணிமிடை பவளம்


145
பாடியவர்: கயமனார், 
திணை: பாலைத் திணை 
மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது

வேர் முழுது உலறி நின்ற புழல் கால்
தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்
வற்றல் மரத்த பொன் தலை ஓதி
வெயிற்கவின் இழந்த வைப்பின் பையுள் கொள
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு  5
ஆளில் அத்தத்து அளியள் அவனொடு
வாள் வரி பொருத புண்கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார
உயர் சிமை நெடுங்கோட்டு உருமென முழங்கும்
அருஞ்சுரம் இறந்தனள் என்ப பெருஞ்சீர்  10
அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்
தொல்நிலை முழு முதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல் இணர்ப் புன்னை போலக்
கடு நவைப் படீஇயர் மாதோ களி மயில்
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்  15
துஞ்சா முழவின் துய்த்தியல் வாழ்க்கைக்
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால்
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம் 20
எனக்கு உரித்து என்னாள் நின்ற என்
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே.

146
பாடியவர்: உவர்க்கண்ணூர் புல்லங்கீரனார், 
திணை: மருதத் திணை 
தலைவி பாணனிடம் சொன்னது

வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி
மடக்கண் எருமை மாண் நாகு தழீஇ
படப்பை நண்ணிப் பழனத்து அல்கும்
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந்தேர்  5
ஒள் இழை மகளிர் சேரிப் பல் நாள்
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு இழை
யார் கொல் அனியள் தானே எம் போல்
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின்  10
கண் பனி ஆகத்து உறைப்பக் கண் பசந்து
ஆயமும் அயலும் மருளத்
தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோளோ?

147
பாடியவர்: ஔவையார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

ஓங்கு மலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர் அளைப் பிணவு பசி கூர்ந்தெனப்  5
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
நெறிபடு கவலை நிரம்பா நீளிடை
வெள்ளிவீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே பல புலந்து  10
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்
தோளும் தொல் கவின் தொலைய நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே.

148
பாடியவர்: பரணர், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

பனைத்திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக்கைச்
கொலைச் சினந் தவிரா மதனுடை முன்பின்
வண்டுபடு கடாஅத்து உயர் மருப்பு யானை
தண் கமழ் சிலம்பின் மரம்படத் தொலைச்சி
உறு புலி உரறக் குத்தி விறல் கடிந்து  5
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலியொடு பொருது களம் பட்டெனக்
காணிய செல்லாக் கூகை நாணிக்
கடும் பகல் வழங்கா தாஅங்கு இடும்பை  10
பெரிதால் அம்ம இவட்கே அதனால்
மாலை வருதல் வேண்டும் சோலை
முளை மேய் பெருங்களிறு வழங்கும்
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே.

149
பாடியவர்: எருக்காட்டூர் தாயங்கண்ணனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்
புல்லரை இருப்பைத் தொள்ளை வான் பூப்
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள் இடைப் போகி நன்றும்  5
அரிது செய் விழுப்பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்  10
வளங் கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடு நல் யானை அடு போர்ச் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய  15
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே.

150
பாடியவர்: குறுவழுதியார், 
திணை: நெய்தற் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

பின்னு விட நெறித்த கூந்தலும் பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விடக்
கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி
எல்லினை பெரிது எனப் பன் மாண் கூறிப்
பெருந்தோள் அடைய முயங்கி நீடு நினைந்து  5
அருங்கடிப் படுத்தனள் யாயே கடுஞ்செலல்
வாள் சுறா வழங்கும் வளை மேய் பெருந்துறைக்
கனைத்த நெய்தல் கண் போன் மாமலர்
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ
மாலை மணி இதழ் கூம்பக் காலைக்  10
கள் நாறு காவியொடு தண்ணென் மலரும்
கழியும் கானலும் காண் தொறும் பல புலந்து
வாரார் கொல் எனப் பருவரும்
தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே.

151
பாடியவர்: காவன்முல்லைப் பூதரத்தனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி சொன்னது

தம் நயந்து உறைவோர்த் தாங்கித் தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆப மன் வாழி தோழி கால் விரிபு  5
உறு வளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
கலைமான் தலையின் முதன் முதல் கவர்த்த
கோடலங் கவட்ட குறுங்கால் உழுஞ்சில்
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள்
அரிக் கோல் பறையின் ஐயென ஒலிக்கும்  10
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்
கள்ளி முள் அரைப் பொருந்திச் செல்லுநர்க்கு
உறுவது கூறும் சிறு செந் நாவின்
மணி ஓர்த்தன்ன தெண் குரல்
கணிவாய்ப் பல்லிய காடு இறந்தோரே.  15

152
பாடியவர்: பரணர், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து
குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச்
சினங்கெழு தானைத் தித்தன் வெளியன்  5
இரங்கு நீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறைத்
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும்
சிறு வெள் இறவின் குப்பை அன்ன
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
முனை முரண் உடையக் கடந்த வென் வேல்  10
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்ப்
பாரத்துத் தலைவன் ஆர நன்னன்
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்
களி மயில் கலாவத்தன்ன தோளே
வல்வில் இளையர் பெருமகன் நள்ளி  15
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
கடவுள் காந்தள் உள்ளும் பலவுடன்
இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்குச்
சால் அவிழ் நெடுங்குழி நிறைய வீசும்  20
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல்
வேய் அமைக் கண் இடை புரைஇச்
சேய ஆயினும் நடுங்கு துயர் தருமே.

153
பாடியவர்: சேரமான் இளங்குட்டுவன், 
திணை: பாலைத் திணை 
மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது

நோகோ யானே நோதகும் உள்ளம்
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇப்
பந்து வழிப் படர்குவள் ஆயினும் நொந்து நனி
வெம்பு மன் அளியள் தானே இனியே
வன் கணாளன் மார்பு உற வளைஇ  5
இன் சொல் பிணிப்ப நம்பி நம் கண்
உறுதரு விழுமம் உள்ளாள் ஒய்யெனத்
தெறு கதிர் உலைஇய வேனில் வெங்காட்டு
உறு வளி ஒலி கழைக் கண்ணுறுபு தீண்டலின்
பொறி பிதிர்பு எடுத்த பொங்கி எழு கூர் எரிப்  10
பைதறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை
நல் அடிக்கு அமைந்த அல்ல மெல் இயல்
வல்லுநள் கொல்லோ தானே எல்லி
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனொடு பொலிந்த வானின் தோன்றித்  15
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின்
காலுறக் கழன்ற கள் கமழ் புது மலர்
கை விடு சுடரின் தோன்றும்
மை படுமா மலை விலங்கிய சுரனே?

154
பாடியவர்: பொதும்பில் புல்லாளங்கண்ணினார், 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

படுமழை பொழிந்த பய மிகு புறவின்
நெடு நீர் அவல பகு வாய்த் தேரை
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்கக்
குறும்புதற் பிடவின் நெடுங்கால் அலரி
செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப  5
வெஞ்சின அரவின் பை அணந்தன்ன
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழத்,
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதியக்
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி  10
ஓடு பரி மெலியாக் கொய் சுவற் புரவித்
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ தேரே சீர் மிகுபு
நம் வயின் புரிந்த கொள்கை
அம் மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே.  15

155
பாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது  

அறன் கடைப்படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன் கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும் புனை இழை என்று நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
நோய் நாம் உழக்குவம் ஆயினும் தான் தம்  5
செய் வினை முடிக்க தோழி பல்வயின்
பய நிரை சேர்ந்த பாண் நாட்டு ஆங்கண்
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடுவாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது 10
பெருங்களிறு மிதித்த அடியகத்து இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
விரல் ஊன்று வடுவின் தோன்றும்  15
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.

156
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார், 
திணை: மருதத் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டு
மூட்டுறு கவரி தூக்கியன்ன
செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்
மூது ஆ தின்றல் அஞ்சிக் காவலர்
பாகல் ஆய் கொடிப் பகன்றையொடு பரீஇக்  5
காஞ்சியின் அகத்துக் கரும்பு அருத்தி யாக்கும்
தீம் புனல் ஊர திறவிதாகக்
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழு நெறிப் பைந்தழை
காயா ஞாயிற்றாகத் தலைப்பெய  10
பொய்தல் ஆடிப் பொலிக என வந்து
நின் நகாப் பிழைத்த தவறே பெரும
கள்ளும் கண்ணியும் கையுறையாக
நிலைக் கோட்டு வெள்ளை நாள் செவிக் கிடாஅய்
நிலைத் துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித்  15
தணி மருங்கு அறியாள் யாய் அழ
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?