அகநானூறு

அகநானூறு

மணிமிடை பவளம்


157
பாடியவர்: வேம்பற்றூர் குமரனார், 
திணை: பாலைத் திணை
தலைவி தோழியிடம் சொன்னது

அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட
பகுவாய்ப் பானைக் குவி முனை சுரந்த
அரி நிறக் கலுழி ஆர மாந்திச்
செரு வேட்டுச் சிலைக்கும் செங்கண் ஆடவர்
வில் இட வீழ்ந்தோர் பதுக்கைக் கோங்கின்  5
எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல்
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கிக்
கான யானை கவளம் கொள்ளும்
அஞ்சுவரு நெறி இடைத் தமியர் சென்மார்
நெஞ்சு உண மொழிப மன்னே தோழி  10
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப்
பெயலுற நெகிழ்ந்து வெயிலுறச் சாஅய்
வினை அழி பாவையின் உலறி
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே.

158
பாடியவர்: கபிலர், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி செவிலித்தாயிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

உருமுரறு கருவிய பெரு மழை தலைஇப்
பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள்
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்பப்
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி  5
மிடை ஊர்பு இழியக் கண்டனென் இவள் என
அலையல் வாழி வேண்டு அன்னை நம் படப்பைச்
சூர் உடைச் சிலம்பில் சுடர்ப் பூ வேய்ந்து
தாம் வேண்டு உருவின் அணங்கு மார் வருமே
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்  10
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே இவள் தான்
சுடர் இன்று தமியளும் பனிக்கும் வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்
நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன் தலைப்
புலிக் கணத்து அன்ன நாய் தொடர் விட்டு  15
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்
எந்தையும் இல்லன் ஆக
அஞ்சுவள் அல்லளோ இவளிது செயலே.

159
பாடியவர்: ஆமூர் கவுதமன் சாதேவனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது 

தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்
வடியுறு பகழிக் கொடு வில் ஆடவர்  5
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கிப்
பல் ஆன் நெடு நிரை தழீஇக் கல்லென
அருமுனை அலைத்த பெரும் புகல் வலத்தர்
கனை குரல் கடுந்துடிப் பாணி தூங்கி
உவலைக் கண்ணியர் ஊன் புழுக்கு அயரும்  10
கவலை காதலர் இறந்தனர் என நனி
அவலம் கொள்ளன்மா காதல் அம் தோழி
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேட்சிமை
நறும் பூஞ்சாரல் குறும்பொறைக் குணாஅது
வில் கெழு தடக்கை வெல் போர் வானவன்  15
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறிக்
கொடுமுடி காக்குங்குரூஉக்கண் நெடு மதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்
ஆண்டமைந்து உறையுநர் அல்லர் நின்  20
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.

160
பாடியவர்: குமிழி ஞாழலார் நப்பசலையார், 
திணை: நெய்தற் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

ஒடுங்கீர் ஓதி நினக்கும் அற்றோ
நடுங்கின்று அளித்தென் நிறை இல் நெஞ்சம்
அடும்பு கொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக்
குப்பை வெண்மணல் பக்கம் சேர்த்தி
நிறைச்சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த  5
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டைப்
பார்ப்பிடன் ஆகும் அளவை பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானலஞ்சேர்ப்பன்
முள்ளுறின் சிறத்தல் அஞ்சி மெல்ல
வாவு உடைமையின் வள்பிற் காட்டி 10
ஏத்தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
செழு நீர்த் தண்கழி நீந்தலின் ஆழி
நுதி முகங்குறைந்த பொதி முகிழ் நெய்தல்
பாம்பு உயர் தலையின் சாம்புவன நிவப்ப
இரவு வந்தன்றால் திண் தேர் கரவாது  15
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல்வாய்
அரவச் சீறூர் காணப்
பகல் வந்தன்றல் பாய் பரி சிறந்தே.

161
பாடியவர்: மதுரைப் புல்லங்கண்ணனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

வினைவயின் பிரிதல் யாவது வணர் சுரி
வடியாப் பித்தை வன்கண் ஆடவர்
அடியமை பகழி ஆர வாங்க
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலைப்
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி  5
எருவைச் சேவல் ஈண்டு கிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி பொருள் புரிந்து
இறப்ப எண்ணினர் என்பது சிறப்பக்
கேட்டனள் கொல்லோ தானே தோட்டு ஆழ்பு
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல் 10
அம் மா மேனி ஆய் இழைக் குறுமகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
நல்வரல் இளமுலை நனைய
பல் இதழ் உண்கண் பரந்தன பனியே.

162
பாடியவர்: பரணர், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது  

கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து
அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல
கடல் கண்டன்ன மாக விசும்பின்
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்கக்
கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி  5
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள்
அருங்கடிக் காவலர் இகழ் பதம் நோக்கிப்
பனி மயங்கு அசை வளி அலைப்பத் தந்தை
நெடுநகர் ஒரு சிறை நின்றனென் ஆக
அறல் என அவிரும் கூந்தல் மலர் என  10
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண்
முகை நிரைத் தன்ன மா வீழ் வெண் பல்
நகை மாண்டு இலங்கும் நலங்கெழு துவர் வாய்க்
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசிக்
கால் உறு தளிரின் நடுங்கி ஆனாது  15
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி
நல்லிசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
நசை பிழைப்பு அறியாக் கழல் தொடி அதிகன்
கோள் அறவு அறியாப் பயங் கெழு பலவின்
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய  20
வில் கெழு தானைப் பசும்பூண் பாண்டியன்
களிறு அணி வெல் கொடி கடுப்பக் காண்வர
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி
நேர் கொள் நெடு வரை கவாஅன்
சூரர மகளிரிற் பெறற்கு அரியோளே.  25

163
பாடியவர்: கழார்க்கீரன் எயிற்றியார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

விண் அதிர்பு தலைஇய விரவு மலர் குழையத்
தண் மழை பொழிந்த தாழ் பெயல் கடை நாள்
எமியம் ஆகத் துனி உளம் கூரச்
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழப்
பெரு நசை உள்ளமொடு வருதிசை நோக்கி  5
விளியும் எவ்வமொடு அளியள் என்னாது
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன் பனிப் பானாள்
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை
எனக்கே வந்தனை போறி புனல் கால்  10
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழக்
கொடியோர் சென்ற தேஎத்து மடியாது
இனையை ஆகிச் செல்மதி
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே.

164
பாடியவர்: மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார், 
திணை: முல்லைத் திணை
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைது அறத் தெறுதலின் பயன் கரந்து மாறி
விடுவாய்ப் பட்ட வியன் கண் மா நிலம்
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்
பொறி வரி இன வண்டு ஆர்ப்பப் பலவுடன்  5
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்
எவன் கொல் மற்று அவர் நிலை என மயங்கி
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு
இன்னாது உறைவி தொன்னலம் பெறூஉம்  10
இது நற் காலம் கண்டிசின் பகைவர்
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்
கந்து கால் ஒசிக்கும் யானை
வெஞ்சின வேந்தன் வினை விடப் பெறினே.

165
பாடியவர்: பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, 
திணை: பாலைத் திணை 
மகட்போக்கிய தாயைக் கண்டார் கூறியது

கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக்
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ
ஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவி
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும்  5
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று தாயும்
இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் எனக்
கண்ணும் நுதலும் நீவித் தண்ணெனத்
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇத் 10
தாழிக் குவளை வாடு மலர் சூட்டித்
தரு மணல் கிடந்த பாவை என்
அரு மகளே என முயங்கினள் அழுமே.

166
பாடியவர்: இடையன் நெடுங்கீரனார், 
திணை: மருதத் திணை 
பரத்தை தன் தோழியிடம் சொன்னது

நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்
மயங்கு மழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும்
பழம் பல் நெல்லின் வேளூர் வாயில்
நறு விரை தெளித்த நாறு இணர் மாலைப்  5
பொறி வரி இன வண்டு ஊதல கழியும்
உயர் பலி பெறூஉம் உருகெழு தெய்வம்
புனை இருங்கதுப்பின் நீ கடுத்தோள் வயின்
அனையேன் ஆயின் அணங்குக என் என
மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின்  10
யார் கொல் வாழி தோழி நெருநல்
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ
வதுவை ஈர் அணிப் பொலிந்து நம்மொடு
புதுவது வந்த காவிரிக்
கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே.  15

167
பாடியவர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

வயங்கு மணி பொருத வகையமை வனப்பின்
பசுங்காழ் அல்குல் மாஅயோளொடு
வினை வனப்பு எய்திய புனை பூஞ்சேக்கை
விண்பொரு நெடு நகர்த் தங்கி இன்றே
இனிதுடன் கழிந்தன்று மன்னே நாளைப்  5
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறு தரச்
சேக்குவம் கொல்லோ நெஞ்சே சாத்து எறிந்து
அதர் கூட்டு உண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடு வில் ஆடவர் படுபகை வெரீஇ
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முதுபாழ்  10
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந்ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரம் சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று  15
ஒழுகு பலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால் நாய் துன்னிய பறைக்கண் சிற்றில்
குயில் காழ் சிதைய மண்டி அயில்வாய்க்
கூர் முகச் சிதலை வேய்ந்த
போர் மடி நல் இறைப் பொதியிலானே.  20

168
பாடியவர்: கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

யாமம் நும்மொடு கழிப்பி நோய் மிக
பனி வார் கண்ணேம் வைகுதும் இனியே
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப
பல்லான்குன்றில் படுநிழல் சேர்ந்த
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்  5
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்
ஈன்று அணி இரும் பிடி தழீஇக் களிறு தன்
தூங்கு நடைக் குழவி துயில் புறங்காப்ப  10
ஒடுங்கு அளை புலம்பப் போகிக் கடுங்கண்
வாள் வரி வயப் புலி கல் முழை உரற
கானவர் மடிந்த கங்குல்
மான் அதர்ச் சிறு நெறி வருதல் நீயே.