அகநானூறு

அகநானூறு

மணிமிடை பவளம்


265
பாடியவர்: மாமூலனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழல் கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ் வரை மானும் கொல்லோ
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலிக் குழீஇக் கங்கை  5
நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ
எவன் கொல் வாழி தோழி வயங்கு ஒளி
நிழல் பால் அறலின் நெறித்த கூந்தல்
குழல் குரல் பாவை இரங்க நம் துறந்து
ஒண் தொடி நெகிழச் சாஅய்ச் செல்லலொடு  10
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழியப் பொறை அடைந்து
இன் சிலை எழில் ஏறு கெண்டிப் புரைய
நிணம் பொதி விழுத்தடி நெருப்பின் வைத்து எடுத்து
அணங்கரு மரபின் பேஎய் போல
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்கத்  15
துகள் அற விளைந்த தோப்பி பருகித்
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
புலாஅல் கையர் பூசா வாயர்
ஒராஅ உருட்டும் குடுமிக் குராலொடு
மராஅஞ்சீறூர் மருங்கில் தூங்கும்  20
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ
வெம் முனை அருஞ்சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே.

266
பாடியவர்: பரணர், 
திணை: மருதத் திணை 
தலைவி தலைவனிடம் சொன்னது

கோடு உற நிவந்த நீடு இரும் பரப்பின்
அம் தீம் பாஅய புதுப் புனல் நெருநை
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ
நரந்தம் நாறும் குவை இருங்கூந்தல்
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ  5
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக்கண்
நோக்கு தொறும் நோக்கு தொறும் தவிர்வு இலையாகிக்
காமம் கைம்மிகச் சிறத்தலின் நாண் இழந்து
ஆடினை என்ப மகிழ்ந அதுவே
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்  10
வாய்வாள் எவ்வி ஏவன் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்
கள்ளுடைப் பெருஞ்சோற்று எல் இமிழ் அன்ன
கவ்வை ஆகின்றால் பெரிதே இனி அஃது  15
அவலம் அன்று மன் எமக்கே அயல
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை
அணங்குடை வரைப்பு அகம் பொலிய வந்து இறுக்கும்
திரு மணி விளக்கின் அலைவாய்ச்  20
செருமிகு சேஎயொடு உற்ற சூளே.

267
பாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

நெஞ்சு நெகிழ்தகுந கூறி அன்பு கலந்து
அறாஅ வஞ்சினம் செய்தோர் வினை புரிந்து
திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி
இனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து
உதிர்த்த கோடை உட்குவரு கடத்து இடை  5
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை
மருப்புக் கடைந்தன்ன கொள்ளை வான் பூ
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர
மை பட்டன்ன மா முக முசுவினம்
பைது அறு நெடுங்கழை பாய்தலின் ஒய்யென  10
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய்
உகிர் நெரி ஓசையிற் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
தாம் பழி உடையர் அல்லர் நாளும்
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா வயங்கு வினை  15
வால் ஏர் எல் வளை நெகிழ்த்த
தோளே தோழி தவறு உடையவ்வே.

268
பாடியவர்: வடம வண்ணக்கன் பேரி சாத்தனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

அறியாய் வாழி தோழி பொறி வரிப்
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த
குருதிச் செங்களம் புலவு அற வேங்கை
உருகெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய  5
காமம் கலந்த காதல் உண்டெனின்
நன்று மன் அது நீ நாடாய் கூறுதி
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்
யான் அலது இல்லை இவ் உலகத்தானே
இன்னுயிர் அன்ன நின்னொடும் சூழாது  10
முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த
பெரும் பெயர் எந்தை அருங்கடி நீவிச்
செய்து பின் இரங்கா வினையொடு
மெய்யல பெரும் பழி எய்தினென் யானே.

269
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

தொடி தோள் இவர்க எவ்வமும் தீர்க
நெறி இருங்கதுப்பின் கோதையும் புனைக
ஏறுடை இன நிரை பெயரப் பெயராது
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
தறுகணாளர் நல்லிசை நிறுமார்  5
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்
அகலிடம் குயின்ற பல் பெயர் மண்ணி
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்  10
செம் பூங்கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டிக் கழல் கால்
இளையர் பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர்
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்  15
நலங் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வரப்
பாடு ஊர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து
வயிர் இடைப் பட்ட தெள் விளி இயம்ப
வண்டல் பாவை உண் துறை தரீஇத்
திருநுதல் மகளிர் குரவை அயரும்  20
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை
வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின்
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த
ஒண் செங்கழுநீர் அன்ன நின்
கண் பனி துடைமார் வந்தனர் விரைந்தே.  25

270
பாடியவர்: சாகலாசனார், 
திணை: நெய்தற் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

இருங்கழி மலர்ந்த வள் இதழ் நீலம்
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும்
மெல்லம்புலம்ப நெகிழ்ந்தன தோளே
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப்படு திரை  5
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும்
கானல் பெருந்துறை நோக்கி இவளே
கொய் சுவல் புரவிக் கைவண் கோமான்
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன
அம் மா மேனி தொல் நலம் தொலைய  10
துஞ்சாக் கண்ணள் அலமரும் நீயே
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்
நும் ஊர் உள்ளுவை நோகோ யானே.  15

271
பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார், 
திணை: பாலைத் திணை
தோழி தலைவனிடம் சொன்னது

பொறி வரிப் புறவின் செங்கால் சேவல்
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக்
குறும்பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி  5
நெடுஞ்சேண் வந்த நீர் நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப்
பல் காய் அம் சினை அகவும் அத்தம்
சென்று நீர் அவணிர் ஆகி நின்று தரும்
நிலை அரும்  பொருட்பிணி நினைந்தனிர் எனினே 10
வல்வதாக நும் செய் வினை இவட்கே
களி மலி கள்ளில் நல் தேர் அவியன்
ஆடியல் இள மழை சூடித் தோன்றும்
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின்
கண்ணிடை புரையும் நெடுமென் பணைத்தோள்  15
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்
மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே?

272
பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

இரும் புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்
புலவு நாறு புகர் நுதல் கழுவக் கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு
அஞ்சுவரு விடர் முகை ஆர் இருள் அகற்றிய
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்கத்  5
தனியன் வந்து பனி அலை முனியான்
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங்கண்ணி
அசையா நாற்றம் அசை வளி பகரத்
துறுகல் நண்ணிய கறி இவர் படப்பைக்  10
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும்
மெய்ம் மலி உவகையன் அந் நிலை கண்டு
முருகு என உணர்ந்து முகமன் கூறி
உருவச் செந்தினை நீரொடு தூஉய்
நெடுவேள் பரவும் அன்னை அன்னோ  15
என் ஆவது கொல் தானே பொன்னென
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய
மணி நிற மஞ்ஞை அகவும்
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே.

273
பாடியவர்: ஔவையார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

விசும்பு விசைத்து எறிந்த கூதளங்கோதையின்
பசுங்கால் வெண் குருகு வாப்பறை வளைஇ
ஆர்கலி வளவயின் போதொடு பரப்பப்
புலம் புனிறு தீர்ந்த புதுவரல் அற்சிரம்
நலம் கவர் பசலை நலியவும் நம் துயர்  5
அறியார் கொல்லோ தாமே அறியினும்
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்
நம்முடை உலகம் உள்ளார் கொல்லோ
யாங்கென உணர்கோ யானே வீங்குபு
தலை வரம்பு அறியாத் தகைவரல் வாடையொடு  10
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பிப்
புலவர் புகழ்ந்த நாண் இல் பெருமரம்  15
நிலவரை எல்லாம் நிழற்றி
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே.

274
பாடியவர்: இடைக்காடனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து
இகு பெயல் அழி துளி தலைஇ வானம்
பருவம் செய்த பானாள் கங்குல்
ஆடுதலைத் துருவின் தோடு ஏமார்ப்ப
கடை கோல் சிறு தீ அடைய மாட்டித்  5
திண் கால் உறியன் பானையன் அதளன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்பத்
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்
மடி விடு வீளை கடிது சென்று இசைப்பத்
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ  10
முள்ளுடைக் குறுந்தூறு இரியப் போகும்
தண் நறும் புறவினதுவே நறு மலர்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே.

275
பாடியவர்: கயமனார், 
திணை: பாலைத் திணை
மகட்போக்கிய தாய் சொன்னது

ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்திக்
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலைப் பந்து எறிந்து ஆடி
இளமைத் தகைமையை வளமனைக் கிழத்தி
பிதிர்வை நீரை பெண் நீறு ஆக என  5
யாம் தற் கழறுங்காலைத் தான் தன்
மழலை இன் சொல் கழறல் இன்றி
இன் உயிர் கலப்பக் கூறி நன்னுதல்
பெருஞ்சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்
ஏதிலாளன் காதல் நம்பித்  10
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இருங்கிளை கவரும்
வெம் மலை அருஞ்சுரம் நம் இவண் ஒழிய
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி  15
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது என் மகள்
செம்புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ கண்  உடையீரே?

276
பாடியவர்: பரணர், 
திணை: மருதத் திணை 
பரத்தை சொன்னது, தலைவியின் தோழியர் கேட்கும்படியாக

நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
வாளை வெண் போத்து உணீஇய நாரை தன்
அடி அறிவுறுதல் அஞ்சிப் பைப்பயக்
கடி இலம் புகூஉம் கள்வன் போலச்
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு  5
ஆவது ஆக இனி நாண் உண்டோ
வருக தில் அம்ம எம் சேரி சேர
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காணத்
தாரும் தானையும் பற்றி ஆரியர்
பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு போலத் 10
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து அவன்
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வுற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல்
பரந்து வெளிப்படாது ஆகி
வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனே.  15