கலித்தொகை

கலித்தொகை

முல்லைக்கலி


110    
கடி கொள் இரும் காப்பில் புல் இனத்து ஆயர்    
குடி தொறும் நல்லாரை வேண்டுதி - எல்லா! -    
இடு தேள் மருந்தோ, நின் வேட்கை? தொடுதரத்    
துன்னித் தந்தாங்கே நகை குறித்து, எம்மைத்    
திளைத்தற்கு எளியமாக் கண்டை. 'அளைக்கு எளியாள் 
வெண்ணெய்க்கும் அன்னள்' எனக் கொண்டாய் - ஒள் நுதால்    
ஆங்கு நீ கூறின், அனைத்து ஆக; நீங்குக;    
அச்சத்தான் மாறி, அசைவினான் போத்தந்து    
நிச்சம் தடுமாறும் - மெல் இயல் ஆய் மகள்!    
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம்    
சுற்றிச் சுழலும் என் நெஞ்சு.    

விடிந்த பொழுதினும் இல் வயின் போகாது,    
கொடும் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும்    
கடும் சூல் ஆ நாகு போல், நின் கண்டு நாளும்    
நடுங்கு அஞர் உற்றது - என் நெஞ்சு.    

எவ்வம் மிகுதர, எம் திறத்து, எஞ்ஞான்றும்,    
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகிக்,    
கை தோயல் மாத்திரை அல்லது, செய்தி    
அறியாது - அளித்து என் உயிர்.    
அன்னையோ? - மன்றத்துக் கண்டாங்கே, 'சான்றார் மகளிரை 
இன்றி அமையேன்' என்று, இன்னவும் சொல்லுவாய்;    
நின்றாய்; நீ சென்றீ; எமர் காண்பர்; நாளையும்    
கன்றொடு சேறும், புலத்து.    

111    
தீம் பால் கறந்த கலம் மாற்றக், கன்று எல்லாம்    
தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த    
பூம் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும் 
முல்லையும் தாய பாட்டம் கால் - தோழி! - நம்    
புல் இனத்து ஆயர் மகளிரோடு எல்லாம்    
ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த    
குருந்தம் பூம் கண்ணிப் பொதுவன், மற்று என்னை, 
'முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்    
சிற்றில் புனைகோ சிறிது?' என்றான்; 'எல்லா! நீ    
'பெற்றேம் யாம்' என்று பிறர் செய்த இல் இருப்பாய்;    
கற்றது இலை மன்ற காண்' என்றேன்; 'முற்று இழாய்! 
தாது சூழ் கூந்தல் தகைபெறத் தைஇய    
கோதை புனைகோ நினக்கு?' என்றான்; 'எல்லா! நீ    
ஏதிலார் தந்த பூக் கொள்வாய்; நனி மிகப்    
பேதையை மன்ற பெரிது' என்றேன்; 'மாதராய்!    
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல்    
தொய்யில் எழுதுகோ மற்று?' என்றான்; 'யாம் பிறர்    
செய் புறம் நோக்கி இருத்துமோ? நீ பெரிது    
மையலை மாதோ; விடுக' என்றேன். தையலாய்!    
சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப், 
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் அவனை நீ    
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்    
யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற    
நோயும் களைகுவை மன்.    

112    
யார் இவன், என்னை விலக்குவான்? நீர் உளர்    
பூம் தாமரைப் போது தந்த விரவுத் தார்க்    
கல்லாப் பொதுவனை; நீ மாறு; நின்னொடு    
சொல்லல் ஓம்பு என்றார், எமர்.    
எல்லா! 'கடாஅய கண்ணால், கலைஇய நோய் செய்யும் 
நடாஅக் கரும்பு அமன்ற தோளாரைக் காணின்,    
விடாஅல், ஓம்பு' என்றார், எமர்.    
கடாஅயார், நல்லாரைக் காணின், விலக்க, நயந்து, அவர் 
பல் இதழ் உண் கண்ணும் தோளும் புகழ் பாட,    
நல்லது கற்பித்தார் மன்ற, நுமர். பெரிதும்    
வல்லர், எமர் கண் செயல்.    
ஓஒ! வழங்காப் பொழுது நீ கன்று மேய்ப்பாய் போல்,    
வழங்கல் அறிவார் உரையாரேல், எம்மை    
இகழ்ந்தாரே அன்றோ, எமர்?    
ஒக்கும்; அறிவல் - யான் எல்லா! - விடு.    
'விடேன், யான்; என், நீ குறித்தது? - இரும் கூந்தால்! 
நின்னை, "என் முன் நின்று    
சொல்லல் ஓம்பு" என்றமை அன்றி, "அவனை நீ    
புல்லல் ஓம்பு" என்றது உடையரோ? மெல்ல    
முயங்கு, நின் முள் எயிறு உண்கும். எவன் கொலோ? 
மாயப் பொதுவன் உரைத்த உரை எல்லாம்    
வாய் ஆவது ஆயின், தலைப்பட்டாம்; பொய் ஆயின் 
சாயல் இன் மார்பில், கமழ் தார் குழைத்த நின்    
ஆய் இதழ் உண் கண் பசப்பத் தட மென் தோள்    
சாயினும் ஏஎர் உடைத்து.    

113    
நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள்,    
அலமரல் அமர் உண் கண், அம் நல்லாய்! நீ உறீஇ, 
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல். 
பேர் ஏமுற்றார் போல, முன் நின்று, விலக்குவாய்    
யார் - எல்லா! நின்னை அறிந்ததூ உம் இல் வழி?    

தளிர் இயால்! என் அறிதல் வேண்டின், பகை அஞ்சாப் 
புல் இனத்து ஆயர் மகனேன், மற்று யான்.    
ஒக்கும் மன்;    
புல் இனத்து ஆயனை நீ ஆயின், குடம் சுட்டு 
நல் இனத்து ஆயர், எமர்.    

எல்லா!    
நின்னொடு சொல்லின், ஏதமோ இல்லை மன்;    
ஏதம் அன்று எல்லை வருவான் விடு.    

விடேன்,    
உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு.    
மெல்லிய ஆதல் அறியினும், மெல்லியால்!    
நின் மொழி கொண்டு, யானோ விடுவேன்? - மற்று என் மொழி கொண்டு

என் நெஞ்சம் ஏவல் செயின்?    
'நெஞ்சு ஏவல் செய்யாது' என நின்றாய்க்கு, 'எஞ்சிய    
காதல் கொள் காமம் கலக்குற' ஏதிலார்    
பொய்ம் மொழி தேறுவது என்?    

தெளிந்தேன், தெரி இழாய்! யான்.    
பல் கால், யாம் கான் யாற்று அவிர் மணல் தண் பொழில், 
அல்கல் அகல் அறை, ஆயமொடு ஆடி,    
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து, எல்லை    
இரவு உற்றது; இன்னும் கழிப்பி; அரவு உற்று    
உருமின் அதிரும் குரல் போல், பொரு முரண்    
நல் ஏறு நாகு உடன் நின்றன,    
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே.    

114    
வாரி, நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த    
ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ...    
புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால்,    
வதுவை அயர்வாரை கண்டு, 'மதி அறியா    
ஏழையை' என்று அகல நக்கு, வந்தீயாய், நீ -    
தோழி! - அவன் உழைச் சென்று    
சென்று யான் அறிவேன்; கூறுக. மற்று இனி.    
'சொல் அறியாப் பேதை - மடவை! - மற்று எல்லா!    
நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று;    
நினக்கு வருவதாக் காண்பாய். அனைத்து ஆகச்    
சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு.    
தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,    
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்    
பெரு மணம் எல்லாம் தனித்தே ஒழிய -    
வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த    
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த    
ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும்    
தெருமரல் கைவிட்டு இருக்கோ... அலர்ந்த    
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்    
அரு நெறி ஆயர் மகளிர்க்கு    
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே?    

115    
தோழி! நாம், காணாமை உண்ட கடும் கள்ளை, மெய் கூர    
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக்    
கரந்ததூஉம் கையொடு கோள் பட்டாம், கண்டாய்; நம் 
புல் இனத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்    
முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்!    
கூந்தலுள் பெய்து முடித்தேன் மன்; தோழி! யாய்    
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,    
அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,    
அன்னை முன் வீழ்ந்தன்று அப் பூ.    
அதனை வினவலும் செய்யாள்; சினவலும் செய்யாள்; 
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,    
நீங்கிப்புறங்கடை போயினாள். யானும், என்    
சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த    
பூம் கரை நீலம் தழீஇத், தளர்பு ஒல்கிப்,    
பாங்கரும் கானத்து ஒளித்தேன். - அதற்கு, எல்லா 
ஈங்கு எவன் அஞ்சுவது?    
அஞ்சல் - அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின், நமரும்    
அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை. அகல் கண்    
வரைப்பில் மணல் தாழப் பெய்து, திரைப்பில்    
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவே யாம்    
அல்கலும் சூழ்ந்த வினை!    

116    
பாங்கு அரும் பாட்டம் கால் கன்றொடு செல்வேம் எம் 
தாம்பின் ஒரு தலை பற்றினை, ஈங்கு எம்மை    
முன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா! நீ    
என்னையே முற்றாய் விடு.    
விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர் மண்டும்    
கடு வய நாகு போல் நோக்கித் தொழு வாயில்    
நீங்கிச் சினவுவாய் மற்று.    
நீ நீங்கு, கன்று சேர்ந்தார்கண் கத ஈற்று ஆ சென்றாங்கு    
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு;    
யாய் வருக ஒன்றோ, பிறர் வருக; மற்று நின்    
கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,    
நீ அருளி நல்க பெறின்.    
நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇ    
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம் 
மாறு எதிர் கூறி, மயக்குப்படுகுவாய்! -    
கலத்தொடு யாம் செல்வுழி நாடிப், புலத்தும்    
வருவையால் - நாண் இலி! நீ.    

117    
மாண உருக்கிய நல் பொன் மணி உறீஇ,    
பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின்    
முதிரா இள முகை ஒப்ப, எதிரிய    
தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று, நின்    
கையது எவன்? மற்று உரை.    
'கையதை - சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று இ·து ஓர் 
மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர்    
போழில் புனைந்த வரிப் புட்டில்' - 'புட்டில் உள் என் உள? 
காண்தக்காய்! என் காட்டிக் காண்.'    
காண், இனி; தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு 
காட்டுச் சார் கொய்த சிறு முல்லை, மற்று இவை.    
முல்லை இவை ஆயின் - முற்றிய கூழையாய்!    
எல்லிற்றுப் போழ்து ஆயின் - ஈதோளிக் கண்டேனால்;    
'செல்' என்று நின்னை விடுவேன், யான்; மற்று எனக்கு    
மெல்லியது, ஓராது அறிவு.