குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகை


151. பாலை - தலைவன் கூற்று 

வங்காக் கடந்த செங்காற் பேடை 
எழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது 
குழலிசைக் குரல் குறும்பல அகவும் 
குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது 
மறப்பருங் காதலி யொழிய 
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே. 
-தூங்கலோரியார்.

152. குறிஞ்சி - தலைவி கூற்று 

யாவதும் அறிகிலர் கழறு வோரே 
தாயின் முட்டை போலவுட் கிடந்து 
சாயின் அல்லது பிறிதெவ னுடைத்தே 
யாமைப் பார்ப்பி னன்ன 
காமங் காதலர் கையற விடினே. 
-கிளிமங்கலங்கிழார்.

153. குறிஞ்சி - தலைவி கூற்று 

குன்றக் கூகை குழறினும் முன்றிற் 
பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும் 
அஞ்சுமன் அளித்தெ னெஞ்ச மினியே 
ஆரிருட் கங்குல் அவர்வயிற் 
சாரல் நீளிடைச் செலவா னாதே. 
-கபிலர்.

154. பாலை - தலைவி கூற்று 

யாங்கறிந் தனர்கொல் தோழி பாம்பின் 
உரிநிமிர்ந் தன்ன உருப்பவி ரமையத் 
திரைவேட் டெழுந்த சேவல் உள்ளிப் 
பொறிமயிர் எருத்திற் குறுநடைப் பேடை 
பொறிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத் 
தயங்க விருந்து புலம்பக் கூஉம் 
அருஞ்சுர வைப்பிற் கானம் 
பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே. 
-மதுரைச் சீத்தலைச் சாத்தனார்.

155. முல்லை - தலைவி கூற்று 

முதைப்புனங் கொன்ற ஆர்கலி உழவர் 
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் 
பொழுதோ தான்வந் தன்றே மெழுகான் 
றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி 
மரம்பயில் இறும்பி னார்ப்பச் சுரனிழிபு 
மாலை நனிவிருந் தயர்மார் 
தேர்வரும் என்னும் உரைவா ராதே. 
-உரோடகத்துக் காரத்தனார்.

156. குறிஞ்சி - தலைவன் கூற்று 

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே 
செம்பூ முருக்கி னன்னார் களைந்து 
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் 
படிவ உண்டிப் பார்ப்பன மகனே 
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும் 
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் 
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.
-பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்.

157. மருதம் - தலைவி கூற்று 

குக்கூ வென்றது கோழி அதன்எதிர் 
துட்கென் றன்றென் தூய நெஞ்சம் 
தோடோய் காதலர்ப் பிரிக்கும் 
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே. 
-அள்ளூர் நன்முல்லையார்.

158. குறிஞ்சி - தலைவி கூற்று 

நெடுவரை மருங்கிற் பாம்புபட இடிக்கும் 
கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக் 
காலொடு வந்த கமஞ்சூல் மாமழை 
ஆரளி யிலையோ நீயே பேரிசை 
இமயமும் துளக்கும் பண்பினை 
துணையிலர் அளியர் பெண்டிர் இஃதெவனோ. 
-ஔவையார்.

159. குறிஞ்சி - தோழி கூற்று 

தழையணி அல்குல் தாங்கல் செல்லா 
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக 
அம்மெல் ஆக நிறைய வீங்கிக் 
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின 
யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும் 
அவல நெஞ்சமொ டுசாவாக் 
கவலை மாக்கட்டிப் பேதை யூரே. 
-வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்.

160. குறிஞ்சி - தலைவி கூற்று 

நெருப்பி னன்ன செந்தலை யன்றில் 
இறவி னன்ன கொடுவாய்ப் பேடையொடு 
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர் 
கையற நரலு நள்ளென் யாமத்துப் 
பெருந்தண் வாடையும் வாரார் 
இஃதோ தோழிநங் காதலர் வரவே. 
-மதுரை மருதனிள நாகனார்.

161. குறிஞ்சி - தலைவி கூற்று 

பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது 
கழுதுகண் பனிப்ப வீசும் அதன்றலைப் 
புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி 
அன்னா வென்னும் அன்னையு மன்னோ 
என்மலைந் தனன்கொல் தானே தன்மலை 
ஆரம் நாறு மார்பினன் 
மாரி யானையின் வந்துநின் றனனே. 
-நக்கீரனார்.

162. முல்லை - தலைவன் கூற்று 

கார்புறத் தந்த நீருடை வியன்புலத்துப் 
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை 
முல்லை வாழியோ முல்லை நீநின் 
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை 
நகுவை போலக் காட்டல் 
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே. 
-கருவூர்ப் பவுத்திரனார்.

163. நெய்தல் - தலைவி கூற்று 

யாரணங் குற்றனை கடலே பூழியர் 
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன 
மீனார் குருகின் கானலம் பெருந்துறை 
வெள்வீத் தாழை திரையலை 
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே. 
-அம்மூவனார்.

164. மருதம் - காதற்பரத்தை கூற்று 

கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு 
துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம் 
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது 
தண்பெரும் பவ்வம் அணங்குக தோழி 
மனையோள் மடமையிற் புலக்கும் 
அனையே மகிழ்நற்கியா மாயினம் எனினே. 
-மாங்குடி மருதனார்.

165. குறிஞ்சி - தலைவன் கூற்று 

மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு 
விழைந்ததன் றலையும் நீவெய் துற்றனை 
அருங்கரை நின்ற உப்பொய் சகடம் 
பெரும்பெய றலையவீந் தாங்கியவள் 
இரும்பல் கூந்தல் இயலணி கண்டே. 
-பரணர்.

166. நெய்தல் - தோழி கூற்று 

தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை 
நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும் 
ஊரோ நன்றுமன் மரந்தை 
ஒருதனி வைகிற் புலம்பா கின்றே. 
-கூடலூர் கிழார்.

167. முல்லை - செவிலித்தாய் கூற்று 

முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் 
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் 
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத் 
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர் 
இனிதெனக் கணவ னுண்டலின் 
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே. 
-கூடலூர் கிழார்.

168. பாலை - தலைவன் கூற்று 

மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை 
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து 
பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன 
நறுந்தண் ணியளே நன்மா மேனி 
புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள் 
மணத்தலுந் தணத்தலு மிலமே 
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. 
-சிறைக்குடி யாந்தையார்.

169. மருதம் - தலைவி கூற்று 

சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற் 
றெற்றென இறீஇயரோ ஐய மற்றியாம் 
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே 
பாணர், பசுமீன் சொரிந்த மண்டைபோல 
எமக்கும் பெரும்புல வாகி 
நும்மும் பெறேஎம் இறீஇயரெம் முயிரே. 
-வெள்ளிவீதியார்.

170. குறிஞ்சி - தலைவி கூற்று 

பலவும் கூறுகவஃ தறியா தோரே 
அருவி தந்த நாட்குர லெருவை 
கயனா டியானை கவள மாந்தும் 
மலைகெழு நாடன் கேண்மை 
தலைபோ காமைநற் கறிந்தனென் யானே. 
-கருவூர்கிழார்.

171. மருதம் - தலைவி கூற்று 

காணினி வாழி தோழி யாணர்க் 
கடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட 
மீன்வலை மாப்பட் டாஅங் 
கிதுமற் றெவனோ நொதுமலர் தலையே. 
-பூங்கணுத்திரையார்.

172. நெய்தல் - தலைவி கூற்று 

தாஅ வலஞ்சிறை நொப்பறை வாவல் 
பழுமரம் படரும் பையுன் மாலை 
எமிய மாக ஈங்குத் துறந்தோர் 
தமிய ராக இனியர் கொல்லோ 
ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த 
உலைவாங்கு மிதிதோல் போலத் 
தலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே.
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.

173. குறிஞ்சி - தலைவன் கூற்று 

பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த 
பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப் 
பூண்மணி கறங்க வேறி நாணட் 
டழிபடர் உண்ணோய் வழிவழி சிறப்ப 
இன்னள் செய்த திதுவென முன்னின் 
றவள் பழி நுவலு மிவ்வூர் 
ஆங்குணர்ந் தமையினீங் கேகுமா றுளெனே. 
-மதுரைக் காஞ்சிப்புலவன்.

174. பாலை - தலைவி கூற்று 

பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக் 
கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி 
துதைமென் தூவித் துணைப்புற விரிக்கும் 
அத்தம் அரிய என்னார் நத்துறந்து 
பொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப் 
பொருளே மன்ற பொருளே 
அருளே மன்ற ஆருமில் லதுவே. 
-வெண்பூதியார்.

175. நெய்தல் - தலைவி கூற்று 

பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி 
உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை 
நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம் 
மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற் 
கிரங்கேன் தோழியீங் கென்கொ லென்று 
பிறர்பிறர் அறியக் கூறல் 
அமைந்தாங் கமைக அம்பலஃ தெவனே. 
-உலோச்சனார்.