குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகை


176. குறிஞ்சி - தோழி கூற்று 

ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன் 
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென் 
நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை 
வரைமுதிர் தேனிற் போகி யோனே 
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ 
வேறுபுல னன்னாட்டுப் பெய்த 
ஏறுடை மழையிற் கலிழும்என் னெஞ்சே. 
-வருமுலையாரித்தியார்.

177. நெய்தல் - தோழி கூற்று 

கடல்பா டவிந்து கானல் மயங்கித் 
துறைநீர் இருங்கழி புல்லென் றன்றே 
மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை 
அன்றிலும் பையென நரலும் இன்றவர் 
வருவர்கொல் வாழி தோழி நாந்தப் 
புலப்பினும் பிரிவாங் கஞ்சித் 
தணப்பருங் காமம் தண்டி யோரே. 
-உலோச்சனார்.

178. மருதம் - தோழி கூற்று 

அயிரை பரந்த அந்தண் பழனத் 
தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால் 
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள் 
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர் 
தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக் 
கரிய மாகிய காலைப் 
பெரிய தோன்றினிர் நோகோ யானே.
-நெடும்பல்லியத்தையார்.

179. குறிஞ்சி - தோழி கூற்று 

கல்லென் கானத்துக் கடமா வாட்டி 
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன 
செல்லல் ஐஇய உதுவெம் மூரே 
ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த 
குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப் 
பேதை யானை சுவைத்த 
கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே. 
-குட்டுவன் கண்ணனார்.

180. பாலை - தோழி கூற்று 

பழூஉப்பல் அன்ன பருவுகிர்ப் பாவடி 
இருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந் 
தறைமடி கரும்பின் கண்ணிடை யன்ன 
பைத லொருகழை நீடிய சுரனிறந்து 
எய்தினர் கொல்லோ பொருளே யல்குல் 
அவ்வரி வாடத் துறந்தோர் 
வன்ப ராகத்தாஞ் சென்ற நாட்டே.
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.

181. மருதம் - தலைவி கூற்று 

இதுமற் றெவனோ தோழி துனியிடை 
இன்னர் என்னும் இன்னாக் கிளவி 
இருமருப் பெருமை ஈன்றணிக் காரான் 
உழவன் யாத்த குழவியி னகலாது 
பாஅற் பைம்பயிர் ஆரு மூரன் 
திருமனைப் பலகடம் பூண்ட 
பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே. 
-கிளிமங்கலங் கிழார்.

182. குறிஞ்சி - தலைவன் கூற்று 

விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல் 
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி 
வெள்ளென் பணிந்துபிறர் எள்ளத் தோன்றி 
ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித் 
தெருவின் இயலவும் தருவது கொல்லோ 
கலிந்தவிர் அசைநடைப் பேதை 
மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே. 
-மடல் பாடிய மாதங்கீரனார்.

183. முல்லை - தலைவி கூற்று 

சென்ற நாட்ட கொன்றையம் பசுவீ 
நம்போற் பசக்குங் காலைத் தம்போற் 
சிறுதலைப் பிணையிற் றீர்த்த நெறிகோட் 
டிரலை மானையுங் காண்பர்கொல் நமரே 
புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை 
மென்மயில் எருத்தில் தோன்றும் 
கான வைப்பிற் புன்புலத் தானே. 
-ஔவையார்.

184. நெய்தல் - தலைவன் கூற்று 

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை 
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே 
இதற்கிது மாண்ட தென்னா ததற்பட் 
டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம் 
மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை 
நுண்வலைப் பரதவர் மடமகள் 
கண்வலைப் படுஉம் கான லானே. 
-ஆரிய வரசன் யாழ்ப்பிரமதத்தன்.

185. குறிஞ்சி - தலைவி கூற்று 

நுதல்பசப் பிவர்ந்து திதலை வாடி 
நெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடி நெகிழ்ந் 
தின்ன ளாகுத னும்மி னாகுமெனச் 
சொல்லி னெவனாந் தோழி பல்வரிப் 
பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக் 
கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள் 
கன்மிசைக் கவியு நாடற்கென் 
நன்மா மேனி யழிபடர் நிலையே. 
-மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்.

186. முல்லை - தலைவி கூற்று 

ஆர்கலி யேற்றொடு கார்தலை மணந்த 
கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி 
எயிறென முகையும் நாடற்குத் 
துயிறுறந் தனவால் தோழியென் கண்ணே. 
-ஒக்கூர் மாசாத்தியார்.

187. குறிஞ்சி - தலைவி கூற்று 

செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி 
சுரைபொழி தீம்பால் ஆர மாந்திப் 
பெருவரை நீழ லுகளு நாடன் 
கல்லினும் வலியன் தோழி 
வலிய னென்னாது மெலியுமென் னெஞ்சே. 
-கபிலர்.

188. முல்லை - தலைவி கூற்று 

முகைமுற் றினவே முல்லை முல்லையொடு 
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம் 
வாலிழை நெகிழ்த்தோர் வாரார் 
மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே. 
-மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்.

189. பாலை - தலைவன் கூற்று 

இன்றே சென்று வருவது நாளைக் 
குன்றிழி அருவியின் வெண்டேர் முடுக 
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி 
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக் 
காலியற் செலவின் மாலை எய்திச் 
சின்னிரை வால்வளைக் குறுமகள் 
பன்மா ணாக மணந்துவக் கும்மே. 
-மதுரை ஈழத்துப் பூதன்தேவனார்.

190. முல்லை - தலைவி கூற்று 

நெறியிருங் கதுப்பொடு பெருந்தோ ணீவிச் 
செறிவளை நெகிழச் செய்பொருட் ககன்றோர் 
அறிவர்கொல் வாழி தோழி பொறிவரி 
வெஞ்சின அரவின் பைந்தலை துமிய 
உரவுரும் உரறும் அரையிருள் நடுநாள் 
நல்லே றியங்குதோ றியம்பும் 
பல்லான் தொழுவத் தொருமணிக் குரலே. 
-பூதம் புலவனார்.

191. முல்லை - தலைவி கூற்று 

உதுக்கா ணதுவே யிதுவென் மொழிகோ 
நோன்சினை யிருந்த இருந்தோட்டுப் புள்ளினம் 
தாம்புணர்ந் தமையிற் பிரிந்தோ ருள்ளத் 
தீங்குரல் அகவக் கேட்டு நீங்கிய 
ஏதி லாள ரிவண்வரிற் போதிற் 
பொம்ம லோதியும் புனையல் 
எம்முந் தொடாஅ லென்குவே மன்னே. 
 

192. பாலை - தலைவி கூற்று 

ஈங்கே வருவர் இனையல் அவர்என 
அழாஅற்கோ இனியே நோய்நொந் துறைவி 
மின்னின் றூவி இருங்குயில் பொன்னின் 
உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை 
நறுந்தாது கொழுதும் பொழுதும் 
வறுங்குரற் கூந்தல் தைவரு வேனே. 
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.

193. முல்லை - தலைவி கூற்று 

மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன 
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை 
தட்டைப் பறையிற் கறங்கு நாடன் 
தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவின் 
மணந்தனன் மன்னெடுந் தோளே 
இன்று முல்லை முகைநாறும்மே. 
-அரிசில் கிழார்.

194. முல்லை - தலைவி கூற்று 

என்னெனப் படுங்கொல் தோழி மின்னுவர
வானோர் பிரங்கும் ஒன்றோ அதனெதிர் 
கான மஞ்ஞை கடிய ஏங்கும் 
ஏதில கலந்த இரண்டற்கென் 
பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே. 
-கோவர்த்தனார்.

195. நெய்தல் - தலைவி கூற்று 

சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேரப் 
படர்சுமந் தெழுதரு பையுள் மாலை 
யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர் 
இன்னா திரங்கும் என்னார் அன்னோ 
தைவரல் அசைவளி மெய்பாய்ந் தூர்தரச் 
செய்வுறு பாவை யன்னவென் 
மெய்பிறி தாகுதல் அறியா தோரே. 
-தேரதரனார்.

196. மருதம் - தோழி கூற்று 

வேம்பின் பைங்காயென் தோழி தரினே 
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே 
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் 
தைஇத் திங்கள் தண்ணிய தரினும் 
வெய்ய உவர்க்கும் என்றனிர் 
ஐய அற்றால் அன்பின் பாலே. 
-மிளைக் கந்தனார்.

197. நெய்தல் - தலைவி கூற்று

யாதுசெய் வாங்கொல் தோழி நோதக 
நீரெதிர் கருவிய காரெதிர் கிளைமழை 
ஊதையங் குளிரொடு பேதுற்று மயங்கிய 
கூதிர் உருவிற் கூற்றம் 
காதலர்ப் பிரிந்த எற்குறித்து வருமே. 
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.

198. குறிஞ்சி - தோழி கூற்று 

யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற் 
கரும்புமருண் முதல பைந்தாட் செந்தினை 
மடப்பிடித் தடக்கை யன்னபால் வார்பு 
கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குரற் 
படுகிளி கடிகஞ் சேறும் அடுபோர் 
எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத் 
தார நாறு மார்பினை 
வாரற்க தில்ல வருகுவள் யாயே.
-கபிலர்.

199. குறிஞ்சி - தலைவன் கூற்று 

பெறுவ தியையா தாயினும் உறுவதொன் 
றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க் 
கைவள் ளோரி கானந் தீண்டி 
எறிவளி கமழு நெறிபடு கூந்தல் 
மையீ ரோதி மாஅ யோள்வயின் 
இன்றை யன்ன நட்பி னிந்நோய் 
இறுமுறை எனவொன் றின்றி 
மறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே. 
-பரணர்.

200. முல்லை - தலைவி கூற்று 

பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ் 
மீமிசைச் தாஅய வீஇ சுமந்துவந் 
திழிதரும் புனலும் வாரார் தோழி 
மறந்தோர் மன்ற மறவா நாமே 
கால மாரி மாலை மாமழை 
இன்னிசை யுருமின முரலும் 
முன்வரல் ஏமம் செய்தகன் றோரே. 
-ஔவையார்.