குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகை


226. நெய்தல் - தலைவி கூற்று 

பூவொடு புரையுங் கண்ணும் வேயென 
விறல்வனப் பெய்திய தோளும் பிறையென 
மதிமயக் குறூஉ நுதலு நன்றும் 
நல்லமன் வாழி தோழி அல்கலும் 
தயங்குதிரை பொருத தாழை வெண்பூக் 
குருகென மலரும் பெருந்துறை 
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே. 
-மதுரை எழுத்தாளனார் சேந்தம்பூதனார்.

227. நெய்தல் - தோழி கூற்று 

பூண்வனைந் தன்ன பொலஞ்சூட்டு நேமி 
வாண்முகந் துமிப்ப வள்ளிதழ் குறைந்த 
கூழை நெய்தலு முடைத்திவண் 
தேரோன் போகிய கான லானே. 
-ஓதஞானியார்.

228. நெய்தல் - தலைவி கூற்று 

வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை 
குருகுளர் இறகின் விரிபுதோ டவிழும் 
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில் 
திரைவந்து பெயரும் என்பநத் துறந்து 
நெடுஞ்சே ணாட்டார் ஆயினும் 
நெஞ்சிற் கணியர் தண்கட னாட்டே. 
-செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்.

229. பாலை - கண்டோர் கூற்று 

இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன் 
புன்றலை யோரி வாங்குநள் பரியவும் 
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா 
தேதில் சிறுசெரு வுறுப மன்னோ 
நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் 
துணைமலர்ப் பிணைய லன்னவிவர் 
மணமகிழ் இயற்கை காட்டி யோயே.
-மோதாசானார்.

230. நெய்தல் - தோழி கூற்று 

அம்ம வாழி தோழி கொண்கன் 
தானது துணிகுவ னல்லன் யானென் 
பேதை மையாற் பெருந்தகை கெழுமி 
நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ 
வயச்சுறா வழங்குநீர் அத்தம் 
சின்னாள் அன்ன வரவறி யானே. 
-அறிவுடை நம்பியார்.

231. மருதம் - தலைவி கூற்று 

ஓரூர் வாழினும் சேரி வாரார் 
சேரி வரினும் ஆர முயங்கார் 
ஏதி லாளர் சுடலை போலக் 
காணாக் கழிப மன்னே நாணட்டு 
நல்லறி விழுந்த காமம் 
வில்லுமிழ் கணியிற் சென்றுசேட் படவே.
-பாலைபாடிய பெருங்கடுங்கோ.

232. பாலை - தோழி கூற்று 

உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும் 
வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ 
மரற்புகா வருந்திய மாவெருத் திரலை 
உரற்கா லியானை யொடித்துண் டெஞ்சிய 
யாஅ வரிநிழல் துஞ்சும் 
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே. 
-ஊண் பித்தையார்.

233. முல்லை - தலைவன் கூற்று 

கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி 
கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர் 
பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன 
காரெதிர் புறவி னதுவே உயர்ந்தோர்க்கு 
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் 
வரைகோ ளறியாச் சொன்றி 
நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே! 
-பேயனார்.

234. முல்லை - தலைவி கூற்று 

சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந் 
தெல்லறு பொழுதின் முல்லை மலரும் 
மாலை என்மனார் மயங்கி யோரே 
குடுமிக் கோழி நெடுநக ரியம்பும் 
பெரும்புலர் விடியலு மாலை 
பகலும் மாலை துணையி லோர்க்கே. 
-மிளைப்பெருங் கந்தனார்.

235. பாலை - தலைவன் கூற்று 

ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின் 
தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக் 
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி 
மரையின மாரு முன்றிற் 
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே. 
-மரயேண்டனார்.

236. நெய்தல் - தோழி கூற்று 

விட்டென விடுக்குநாள் வருக அதுநீ 
நேர்ந்தனை யாயின் தந்தனை சென்மோ 
குன்றத் தன்ன குவவுமணல் அடைகரை 
நின்ற புன்னை நிலந்தோய் படுசினை 
வம்ப நாரை சேக்கும் 
தண்கடற் சேர்ப்பநீ உண்டவென் னலனே. 
-நரிவெரூஉத் தலையார்.

237. பாலை - தலைவன் கூற்று 

அஞ்சுவ தறியா தமர்துணை தழீஇய 
நெஞ்சுதப் பிரிந்தன் றாயினும் எஞ்சிய 
கைபிணி நெகிழின்அஃ தெவனோ நன்றும் 
சேய வம்ம இருவா மிடையே 
மாக்கடல் திரையின் முழங்கி வலனேர்பு 
கோட்புலி வழங்குஞ் சோலை 
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே. 
-அள்ளூர் நன்முல்லையார்.

238. மருதம் - தோழி கூற்று 

பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை 
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி 
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும் 
தொண்டி யன்னவென் நலந்தந்து 
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே. 
-குன்றியனார்.

239. குறிஞ்சி - தலைவி கூற்று 

தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினவே 
விடுநாண் உண்டோ தோழி விடர்முகைச் 
சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள் 
நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி 
பாம்புமிழ் மணியின் தோன்றும் 
முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே. 
-ஆசிரியர் பெருங்கண்ணனார்.

240. முல்லை - தலைவி கூற்று 

பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக் 
கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர் 
வெருக்குப்பல் லுருவின் முல்லையொடு கஞலி 
வாடை வந்ததன் றலையும் நோய்பொரக் 
கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக் 
கடலாழ் கலத்திற் றோன்றி 
மாலை, மறையு மவர் மணிநெடுங் குன்றே.
-கொல்லனழிசியார்.

241. குறிஞ்சி - தலைவி கூற்று 

யாமெங் காமந் தாங்கவும் தாந்தம் 
கெழுதகை மையி னழுதன தோழி 
கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் 
மன்ற வேங்கை மலர்பத நோக்கி 
ஏறா திட்ட ஏமப் பூசல் 
விண்டோய் விடரகத் தியம்பும் 
குன்ற நாடற் கண்டவெங் கண்ணே. 
-கபிலர்.

242. முல்லை - செவிலித்தாய் கூற்று 

கானங் கோழி கவர்குரற் சேவல் 
ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப் 
புதனீர் வாரும் பூநாறு புறவிற் 
சீறூ ரோளே மடந்தை வேறூர் 
வேந்துவிடு தொழிலொடு செலினும் 
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே. 
-குழற்றத்தனார்.

243. நெய்தல் - தலைவி கூற்று 

மானடி யன்ன கவட்டிலை அடும்பின் 
தார்மணி யன்ன ஒண்பூக் கொழுதி 
ஒண்தொடி மகளிர் வண்ட லயரும் 
புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை 
உள்ளேன் தோழி படீஇயர்என் கண்ணே. 
-நம்பி குட்டுவனார்.

244. குறிஞ்சி - தோழி கூற்று 

பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத் 
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவு முயறல் 
கேளே மல்லேங் கேட்டனெம் பெரும 
ஓரி முருங்கப் பீலி சாய 
நன்மயில் வலைப்பட் டாங்கியாம் 
உயங்குதொறு முயங்கும் அறனில் யாயே. 
-கண்ணனார்.

245. நெய்தல் - தலைவி கூற்று 

கடலங் கான லாய மாய்ந்தவென் 
நலமிழந் ததனினு நனியின் னாதே 
வாள்போல் வாய கொழுமடல் தாழை 
மாலைவேல் நாட்டு வேலி யாகும் 
மெல்லம் புலம்பன் கொடுமை 
பல்லோர் அறியப் பரந்துவௌிப் படினே. 
-மாலைமாறனார்.

246. நெய்தல் - தலைவி கூற்று 

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை 
களிற்றுச்செவி யன்ன பாசடை மயக்கிப் 
பனிக்கழி துழவும் பானாள் தனித்தோர் 
தேர்வந்து பெயர்ந்த தென்ப வதற்கொண் 
டோரு மலைக்கு மன்னை பிறரும் 
பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர் 
இளையரு மடவரும் உளரே 
அலையாத் தாயரொடு நற்பா லோரே. 
-கபிலர்.

247. குறிஞ்சி - தோழி கூற்று 

எழின்மிக வுடைய தீங்கணிப் படூஉம் 
திறவோர் செய்வினை அறவ தாகும் 
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமா மிவ்வென 
ஆங்கறிந் திசினே தோழி வேங்கை 
வீயா மென்சினை வீயுக யானை 
ஆர்துயில் இயம்பு நாடன் 
மார்புரித் தாகிய மறுவில் நட்பே.
-சேந்தம் பூதனார்.

248. நெய்தல் - தோழி கூற்று 

அதுவர லன்மையோ அரிதே அவன்மார் 
புறுக வென்ற நாளே குறுகி 
ஈங்கா கின்றே தோழி கானல் 
ஆடரை புதையக் கோடை யிட்ட 
அடும்பிவர் மணற்கோ டூர நெடும்பனைக் 
குறிய வாகுந் துறைவனைப் 
பெரிய கூறி யாயறிந் தனளே. 
-உலோச்சனார்.

249. குறிஞ்சி - தலைவி கூற்று 

இனமயில் அகவு மரம்பயில் கானத்து 
நரைமுக ஊகம் பார்ப்பொடு பனிப்பப் 
படுமழை பொழிந்த சாரலவர் நாட்டுக் 
குன்ற நோக்கினென் தோழி 
பண்டை யற்றோ கண்டிசின் நுதலே. 
-கபிலர்.

250. பாலை - தலைவன் கூற்று 

பரலவல் படுநீர் மாந்தித் துணையோ 
டிரலை நன்மா னெறிமுத லுகளும் 
மாலை வாரா வளவைக் காலியற் 
கடுமாக் கடவுமதி பாக நெடுநீர்ப் 
பொருகயன் முரணிய உண்கண் 
தெரிதீங் கிளவி தெருமர லுயவே. 
-நாமலார் மகனார் இளங்கண்ணனார்.