குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகை


251. முல்லை - தோழி கூற்று 

மடவ வாழி மஞ்ஞை மாயினம் 
கால மாரி பெய்தென அதனெதிர் 
ஆலலு மாலின பிடவும் பூத்தன 
காரன் றிகுளை தீர்கநின் படரே 
கழிந்த மாரிக் கொழிந்த பழநீர் 
புதுநீர் கொளீஇய வுகுத்தரும் 
நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே. 
-இடைக்காடனார்.

252. குறிஞ்சி - தலைவி கூற்று 

நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த 
கொடிய னாகிய குன்றுகெழு நாடன் 
வருவதோர் காலை யின்முகந் திரியாது 
கடவுட் கற்பி னவனெதிர் பேணி 
மடவை மன்ற நீயெனக் கடவுபு 
துனியல் வாழி தோழி சான்றோர் 
புகழு முன்னர் நாணுப 
பழியாங் கொல்பவோ காணுங் காலே. 
-கிடங்கிற் குலபதி நக்கண்ணனார்.

253. பாலை - தோழி கூற்று 

கேளா ராகுவர் தோழி கேட்பின் 
விழுமிது கழிவ தாயினு நெகிழ் நூற் 
பூச்சே ரணையிற் பெருங்கவின் றொலைந்தநின் 
நாட்டுயர் கெடப்பி னீடலர் மாதோ 
ஒலிகழை நிவந்த ஓங்குமலைச் சாரற் 
புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை 
ஆறுசென் மாக்கள் சேக்கும் 
கோடுயர் பிறங்கன் மலையிறந் தோரே. 
-பூங்கண்ணனார்.

254. பாலை - தலைவி கூற்று 

இலையி லஞ்சினை யினவண் டார்ப்ப 
முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின் 
தலையலர் வந்தன வாரா தோழி 
துயிலின் கங்குல் துயிலவர் மறந்தனர் 
பயினறுங் கதுப்பிற் பாயலு முள்ளார் 
செய்பொருள் தரனசைஇச் சென்றோர் 
எய்தின ராலென வரூஉந் தூதே. 
-பார்காப்பானார்.

255. பாலை - தோழி கூற்று 

பொத்தில் காழ அத்த யாஅத்துப் 
பொரியரை முழுமுதல் உருவக் குத்தி 
மறங்கெழு தடக்கையின் வாங்கி உயங்குநடைச் 
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும் 
தடமருப் பியானை கண்டனர் தோழி 
தங்கட னிறீஇய ரெண்ணி யிடந்தொறும் 
காமர் பொருட்பிணிப் போகிய 
நாம்வெங் காதலர் சென்ற வாறே. 
-கடுகு பெருந்தேவனார்.

256. பாலை - தலைவன் கூற்று 

மணிவார்ந் தன்ன மாக்கொடி யறுகை 
பிணிகான் மென்கொம்பு பிணையொடு மார்ந்த 
மானே றுகளுங் கானம் பிற்பட 
வினைநலம் படீஇ வருது மவ்வரைத் 
தாங்கல் ஒல்லுமோ பூங்குழை யோயெனச் 
சொல்லா முன்னர் நில்லா வாகி 
நீர்விலங் கழுத லானா 
தேர்விலங் கினவால் தெரிவை கண்ணே. 
 

257. குறிஞ்சி - தலைவி கூற்று 

வேரு முதலும் கோடு மோராங்குத் 
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக் 
கீழ்தாழ் வன்ன வீழ்கோட் பலவின் 
ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம் 
அகலினும் அகலா தாகி 
இகலுந் தோழிநங் காமத்துப் பகையே. 
-உறையூர்ச் சிறுகந்தனார்.

258. மருதம் - தோழி கூற்று 

வாரலெஞ் சேரி தாரனின் றாரே 
அலரா கின்றாற் பெரும காவிரிப் 
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த 
ஏந்துகோட் டியானைச் சேந்தன் தந்தை 
அரியலம் புகவி னந்தோட்டு வேட்டை 
நிரைய ஒள்வாள் இளைஞர் பெருமகன் 
அழிசி ஆர்க்கா டன்ன விவள் 
பழிதீர் மாணலந் தொலைதல் கண்டே. 
-பரணர்.

259. குறிஞ்சி - தோழி கூற்று 

மழைசேர்ந் தெழுதரு மாரிக் குன்றத் 
தருவி யார்ந்த தண்ணறுங் காந்தள் 
முகையவிழந் தானா நாறு நறுநுதல் 
பல்லிதழ் மழைக்கண் மாஅ யோயே 
ஒல்வை யாயினுங் கொல்வை யாயினும் 
நீயளந் தறிவைநின் புரைமை வாய்போற் 
பொய்ம்மொழி கூறலஃ தெவனோ 
நெஞ்ச நன்றே நின்வயி னானே. 
-பரணர்.

260. பாலை - தோழி கூற்று 

குருகும் இருவிசும் பிவரும் புதலும் 
வரிவண் டூத வாய்நெகிழ்ந் தனவே 
சுரிவளைப் பொலிந்த தோளுஞ் செற்றும் 
வருவர்கொல் வாழி தோழி பொருவார் 
மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை 
வண்தேர்த் தொண்டையர் வழையம லடுக்கத்துக் 
கன்றி லோரா விலங்கிய 
புன்றா ளோமைய சுரனிறந் தோரே. 
-கல்லாடனார்.

261. குறிஞ்சி - தலைவி கூற்று 

பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய 
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள் 
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் 
நள்ளென் யாமத் தையெனக் கரையும் 
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண் 
துஞ்சா வாழி தோழி காவலர் 
கணக்காய் வகையின் வருந்தியென் 
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே. 
-கழார்க் கீரனெயிற்றியார்.

262. பாலை - தோழி கூற்று 

ஊஉ ரலரெழச் சேரி கல்லென 
ஆனா தலைக்கும் அறனி லன்னை 
தானே இருக்க தன்மனை யானே 
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க 
உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு 
விண்தொட நிவந்த விலங்குமலைக் கவாஅற் 
கரும்புநடு பாத்தி யன்ன 
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே. 
-பாலைபாடிய பெருங்கடுங்கோ.

263. குறிஞ்சி - தோழி கூற்று 

மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச் 
செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கத் 
தோற்ற மல்லது நோய்க்குமருந் தாகா 
வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப் 
பேஎய்க் கொளீஇயள் இவளெனப் படுதல் 
நோதக் கன்றே தோழி மால்வரை 
மழைவிளை யாடு நாடனைப் 
பிழையே மாகிய நாமிதற் படவே. 
-பெருஞ்சாத்தனார்.

264. குறிஞ்சி - தலைவி கூற்று 

கலிமழை கெழீஇய கான்யாற் றிகுகரை 
ஒலிநெடும் பீலி துயில்வர இயலி 
ஆடுமயி லகவும் நாடன் நம்மொடு 
நயந்தனன் கொண்ட கேண்மை 
பயந்தக் காலும் பயப்பொல் லாதே. 
-கபிலர்.

265. குறிஞ்சி - தோழி கூற்று 

காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது 
வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும் 
தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட 
கடனறி மாக்கள் போல இடன்விட் 
டிதழ்தளை யவிழ்ந்த ஏகல் வெற்பன் 
நன்னர் நெஞ்சத்தன் தோழி நின்னிலை 
யான்றனக் குரைத்தனெ னாகத் 
தானா ணினனிஃ தாகா வாறே. 
-கருவூர்க்கதப் பிள்ளை.

266. பாலை - தலைவி கூற்று 

நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன் 
றின்னா இரவின் இன்றுணை யாகிய 
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ 
மறப்புரும் பணைத்தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே. 
-நக்கீரனார்.

267. பாலை - தலைவன் கூற்று 

இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம் 
ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின் 
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன 
வாலெயி றூறிய வசையில் தீநீர்க் 
கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய 
ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும் 
உறன்முறை மரபிற் கூற்றத் 
தறனில் கோணற் கறிந்திசி னோரே. 
-காலெறி கடிகையார்.

268. குறிஞ்சி - தோழி கூற்று 

சேறிரோ எனச் செப்பலு மாற்றாம் 
வருவி ரோஎன வினவலும் வினவாம் 
யாங்குச் செய்வாங்கொல் தோழிபாம்பின் 
பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு 
நடுநாள் என்னார் வந்து 
நெடுமென் பணைத்தோள் அடைந்திசி னோரே. 
-கருவூர்ச் சேரமான் சாத்தனார்.

269. நெய்தல் - தலைவி கூற்று 

சேயாறு சென்று துனைபரி யசாவா 
துசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல 
வயச்சுறா எறிந்த புண்தணிந் தெந்தையும் 
நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும் 
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய 
உப்புவிளை கழனிச் சென்றனள் இதனால் 
பனியிரும் மரப்பிற் சேர்ப்பற் 
கினிவரி னௌியள் என்னும் தூதே. 
-கல்லாடனார்.

270. முல்லை - தலைவன் கூற்று 

தாழிருள் துமிய மின்னித் தண்ணென 
வீழுறை யினிய சிதறி ஊழிற் 
கடிப்பிடு முரசின் முழங்கி இடித்திடித்துப் 
பெய்தினி வாழியோ பெறுவான் யாமே 
செய்வினை முடித்த செம்ம லுள்ளமோ 
டிவளின் மேவின மாகிக் குவளைக் 
குறுந்தாள் நாள்மலர் நாறும் 
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே. 
-பாண்டியன் பன்னாடுதந்தான்.

271. மருதம் - தலைவி கூற்று 

அருவி யன்ன பருவறை சிதறி 
யாறுநிறை பகரு நாடனைத் தேறி 
உற்றது மன்னு மொருநாள் மற்றது 
தவப்பன் னாள்தோள் மயங்கி 
வௌவும் பண்பின் நோயா கின்றே. 
-அழிசி நச்சாத்தனார்.

272. குறிஞ்சி - தலைவன் கூற்று 

தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட 
வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த 
நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த 
புன்கண் மடமா னேர்படத் தன்னையர் 
சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக் 
குருதியொடு பறித்த செங்கோல் வாளி 
மாறுகொண் டன்ன வுண்கண் 
நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே. 
-ஒருசிறைப் பெரியனார்.

273. பாலை - தோழி கூற்று 

அல்குறு பொழுதில் தாதுமுகை தயங்கப் 
பெருங்காட் டுளரும் அசைவளி போலத் 
தண்ணிய கமழும் ஒண்ணுத லோயே 
நொந்தனை யாயிற் கண்டது மொழிவல் 
பெருந்தேன் கண்படு வரையின் முதுமால் 
பறியா தேறிய மடவோன் போல 
ஏமாந் தன்றிவ் வுலகம் 
நாமுளே மாகப் பிரியலன் தௌிமே. 
-சிறைக்குடி யாந்தையார்.

274. பாலை - தலைவன் கூற்று 

புறவுப் புறத்தன்ன புன்கா லுகாஅய்க் 
காசினை யன்ன நளிகனி யுதிர 
விடுகணை வில்லொடு பற்றிக் கோடிவர்பு 
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர் 
நீர்நசை வேட்கையி னார்மென்று தணியும் 
இன்னாக் கானமும் இனிய பொன்னொடு 
மணிமிடை யல்குல் மடந்தை 
அணிமுலை யாக முயகினஞ் செலினே. 
-உருத்திரனார்.

275. முல்லை - தோழி கூற்று 

முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக் 
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி 
எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை யினத்துப் 
புல்லார் நல்லான் பூண்மணி கொல்லோ 
செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு 
வல்வில் இளையர் பக்கம் போற்ற 
ஈர்மணற் காட்டாறு வரூஉம் 
தேர்மணி கொல்லாண் டியம்பிய வுளவே. 
-ஒக்கூர் மாசாத்தியார்.