குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகை


276. குறிஞ்சி - தலைவன் கூற்று 

பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும் 
பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவள் 
உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய 
தொய்பில் காப்போர் அறிதலும் அறியார் 
முறையுடை யரசன் செங்கோல் அவையத் 
தியான்றற் கடவின் யாங்கா வதுகொல் 
பெரிதும் பேதை மன்ற 
அளிதோ னேயிவ் வழுங்கல் ஊரே. 
-கோழிக் கொற்றனார்.

277. பாலை - தோழி கூற்று 

ஆசில் தெருவில் நாயில் வியன்கடைச் 
செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது 
ஓரிற் பிச்சை ஆர மாந்தி 
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் 
சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே 
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை 
எக்கால் வருவ தென்றி 
அக்கால் வருவரெங் காத லோரே. 
-ஓரிற் பிச்சையார்.

278. பாலை - தலைவி கூற்று 

உறுவளி உளரிய அந்தளிர் மாஅத்து 
முறிகண் டன்ன மெல்லென் சீறடிச் 
சிறுபசும் பாவையும் எம்மும் உள்ளார் 
கொடியர் வாழி தோழி கடுவன் 
ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந் 
தேற்பன ஏற்பன உண்ணும் 
பார்ப்புடை மந்திய மலையிறந் தோரே. 
-பேரி சாத்தனார்.

279. முல்லை - தலைவி கூற்று 

திரிமருப் பெருமை யிருணிற மையான் 
வரிமிடறு யாத்த பகுவாய்த் தெண்மணி 
புலம்புகொள் யாமத் தியங்குதொ றிசைக்கும் 
இதுபொழு தாகவும் வாரார் கொல்லோ 
மழைகழூஉ மறந்த மாயிருந் துறுகல் 
துகள்சூழ் யானையிற் பொலியத் தோன்றும் 
இரும்பல் குன்றம் போகித் 
திருந்திறைப் பணைத்தோள் உள்ளா தோரே. 
-மதுரை மருதனிளநாகனார்.

280. குறிஞ்சி - தலைவன் கூற்று 

கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் 
நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சி லோதிப் 
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம் 
ஒருநாள் புணரப் புணரின் 
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே. 
-நக்கீரனார்.

281. பாலை - தலைவி கூற்று 

வெண்மணற் பொதுளிய பைங்காற் கருக்கின் 
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட் 
டத்த வேம்பி னமலை வான்பூச் 
சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக் 
குன்றுதலை மணந்த கானம் 
சென்றனர் கொல்லோ சேயிழை நமரே. 
-குடவாயிற் கீரத்தனார்.

282. பாலை - தோழி கூற்று 

செவ்விகொள் வரகின் செஞ்சுவற் கலித்த 
கௌவை நாற்றின் காரிரு ளோரிலை 
நவ்வி நாண்மறி கவ்விக் கடன்கழிக்கும் 
காரெதிர் தண்புனங் காணிற் கைவளை 
நீர்திகழ் சிலம்பின் ஓராங் கவிழ்ந்த 
வெண்கூ தாளத் தந்தூம்பு புதுமலர் 
ஆர்கழல் புகுவ போலச் 
சோர்குவ வல்ல என்பர்கொல் நமரே. 
-நாகம் போத்தனார்.

283. பாலை - தலைவி கூற்று 

உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர் 
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச் 
சொல்லிய வன்மை தௌியக் காட்டிச் 
சென்றனர் வாழி தோழி யென்றும் 
கூற்றத் தன்ன கொலைவேல் மறவர் 
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த 
படுமுடை பருந்துபார்த் திருக்கும் 
நெடுமூ திடைய நீரில் ஆறே. 
-பாலை பாடிய பெருங்கடுங்கோ.

284. குறிஞ்சி - தோழி கூற்று 

பொருத யானைப் புகர்முகங் கடுப்ப 
மன்றத் துறுகல் மீமிசைப் பலவுடன் 
ஒண்செங் காந்தள் அவிழும் நாடன் 
அறவ னாயினும் அல்ல னாயினும் 
நம்மே சுவரோ தம்மிலர் கொல்லோ 
வரையிற் றாழ்ந்த வால்வெள் ளருவி 
கொன்னிலைக் குரம்பையி னிழிதரும் 
இன்னா திருந்தவிச் சிறுகுடி யோரே. 
-மிளைவேள் தித்தனார்.

285. பாலை - தலைவி கூற்று 

வைகல் வைகல் வைகவும் வாரார் 
எல்லா எல்லை எல்லையுந் தோன்றார் 
யாண்டுளர் கொல்லோ தோழி ஈண்டிவர் 
சொல்லிய பருவமோ இதுவே பல்லூழ் 
புன்புறப் பெடையொடு பயிரி யின்புற 
இமைக்கண் ஏதா கின்றோ ஞெமைத்தலை 
ஊனசைஇ யொருபருந் திருக்கும் 
வானுயர் பிறங்கல் மலையிறந் தோரே. 
-பூதத் தேவனார்.

286. குறிஞ்சி - தலைவன் கூற்று 

உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற் 
றமிழ்த மூறும்அஞ் செவ்வாய்க் கமழகில் 
ஆர நாறும் அறல்போற் கூந்தல் 
பேரமர் மழைக்கட் கொடிச்சி 
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே. 
-எயிற்றியனார்.

287. முல்லை - தோழி கூற்று 

அம்ம வாழி தோழி காதலர் 
இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ 
முந்நாற் றிங்க ணிறைபொறுத் தசைஇ 
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக் 
கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு 
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச் 
செழும்பல் குன்றம் நோக்கிப் 
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே.
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.

288. குறிஞ்சி - தலைவி கூற்று 

கறிவளர் அடுக்கத் தாங்கண் முறியருந்து 
குரங்கொருங் கிருக்கும் பெருங்க னாடன் 
இனிய னாகலி னினத்தி னியன்ற 
இன்னா மையினு மினிதோ 
இனிதெனப் படூஉம் புத்தே ணாடே. 
-கபிலர்.

289. முல்லை - தலைவி கூற்று 

வளர்பிறை போல வழிவழிப் பெருகி 
இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு 
குழைபிசைந் தனையே மாகிச் சாஅய் 
உழையர் அன்மையின் உழப்ப தன்றியும் 
மழையுந் தோழி மான்றுபட் டன்றே 
பட்ட மாரி படாஅக் கண்ணும் 
அவர்திறத் திரங்கு நம்மினும் 
நந்திறத் திரங்குமிவ் வழங்கல் ஊரே. 
-பெருங் கண்ணனார்.

290. நெய்தல் - தலைவி கூற்று 

காமந் தாங்குமதி யென்போர் தாமஃ 
தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல் 
யாமெங் காதலர்க் காணே மாயிற் 
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் 
கல்பொரு சிறுநுரை போல 
மெல்ல மெல்ல இல்லா குதுமே. 
-கல்பொரு சிறுநுரையார்.

291. குறிஞ்சி - தலைவன் கூற்று 

சுடுபுன மருங்கிற் கலித்த வேனற் 
படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே 
இசையின் இசையா இன்பா ணித்தே 
கிளியவள் விளியென எழலொல் லாவே 
அதுபுலந் தழுத கண்ணே சாரற் 
குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை 
வண்டுபயில் பல்லிதழ் கலைஇத் 
தண்துளிக் கேற்ற மலர்போன் றனவே. 
-கபிலர்.

292. குறிஞ்சி - தோழி கூற்று 

மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை 
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற் 
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை 
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான் 
பெண்கொலை புரிந்த நன்னன் போல 
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை 
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப் 
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே. 
-பரணர்.

293. மருதம் - தலைவி கூற்று 

கள்ளிற் கேளிர் ஆத்திரை யுள்ளூர்ப் 
பாளை தந்த பஞ்சியங் குறுங்காய் 
ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும் 
ஆதி யருமன் மூதூ ரன்ன 
அயவெள் ளாம்பல் அம்பகை நெறித்தழை 
தித்திக் குறங்கின் ஊழ்மா றலைப்ப 
வருமே சேயிழை யந்திற் 
கொழுநற் காணிய அளியேன் மன்னே. 
-கள்ளில் ஆத்திரையனார்.

294. நெய்தல் - தோழி கூற்று 

கடலுட னாடியும் கான லல்கியும் 
தொடலை யாயமொடு தழுவணி யயர்ந்தும் 
நொதுமலர் போலக் கதுமென வந்து 
முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே 
தித்தி பரந்த பைத்தக லல்குல் 
திருந்திழை துயல்வுக்கோட் டசைத்த பசுங்குழைத் 
தழையினும் உழையிற் போகான் 
தான்தந் தனன்யாய் காத்தோம் பல்லே. 
-அஞ்சிலாந்தையார்.

295. மருதம் - தோழி கூற்று 

உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும் 
தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி 
விழவொடு வருதி நீயே யிஃதோ 
ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை 
பெருநலக் குறுமகள் வந்தென 
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே. 
-தூங்கலோரியார்.

296. நெய்தல் - தலைவி கூற்று 

அம்ம வாழி தோழி புன்னை 
அலங்குசினை யிருந்த அஞ்சிறை நாரை 
உறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற் 
கள்நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் 
தண்ணந் துறைவற் காணின் முன்னின்று 
கடிய கழறல் ஓம்புமதி தொடியோள் 
இன்ன ளாகத் துறத்தல் 
நும்மின் தகுமோ என்றனை துணிந்தே. 
-பெரும்பாக்கனார்.

297. குறிஞ்சி - தோழி கூற்று 

அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர் 
வைவார் வாளி விறற்பகை பேணார் 
மாறுநின் றிறந்த ஆறுசெல் வம்பலர் 
உவலிடு பதுக்கை ஊரின் தோன்றும் 
கல்லுயர் நனந்தலை நல்ல கூறிப் 
புணர்ந்துடன் போதல் பொருளென 
உணர்ந்தேன் மன்றவவர் உணரா வூங்கே. 
-காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.

298. குறிஞ்சி - தோழி கூற்று 

சேரி சேர மெல்ல வந்துவந் 
தரிது வாய்விட் டினிய கூறி 
வைகல் தோறும் நிறம்பெயர்ந் துறையுமவன் 
பைதல் நோக்கம் நினையாய் தோழி 
இன்கடுங் கள்ளின் அகுதை தந்தை 
வெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர் 
மடப்பிடிப் பரிசில் மானப் 
பிறிதொன்று குறித்ததவ னெடும்புற நிலையே. 
-பரணர்.

299. நெய்தல் - தலைவி கூற்று 

இதுமற் றெவனோ தோழி முதுநீர்ப் 
புணரி திளைக்கும் புள்ளிமிழ் கானல் 
இணரவிழ் புன்னை யெக்கர் நீழற் 
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற் 
கண்டன மன்னெங் கண்ணே யவன்சொற் 
கேட்டன மன்னெஞ் செவியே மற்றவன் 
மணப்பின் மாணல மெய்தித் 
தணப்பின் நெகிழ்பவெந் தடமென் றோளே. 
-வெண்மணிப்பூதியார்.

300. குறிஞ்சி - தலைவன் கூற்று 

குவளை நாறுங் குவையிருங் கூந்தல் 
ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வாய்க் 
குண்டுநீர்த் தாமரைக் கொங்கின் அன்ன 
நுண்பல் தித்தி மாஅ யோயே 
நீயே, அஞ்ச லென்றவென் சொல்லஞ் சலையே 
யானே, குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்கும் 
கடல்சூழ் மண்டிலம் பெறினும் 
விடல்சூ ழலனான் நின்னுடை நட்பே. 
-சிறைக்குடி ஆந்தையார்