தொல்காப்பியம்

தொல்காப்பியம்

எழுத்ததிகாரம்


ஈர் எழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர் 
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர் 
ஆயிரு மூன்றே உகரம் குறுகு இடன்.    1 
அவற்றுள், 
ஈர் ஒற்றுத் தொடர்மொழி இடைத்தொடர் ஆகா.    2 
அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும் 
எல்லா இறுதியும் உகரம் நிறையும்.    3 
வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வரு வழி 
தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே.    4 
யகரம் வரு வழி இகரம் குறுகும் 
உகரக் கிளவி துவரத் தோன்றாது.    5 
ஈர் எழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் 
வேற்றுமை ஆயின் ஒற்று இடை இனம் மிக 
தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி.    6 
ஒற்று இடை இனம் மிகா மொழியுமார் உளவே 
அத் திறத்து இல்லை வல்லெழுத்து மிகலே.    7 
இடையொற்றுத் தொடரும் ஆய்தத்தொடரும் 
நடை ஆயியல என்மனார் புலவர்.    8 
வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் 
வந்த வல்லெழுத்து ஒற்று இடை மிகுமே 
மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற்று எல்லாம் 
வல்லொற்று இறுதி கிளை ஒற்று ஆகும்.    9 
மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை.--    10 
மெல்லொற்று வலியா மரப்பெயரும் உளவே.    11 
ஈர் எழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் 
அம் இடை வரற்கும் உரியவை உளவே 
அம் மரபு ஒழுகும் மொழிவயினான    12 
ஒற்று நிலை திரியாது அக்கொடு வரூஉம் 
அக் கிளைமொழியும் உள என மொழிப.    13 
எண்ணுப்பெயர்க் கிளவி உருபு இயல் நிலையும்.    14 
வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்.    15 
பெண்டு என் கிளவிக்கு அன்னும் வரையார்.    16 
யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய 
ஆய்த இறுதியும் உருபு இயல் நிலையும்.    17 
முன் உயிர் வரும் இடத்து ஆய்தப் புள்ளி 
மன்னல் வேண்டும் அல்வழியான.    18 
ஏனை முன் வரினே தான் நிலை இன்றே.    19 
அல்லது கிளப்பின் எல்லா மொழியும் 
சொல்லிய பண்பின் இயற்கை ஆகும்.    20 
வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே.    21 
சுட்டுச் சினை நீடிய மென்றொடர் மொழியும் 
யா வினா முதலிய மென்றொடர் மொழியும் 
ஆயியல் திரியா வல்லெழுத்து இயற்கை.    22 
யா வினா மொழியே இயல்பும் ஆகும்.    23 
அந் நால் மொழியும் தம் நிலை திரியா.    24 
உண்டு என் கிளவி உண்மை செப்பின் 
முந்தை இறுதி மெய்யொடும் கெடுதலும் 
மேல் நிலை ஒற்றே ளகாரம் ஆதலும் 
ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே 
வல்லெழுத்து வரூஉம் காலையான.    25 
இரு திசை புணரின் ஏ இடை வருமே.    26 
திரிபு வேறு கிளப்பின் ஒற்றும் உகரமும் 
கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் 
ஒற்று மெய் திரிந்து னகாரம் ஆகும் 
தெற்கொடு புணரும் காலையான.    27 
ஒன்று முதல் ஆக எட்டன் இறுதி 
எல்லா எண்ணும் பத்தன் முன் வரின் 
குற்றியலுகரம் மெய்யொடும் கெடுமே 
முற்ற இன் வரூஉம் இரண்டு அலங்கடையே.    28 
பத்தன் ஒற்றுக் கெட னகாரம் இரட்டல் 
ஒத்தது என்ப இரண்டு வரு காலை.    29 
ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது.    30 
நிறையும் அளவும் வரூஉம் காலையும் 
குறையாது ஆகும் இன் என் சாரியை.    31 
ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் 
நின்ற பத்தன் ஒற்றுக் கெட ஆய்தம் 
வந்து இடை நிலையும் இயற்கைத்து என்ப 
கூறிய இயற்கை குற்றியலுகரம் 
ஆறன் இறுதி அல் வழியான.    32 
முதல் ஈர் எண்ணின் ஒற்று ரகரம் ஆகும் 
உகரம் வருதல் ஆவயினான.    33 
இடை நிலை ரகரம் இரண்டு என் எண்ணிற்கு 
நடை மருங்கு இன்றே பொருள்வயினான.    34 
மூன்றும் ஆறும் நெடு முதல் குறுகும் 
மூன்றன் ஒற்றே பகாரம் ஆகும்.    35 
நான்கன் ஒற்றே றகாரம் ஆகும்.    36 
ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும்.    37 
எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும்.    38 
ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் 
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் 
பஃது என் கிளவி ஆய்த பகரம் கெட 
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி 
ஒற்றிய தகரம் றகரம் ஆகும்.    39 
அளந்து அறி கிளவியும் நிறையின் கிளவியும் 
கிளந்த இயல தோன்றும் காலை.    40 
மூன்றன் ஒற்றே வந்தது ஒக்கும்.    41 
ஐந்தன் ஒற்றே மெல்லெழுத்து ஆகும்.    42 
க ச த ப முதல் மொழி வரூஉம் காலை.    43 
ந ம வ என்னும் மூன்றொடு சிவணி 
அகரம் வரினும் எட்டன் முன் இயல்பே.    44 
ஐந்தும் மூன்றும் ந ம வரு காலை 
வந்தது ஒக்கும் ஒற்று இயல் நிலையே.    45 
மூன்றன் ஒற்றே வகாரம் வரு வழி 
தோன்றிய வகாரத்து உரு ஆகும்மே.    46 
நான்கன் ஒற்றே லகாரம் ஆகும்.    47 
ஐந்தன் ஒற்றே முந்தையது கெடுமே.-    48 
முதல் ஈர் எண்ணின் முன் உயிர் வரு காலை 
தவல் என மொழிப உகரக் கிளவி 
முதல் நிலை நீடல் ஆவயினான.    49 
மூன்றும் நான்கும் ஐந்து என் கிளவியும் 
தோன்றிய வகரத்து இயற்கை ஆகும்.    50 
மூன்றன் முதல் நிலை நீடலும் உரித்தே 
உழக்கு என் கிளவி வழக்கத்தான.    51 
ஆறு என் கிளவி முதல் நீடும்மே.    52 
ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது 
இன் பெறல் வேண்டும் சாரியை மொழியே.    53 
நூறு முன் வரினும் கூறிய இயல்பே.    54 
மூன்றன் ஒற்றே நகாரம் ஆகும்.    55 
நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா.    56 
ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்தற்றே 
முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் 
நூறு என் கிளவி நகாரம் மெய் கெட 
ஊ ஆ ஆகும் இயற்கைத்து என்ப 
ஆயிடை வருதல் இகார ரகாரம் 
ஈறு மெய் கெடுத்து மகாரம் ஒற்றும்.    57 
ஆயிரக் கிளவி வரூஉம் காலை 
முதல் ஈர் எண்ணின் உகரம் கெடுமே.    58 
முதல் நிலை நீடினும் மானம் இல்லை.    59 
மூன்றன் ஒற்றே வகாரம் ஆகும்.    60 
நான்கன் ஒற்றே லகாரம் ஆகும்.    61 
ஐந்தன் ஒற்றே யகாரம் ஆகும்.    62 
ஆறன் மருங்கின் குற்றியலுகரம் 
ஈறு மெய் ஒழியக் கெடுதல் வேண்டும்.    63 
ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது 
இன் பெறல் வேண்டும் சாரியை மரபே.    64 
நூறாயிரம் முன் வரூஉம் காலை 
நூறன் இயற்கை முதல் நிலைக் கிளவி.    65 
நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு 
ஈறு சினை ஒழிய இன ஒற்று மிகுமே.    66 
அவை ஊர் பத்தினும் அத் தொழிற்று ஆகும்.    67 
அளவும் நிறையும் ஆயியல் திரியா 
குற்றியலுகரமும் வல்லெழுத்து இயற்கையும் 
முன் கிளந்தன்ன என்மனார் புலவர்.    68 
ஒன்று முதல் ஆகிய பத்து ஊர் கிளவி 
ஒன்று முதல் ஒன்பாற்கு ஒற்று இடை மிகுமே 
நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும்.    69 
ஆயிரம் வரினே இன் ஆம் சாரியை 
ஆவயின் ஒற்று இடை மிகுதல் இல்லை.    70 
அளவும் நிறையும் ஆயியல் திரியா.    71 
முதல் நிலை எண்ணின் முன் வல்லெழுத்து வரினும் 
ஞ ந மத் தோன்றினும் ய வ வந்து இயையினும் 
முதல் நிலை இயற்கை என்மனார் புலவர்.    72 
அதன் நிலை உயிர்க்கும் யா வரு காலை 
முதல் நிலை ஒகரம் ஓ ஆகும்மே 
ரகரத்து உகரம் துவரக் கெடுமே.    73 
இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் 
வழங்கு இயல் மா என் கிளவி தோன்றின் 
மகர அளவொடு நிகரலும் உரித்தே.    74 
ல ன என வரூஉம் புள்ளி இறுதி முன் 
உம்மும் கெழுவும் உளப்படப் பிறவும் 
அன்ன மரபின் மொழியிடைத் தோன்றி 
செய்யுள் தொடர்வயின் மெய் பெற நிலையும் 
வேற்றுமை குறித்த பொருள்வயினான.    75 
உயிரும் புள்ளியும் இறுதி ஆகி 
குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி 
நெறிப் பட வாராக் குறைச்சொற் கிளவியும் 
உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின் 
ஐம் பால் அறியும் பண்பு தொகு மொழியும் 
செய்யும் செய்த என்னும் கிளவியின் 
மெய் ஒருங்கு இயலும் தொழில் தொகு மொழியும் 
தம் இயல் கிளப்பின் தம் முன் தாம் வரூஉம் 
எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும் 
அன்னவை எல்லாம் மருவின் பாத்திய 
புணர் இயல் நிலையிடை உணரத் தோன்றா.    76 
கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் 
வழங்கு இயல் மருங்கின் மருவொடு திரிநவும் 
விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் 
வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் 
நன் மதி நாட்டத்து என்மனார் புலவர்.    77