புறநானூறு

புறநானூறு

பாடல்கள்


151. அடைத்த கதவினை! 
பாடியவர் : பெருந்தலைச் சாத்தனார். 
பாடப்பட்டோன்: இளவிச்சிக்கோ. திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 
குறிப்பு: இளங் கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கு இருந்தன. அவண் சென்ற புலவர் இளங்கண்டீரக் கோவைபப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லராயினர். 'என்னை என் செயப் புல்லீராயினர்' என அவன் கேட்கப் புலவர் பாடிய செய்யுள் இது. (இருவரது குடியியல்புகளையும் கூறிப் பாடுதலால் இயன்மொழி ஆயிற்று.) 

பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப,
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
கிழவன் சேட்புலம் படரின், இழை அணிந்து,
புன்தலை மடப்பிடி பரிசிலாகப்,
பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீ ரக்கோன் ஆகலின், நன்றும்
முயங்கல் ஆன்றிசின், யானே: பொலந்தேர்
நன்னன் மருகன் அன்றியும், நீயும்
முயங்கற்கு ஒத்தனை மன்னே: வயங்கு மொழிப்
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை 
அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்
மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே.

152. பெயர் கேட்க நாணினன்!
பாடியவர் : வண்பரணர். 
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி. 
திணை: பாடாண். 
துறை: பரிசில் விடை. 
சிறப்பு: ஓரியது பெருமித நிலையின் விளக்கம்; அவன் வேட்டுவக் குடியினன் என்பது.  (பரிசில் பெற்ற புலவர், அவனை வியந்து பாடியது இச் செய்யுள்) 

`வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,
புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான்: வெறுக்கைநன்கு உடையன்:
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்,
ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;
கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்:
எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பையென இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தமின்` என்று,
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,
மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்,
`கோ`வெனப் பெயரிய காலை, ஆங்கு அது
தன்பெயர் ஆகலின் நாணி, மற்று, யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப் போர்` என,
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்,
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் கு வையடும் விரைஇக், `கொண்ம்` எனச்,
சுரத்துஇடை நல்கி யோனே : விடர்ச் சிமை
ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்,
ஓம்பா ஈகை விறல்வெய் யோனே!

153. கூத்தச் சுற்றத்தினர்! 
பாடியவர் : வண்பரணர். 
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி. 
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 

மழையணி குன்றத்துக் கிழவன், நாளும்,
இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்,
சுடர்விடு பசும்பூண், சூர்ப்பு அமை முன்கை,
அடுபோர் ஆனா, ஆதன் ஓரி
மாரி வண்கொடை காணிய, நன்றும்
சென்றது மன், எம் கண்ணுளங் கடும்பே;
பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வால்நார்த் தொடுத்த கண்ணியும், கலனும், 
யானை இனத்தொடு பெற்றனர்; நீங்கிப்,
பசியார் ஆகல் மாறுகொல்; விசிபிணிக்
கூடுகொள் இன்னியம் கறங்க,
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே?

154. இரத்தல் அரிது! பாடல் எளிது! 
பாடியவர் : மோசிகீரனார். 
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான். 
திணை: பாடாண். 
துறை: பரிசில் துறை. 

திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்,
அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர், மாந்தர் : அதுபோல்,
அரசர் உழைய ராகவும், புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர், புலவர் ; அதனால்,
`யானும்,`பெற்றது ஊதியம்; பேறியாது?` என்னேன்;
உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே;
`ஈயென இரத்தலோ அரிதே! நீ அது
நல்கினும், நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை, அறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவி நின் 
கொண்டுபெருங்கானம், பாடல் எனக்கு எளிதே.

155. ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!
பாடியவர் : மோசி கீரனார். 
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான். 
திணை: பாடாண். 
துறை: பாணாற்றுப்படை 

வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ,
`உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க``எனக்,
கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின்;
பாழ்ஊர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு,
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண்பெருங்காலத்துக் கிழவன் 
தண்தார் அகலம் நோக்கின், மலர்ந்தே.

156. இரண்டு நன்கு உடைத்தே! 
பாடியவர் : மோசிகீரனார். 
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 

ஒன்றுநன் குடைய பிறர் குன்றம்; என்றும்
இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்; அ·தான்று
நிறையருந் தானை வேந்தரைத்
திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே.

157. ஏறைக்குத் தகுமே!
பாடியவர் : குறமகள் இளவெயினி. 
பாடப்பட்டோன்: ஏறைக் கோன். 
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 
சிறப்பு: ஏறைக் கோன் குறவர் குடியினன் என்பது. 

தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்,
பிறர்கை யறவு தான்நா ணுதலும்,
படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்,
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்,
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன்
சிலைசெல மலர்ந்த மார்பின், கொலைவேல்,
கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்:
ஆடு மழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை,
எற்படு பொழுதின், இனம்தலை மயங்கிக்,
கட்சி காணாக் கடமான் நல்லேறு
மடமான் நாகுபிணை பயிரின், விடர்முழை
இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும்
பெருங்கல் நாடன்-எம் ஏறைக்குத் தகுமே.

158. உள்ளி வந்தெனன் யானே! 
பாடியவர்; பெருஞ்சித்திரனார். 
பாடப்பட்டோன் : குமணன். 
திணை; பாடாண். 
துறை: வாழ்த்தியல்; பரிசில் கடாநிலையும் ஆம். 
சிறப்பு ; எழுவர் வள்ளல்கள் என்னும் குறிப்பு. 

முரசுகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்,
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்;
காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப்போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரைக், கூர்வேல்,
கூவிளங் கண்ணிக், கொடும்பூண், எழினியும்;
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை,
அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்,
பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்,
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்,
கொள்ளார் ஓட்டிய, நள்ளையும்; என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, அழி வரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கென, விரைந்து இவண்
உள்ளி வந்தனென், யானே; விசும்புஉறக்
கழைவளர் சிலம்பின் வழையடு நீடி,
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முட்புற முதுகனி பெற்ற கடுவன் 
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!
இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!
இசைமேந் தோன்றிய வண்மையடு,
பகைமேம் படுக, நீ ஏந்திய வேலே!

159. கொள்ளேன்! கொள்வேன்! 
பாடியவர்; பெருஞ்சித்திரனார். 
பாடப்பட்டோன் : குமணன். 
திணை; பாடாண். 
துறை: பரிசில் கடாநிலை. 
சிறப்பு : வறுமை வாழ்வின் ஒரு கூற்றைக் காட்டும் சொல்லோவியம். 

`வாழும் நாளடு யாண்டுபல உண்மையின்,
தீர்தல்செல் லாது, என் உயிர்` எனப் பலபுலந்து,
கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி,
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று,
முன்றிற் போகா முதுர்வினள் யாயும்;
பசந்த மேனியடு படர்அட வருந்தி,
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள், பெரிது அழிந்து,
குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு, உப்பின்று,
நீர்உலை யாக ஏற்றி, மோரின்று,
அவிழ்பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத்,
துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்;
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை.
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்,
ஈத்த நின்புகழ் ஏத்தித், தொக்க என்,
பசிதினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப-
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ 
இன்புற விடுதி யாயின், சிறிது
குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண!
அதற்பட அருளல் வேண்டுவல்-விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றல்! நிற் பாடிய யானே.

160. புலி வரவும் அம்புலியும்! 
பாடியவர்; பெருஞ்சித்திரனார். 
பாடப்பட்டோன் : குமணன். 
திணை; பாடாண். 
துறை: பரிசில் கடாநிலை. 
சிறப்பு : வறுமையின் ஒரு சோகமான காட்சி பற்றிய சொல்லோவியம். (பரிசிலை விரும்பி, அரசனைப் புகழ்ந்து வேண்டுகின்றார் புலவர்). 

‘உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த
முளிபுல் கானம் குழைப்பக், கல்லென
அதிர்குரல் ஏறோடு துளிசொரிந் தாங்குப்
பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை
அவிழ்புகுவு அறியா தாகலின், வாடிய
நெறிகொள் வரிக்குடர் குனிப்பத் தண்ணெனக்,
குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்,
சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்
“கோடின் றாக, பாடுநர் கடும்பு” என,
அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி,
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்,
மட்டார் மறுகின், முதிரத் தோனே:
செல்குவை யாயின், நல்குவை, பெரிது` எனப்,
பல்புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து,
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று,
இல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பாலில் வறுமுலைசுவைத்தனன்பெறாஅன்,
கூழும் சோறும் கடைஇ, ஊழின்
உள்ளில் வருங்கலம் திறந்து, அழக் கண்டு,
மறப்புலி உரைத்தும், மதியங் காட்டியும்,
நொந்தனள் ஆகி, `நுந்தையை உள்ளிப்,
பொடிந்தநின் செவ்வி காட்டு` எனப் பலவும்
வினவல் ஆனா ளாகி, நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்,
செல்லாச் செல்வம் மிகுந்தனை, வல்லே
விடுதல் வேண்டுவல் அத்தை; படுதிரை
நீர்சூழ் நிலவரை உயர நின் 
சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே.