அகநானூறு

அகநானூறு

களிற்றியாணை நிரை


73
பாடியவர்: எருமை வெளியனார்,
திணை:   பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய்கனி வீழ் குழல் அகப்படத் தைஇ
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு
ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க
அணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய்  5
நின் நோய்த் தலையையும் அல்லை தெறுவர
என் ஆகுவள் கொல் அளியள் தான் என
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
இருவேம் நம் படர் தீர வருவது  10
காணிய வம்மோ காதல் அம் தோழி
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
மடி பதம் பார்க்கும் வயமான் துப்பின்
ஏனல் அம் சிறு தினைச் சேணோன் கையதைப்
பிடிக்கை அமைந்த கனல்வாய்க் கொள்ளி  15
விடு பொறிச் சுடரின் மின்னி அவர்
சென்ற தேஎத்து நின்றதால் மழையே.

74
பாடியவர்: மதுரைக் கவுணியன் பூதத்தனார், 
திணை:  முல்லைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்தத்
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை
குருதி உருவின் ஒண் செம் மூதாய்
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்பப்  5
பைங்கொடி முல்லை மென் பதப் புது வீ
வெண் களர் அரி மணல் நன் பல் தாஅய்
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்
கருங்கோட்டு இரலைக் காமர் மடப் பிணை
மருண்ட மான் நோக்கம் காண்தொறும் நின் நினைந்து  10
திண் தேர் வலவ கடவு எனக் கடைஇ
இன்றே வருவர் ஆன்றிகம் பனி என
வன் புறை இன் சொல் நன் பல பயிற்றும்
நின் வலித்து அமைகுவென் மன்னோ அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்திக் கொடுங்கோல்  15
கல்லாக் கோவலர் ஊதும்
வல்வாய் சிறு குழல் வருத்தாக் காலே!

75
பாடியவர்: மதுரைப் போத்தனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவன் தலைவியிடம் சொன்னது

அருள் அன்று ஆக ஆள் வினை ஆடவர்
பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது
எரி சினம் தவழ்ந்த இருங்கடற்று அடை முதல்
கரிகு உதிர் மரத்த கான வாழ்க்கை  5
அடு புலி முன்பின் தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும்
அண்ணல் நெடு வரை ஆம் அறப் புலர்ந்த
கல் நெறிப் படர்குவர் ஆயின் நல் நுதல்
செயிர் தீர் கொள்கை சில் மொழி துவர் வாய்  10
அவிர் தொடிய முன் கை ஆய் இழை மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
சென்று படு விறல் கவின் உள்ளி என்றும்
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும்  15
தருநரும் உளரோ இவ் உலகத்தான் என
மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன
அம் மா மேனி ஐது அமை நுசுப்பின்
பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்
மெல் இயல் குறுமகள் புலந்து பல கூறி  20
ஆனா நோயை ஆக யானே
பிரியச் சூழ்தலும் உண்டோ
அரிது பெறு சிறப்பின் நின் வயினானே?

76
பாடியவர்: பரணர், 
திணை:  மருதத் திணை 
பரத்தை சொன்னது

மண்கனை முழவொடு மகிழ் மிகத் தூங்கத்
தண்துறை ஊரன் எம் சேரி வந்தென
இன் கடுங்கள்ளின் அஃதை களிற்றொடு
நல்கலம் ஈயும் நாள் மகிழ் இருக்கை
அவை புகு பொருநர் பறையின் ஆனாது  5
கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில்
கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன்
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை தெரியல்
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ என
ஆதிமந்தி பேதுற்று இனைய  10
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்
அம் தண் காவிரி போல
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின் யானே.

77
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

நல் நுதல் பசப்பவும் ஆள் வினை தரீஇயர்
துன் அருங்கானம் துன்னுதல் நன்று எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னாச்
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சு வெய்துற
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும்  5
குடி பதிப் பெயர்ந்த சுட்டுடை முது பாழ்
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின்
உயிர் திறம் பெயர நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇத் தெறுவச்  10
செஞ்செவி எருவை அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின் சீறூர்ப்
புல் அரை இத்திப் புகர் படு நீழல்
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை
வானவன் மறவன் வணங்கு வில் தடக்கை  15
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த
திருந்து இலை எஃகம் போல
அருந்துயர் தரும் இவள் பனி வார் கண்ணே.

78
பாடியவர்: மதுரை நக்கீரனார், 
திணை:  குறிஞ்சித் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்துப்
பொறி நுதல் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல்
இரும் பிணர்த் தடக் கையின் ஏமுறத் தழுவ  5
கடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல்
தேம்பிழி நறவின் குறவர் முன்றில்
முந்தூழ் ஆய் மலர் உதிரக் காந்தள்
நீடு இதழ் நெடுந்துடுப்பு ஒசியத் தண்ணென
வாடை தூக்கும் வருபனி அற்சிரம்  10
நம் இல் புலம்பின் நம் ஊர்த் தமியர்
என் ஆகுவர் கொல் அளியர் தாம் என
எம் விட்டு அகன்ற சின்னாள் சிறிதும்
உள்ளியும் அறிதிரோ ஓங்கு மலை நாட
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை  15
வாய்மொழிக் கபிலன் சூழச் சேய் நின்று
செழுஞ்செய்ந்நெல்லின் விளை கதிர் கொண்டு
தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி
யாண்டு பல கழிய வேண்டு வயிற் பிழையாது
ஆள் இடூஉக் கடந்து வாள் அமர் உழக்கி  20
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய
கடும் பரிப் புரவிக் கைவண் பாரி
தீம் பெரும் பைஞ்சுனைப் பூத்த
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே.

79
பாடியவர்: குடவாயில் கீரத்தனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

தோள் பதன் அமைத்த கருங்கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி வினைப் படர்ந்து
கல் உறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன் புலம் துமியப் போகிக் கொங்கர்  5
படுமணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந்நிலக் குரூஉத் துகள்
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம் நம்மொடு துணைப்ப
வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர  10
வருந்தினை வாழி என் நெஞ்சே இருஞ்சிறை
வளைவாய்ப் பருந்தின் வான் கண் பேடை
ஆடு தொறு கனையும் அவ்வாய்க் கடும் துடிக்
கொடு வில் எயினர் கோள் சுரம் படர
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை  15
கல் பிறங்கு அத்தம் போகி
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே.

80
பாடியவர்: மருங்கூர் கிழார் பெருங்கண்ணணார், 
திணை:  நெய்தற் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

கொடுந்தாள் முதலையொடு கோட்டு மீன் வழங்கும்
இருங்கழி இட்டுச் சுரம் நீந்தி இரவின்
வந்தோய் மன்ற தண் கடல் சேர்ப்ப
நினக்கு எவன் அரியமோ யாமே எந்தை
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த 5
பல் மீன் உணங்கல் படுபுள் ஓப்புதும்
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண் பன் மலரக் கவட்டு இலை அடும்பின்
செங்கேழ் மென் கொடி ஆழி அறுப்ப
இன மணிப் புரவி நெடுந்தேர் கடைஇ  10
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண் நறும் பைந்தாது உறைக்கும்
புன்னை அம் கானல் பகல் வந்தீமே.

81
பாடியவர்: ஆலம்பேரி சாத்தனார், 
திணை:  பாலைத் திணை, 
தோழி தலைவனிடம் சொன்னது

நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
ஓங்கு சினை இருப்பைத் தீம் பழம் முனையின்
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங்கோடு
இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும்  5
மண் பக வறந்த ஆங்கண் கண் பொரக்
கதிர் தெறக் கவிழ்ந்த உலறு தலை நோன் சினை
நெறி அயல் மராஅம் ஏறிப் புலம்பு கொள
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
வெம் முனை அருஞ்சுரம் நீந்திச் சிறந்த  10
செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர்
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
மா வண் கடலன் விளங்கில் அன்ன எம்
மை எழில் உண்கண் கலுழ
ஐய சேறிரோ அகன்று செய் பொருட்கே?  15

82
பாடியவர்: கபிலர், 
திணை:  குறிஞ்சித் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை ஆக
பாடு இன் அருவிப் பனி நீர் இன்னிசைத்
தோடு அமை முழவின் துதை குரல் ஆகக்
கணக் கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு  5
மலைப் பூஞ்சாரல் வண்டு யாழ் ஆக
இன் பல் இமிழ் இசை கேட்டுக் கலி சிறந்து
மந்தி நல் அவை மருள்வன நோக்கக்
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில்
நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன்  10
உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்ப்
புலர் குரல் ஏனல் புழையுடை ஒரு சிறை
மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர்
பலர் தில் வாழி தோழி அவருள்  15
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி
ஓர் யான் ஆகுவது எவன் கொல்
நீர் வார் கண்ணொடு நெகிழ்தோளேனே.

83
பாடியவர்: கல்லாடனார், 
திணை:  பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

வலஞ்சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடி
கறை அடி மடப்பிடி கானத்து அலறக்
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்து
கருங்கால் மராஅத்து கொழுங் கொம்பு பிளந்து  5
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்  10
சேயர் என்னாது அன்பு மிகக் கடைஇ
எய்த வந்தனவால் தாமே நெய்தல்
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
ஏந்து எழில் மழைக்கண் எம் காதலி குணனே.

84
பாடியவர்: மதுரை எழுத்தாளன், 
திணை:  முல்லைத் திணை 
தலைவன் சொன்னது, பாசறையில் இருந்து

மலை மிசைக் குலைஇய உருகெழு திரு வில்
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கித்
தாழ் பெயல் பெரு நீர் வலன் ஏர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இரு நிலம் கவினிய ஏமுறு காலை  5
நெருப்பின் அன்ன சிறு கண் பன்றி
அயிர்க் கண் படாஅர்த் துஞ்சு புறம் புதைய
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும்
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்
சீறூரோளே ஒண்ணுதல் யாமே  10
எரி புரை பன் மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
கள் ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
அருந்திறை கொடுப்பவும் கொள்ளான் சினம் சிறந்து  15
வினை வயின் பெயர்க்குந் தானைப்
புனை தார் வேந்தன் பாசறையேமே.