அகநானூறு

அகநானூறு

நித்திலக்கோவை


374
பாடியவர்: இடைக்காடனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

மாக் கடல் முகந்து மாதிரத்து இருளி
மலர்தலை உலகம் புதைய வலன் ஏர்பு
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ
போழ்ந்த போலப் பலவுடன் மின்னி
தாழ்ந்த போல நனியணி வந்து  5
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி
இடியும் முழக்கும் இன்றிப் பாணர்
வடியுறு நல்யாழ் நரம்பு இசைத்தன்ன
இன் குரல் அழி துளி தலைஇ நன் பல
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறைச்  10
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி
மணி மண்டு பவளம் போலக் காயா
அணிமிகு செம்மல் ஒளிப்பன மறையக்
கார் கவின் கொண்ட காமர் காலைச்  15
செல்க தேரே நல் வலம் பெறுந
பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்
திருந்திழை அரிவை விருந்து எதிர் கொளவே.

375
பாடியவர்: இடையன் சேந்தங்கொற்றனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

சென்று நீடுநர் அல்லர் அவர் வயின்
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை
அம்பு தொடை அமைதி காண்மார் வம்பலர்
கலன் இலர் ஆயினும் கொன்று புள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலைக்  5
கண நரி இனனொடு குழீஇ நிணனருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
அரை சேர் யாத்த வெண் திரள் வினை விறல்
எழாஅத் திணி தோள் சோழர் பெருமகன்  10
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ்சென்னி
குடிக் கடன் ஆகலின் குறை வினை முடிமார்
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்  15
அஞ்சுவரு மரபின் வெஞ்சுரம் இறந்தோர்
நோய் இலர் பெயர்தல் அறியின்
ஆழல மன்னோ தோழி என் கண்ணே.

376
பாடியவர்: பரணர், 
திணை: மருதத் திணை 
பரத்தை தலைவனிடம் சொன்னது

செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென் மன்
கல்லா யானை கடி புனல் கற்றென
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை
ஒலி கதிர்க் கழனிக் கழாஅர் முன்துறை
கலி கொள் சுற்றமொடு கரிகால் காணத்  5
தண் பதம் கொண்டு தவிர்ந்த இன்னிசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடி புரளக்
கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று
இரும் பொலப் பாண்டில் மணியொடு தெளிர்ப்பப்
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து  10
காவிரி கொண்டு ஒளித்தாங்கு மன்னோ
நும் வயிற் புலத்தல் செல்லேம் எம் வயின்
பசந்தன்று காண்டிசின் நுதலே அசும்பின்
அம் தூம்பு வள்ளை அழற்கொடி மயக்கி
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரியத்  15
துய்த்தலை முடங்கு இறாத் தெறிக்கும் பொற்புடைக்
குரங்கு உளைப் புரவிக் குட்டுவன்
மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே.

377
பாடியவர்: மாறோகத்து காமக்கணி நப்பாலத்தனார், 
திணை: பாலைத் திணை
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

கோடை நீடலின் வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு நெறி பட மறுகி
நுண் பல் எறும்பி கொண்டளைச் செறித்த
வித்தா வல்சி வீங்கு சிலை மறவர்
பல்லூழ் புக்குப் பயன் நிரை கவரக்  5
கொழுங்குடி போகிய பெரும் பாழ் மன்றத்து
நரை மூதாளர் அதிர் தலை இறக்கிக்
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய
வரி நிறச் சிதலை அரித்தலின் புல்லென்று
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில்  10
இன்னா ஒரு சிறைத் தங்கி இன்னகைச்
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
நசை தர வந்தோர் இரந்தவை
இசை படப் பெய்தல் ஆற்றுவோரே.  15

378
பாடியவர்: காவட்டனார், 
திணை: குறிஞ்சித் திணை
தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
நன் பொன் அன்ன நறுந்தாது உதிரக்
காமர் பீலி ஆய் மயில் தோகை  5
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக்
கோடு முற்று இளந்தகர் பாடு விறந்து இயல
ஆடுகள வயிரின் இனிய ஆலிப்
பசும்புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து
இருங்கண் ஆடு அமைத் தயங்க இருக்கும்  10
பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும்
உடன்ற அன்னை அமரா நோக்கமும்
வடந்தை தூக்கும் வருபனி அற்சிரச்
சுடர் கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு
குட கடல் சேரும் படர் கூர் மாலையும்  15
அனைத்தும் அடூஉ நன்று நலிய உஞற்றி
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி
நீங்கா வஞ்சினம் செய்து நத்துறந்தோர்
உள்ளார் ஆயினும் உளெனே அவர் நாட்டு
அள்ளிலைப் பலவின் கனி கவர் கைய  20
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடுந்திறல் அணங்கின் நெடும் பெருங்குன்றத்துப்
பாடு இன் அருவி சூடி
வான் தோய் சிமையம் தோன்றலானே.

379
பாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ,
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது 

நம் நயந்து உறைவி தொன்னலம் அழியத்
தெருளாமையின் தீதொடு கெழீஇ
அருளற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து
ஆள் வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே
நினையினை ஆயின் எனவ கேண்மதி  5
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கைப்
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி
நனவின் இயன்றது ஆயினும் கங்குற்
கனவின் அற்று அதன் கழிவே அதனால்
விரவுறு பன் மலர் வண்டு சூழ்பு அடைச்சிச்  10
சுவல் மிசை அசைஇய நிலைதயங்கு உறுமுடி
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்பச்
செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள் சேர்பு
எய்திய கனை துயில் ஏற்றொறும் திருகி
மெய் புகு வன்ன கை கவர் முயக்கின்  15
மிகுதி கண்டன்றோ இலெனே நீ நின்
பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவிச்
செலவு வலியுறுத்தனை ஆயிற் காலொடு
கனை எரி நிகழ்ந்த இலையில் அம் காட்டு
உழைப்புறத்து அன்ன புள்ளி நீழல்  20
அசைஇய பொழுதில் பசைஇ வந்து இவள்
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர
ஒரு திறம் நினைத்தல் செல்லாய் திரிபு நின்று
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப்
பிடியிடு பூசலின் அடிபடக் குழிந்த  25
நிரம்பா நீளிடைத் தூங்கி
இரங்குவை அல்லையோ உரங்கெட மெலிந்தே?

380
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: நெய்தற் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது 

தேர் சேண் நீக்கித் தமியன் வந்து நும்
ஊர் யாது என்ன நணி நணி ஒதுங்கி
முன்னாள் போகிய துறைவன் நெருநை
அகல் இலை நாவல் உண் துறை உதிர்த்த
கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு தன்  5
தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம்
அலவன் காட்டி நற்பாற்று இது என
நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே
உதுக்காண் தோன்றும் தேரே இன்றும்
நாம் எதிர் கொள்ளாமாயின் தான் அது  10
துணிகுவன் போலாம் நாணுமிக உடையன்
வெண் மணல் நெடுங்கோட்டு மறைகோ
அம்ம தோழி கூறுமதி நீயே.

381
பாடியவர்: மதுரை இளங்கௌசிகனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது  

ஆளி நன்மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண் கோடு வாங்கிக் குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண் மஞ்சு தப
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்  5
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீளிடை
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
விற்சினம் தணிந்த வெருவரு கவலை
குருதி ஆடிய புலவு நாறு இருஞ்சிறை
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி  10
பச்சூன் கொள்ளை சாற்றிப் பறை நிவந்து
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
அருஞ்சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார்
முனை அரண் கடந்த வினைவல் தானைத்
தேன் இமிர் நறுந் தார் வானவன் உடற்றிய  15
ஒன்னாத் தெவ்வர் மன்னெயில் போலப்
பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது உயிர்த்து
வருந்தும் கொல் அளியள் தானே சுரும்பு உண
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
எதிர்மலர் இணைப் போது அன்ன தன்  20
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே.

382
பாடியவர்: கபிலர், 
திணை: குறிஞ்சித் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

பிறர் உறு விழுமம் பிறரும் நோப
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்
கடம்பு கொடி யாத்துக் கண்ணி சூட்டி
வேறு பல் குரல ஒரு தூக்கு இன்னியம்
காடு கெழு நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்ப  5
அணங்கு அயர் வியன் களம் பொலியப் பையத்
தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவர்க்கு
அறியக் கூறல் வேண்டும் தோழி
அருவி பாய்ந்த கருவிரல் மந்தி
செழுங்கோட் பலவின் பழம் புணை ஆகச்  10
சாரல் பேரூர் முன்துறை இழிதரும்
வறன் உறல் அறியாச் சோலை
விறன் மலை நாடன் சொல் நயந்தோயே.

383
பாடியவர்: கயமனார், 
திணை: பாலைத் திணை 
மகட்போக்கிய தாய் சொன்னது

தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள்
ஊருஞ்சேரியும் ஓராங்கு அலர் எழக்
காடுங்கானமும் அவனொடு துணிந்து
நாடுந் தேயமும் நனி பல இறந்த
சிறு வன் கண்ணிக்கு ஏர் தேறுவர் என  5
வாடினை வாழியோ வயலை நாள்தொறும்
பல் கிளைக் கொடி கொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தலைக்கூட்டு அம் குழை உதவிய
வினை அமை வர நீர் விழுத் தொடி தத்தக்
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு  10
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கிப்
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும்
ஆர நீர் ஊட்டிப் புரப்போர்
யார் மற்றுப் பெறுகுவை அளியை நீயே.


384
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார், 
திணை: முல்லைத் திணை, 
தேரில் கூடச்சென்ற பிறரால் சொல்லப்பட்டது

இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது வந்த
ஆறு நனி அறிந்தன்றொ இலெனே தாஅய்
முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில் 5
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்
மெல்லியல் அரிவை இல் வயின் நிறீஇ
இழிமின் என்ற நின் மொழி மருண்டிசினே
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ  10
உரைமதி- வாழியோ வலவ எனத்தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி
மனைக் கொண்டு புக்கனன் நெடுந்தகை
விருந்தேர் பெற்றனள் திருந்து இழையோளே.

385
பாடியவர்: குடவாயில் கீரத்தனார், 
திணை: பாலைத் திணை 
மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது

தன்னோரன்ன ஆயமும் மயிலியல்
என்னோரன்ன தாயரும் காணக்
கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடு நகர் புரையோர் அயர  5
நன்மாண் விழவில் தகரம் மண்ணி
யாம் பல புணர்ப்பச் செல்லாள் காம்பொடு
நெல்லி நீடிய கல்லறைக் கவாஅன்
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ  10
வளையுடை முன் கை அளைஇக் கிளைய
பயில் இரும் பிணையல் பசுங்காழ்க் கோவை
அகல் அமை அல்குல் பற்றிக் கூந்தல்
ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும்
தானமர் துணைவன் ஊக்க ஊங்கி  15
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச்
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.

386
பாடியவர்: பரணர், 
திணை: மருதத் திணை 
தோழி தலைவனிடம்சொன்னது

பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து
வாளை நாள் இரை தேரும் ஊர
நாணினென் பெரும யானே பாணன்
மல்லடு மார்பின் வலியுற வருந்தி
எதிர் தலைக்கொண்ட ஆரியப் பொருநன்  5
நிறைத் திரண் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த
திறன் வேறு கிடக்கை நோக்கி நற்போர்க்
கணையன் நாணியாங்கு மறையினள்
மெல்ல வந்து நல்ல கூறி
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின்  10
சேரியேனே அயல் இலாட்டியேன்
நுங்கை ஆகுவென் நினக்கு எனத் தன் கைத்
தொடுமணி மெல் விரல் தண்ணெனத் தைவர
நுதலும் கூந்தலும் நீவி
பகல் வந்து பெயர்ந்த வாணுதல் கண்டே.  15

387
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: பாலைத் திணை
தோழி தலைவனிடம் சொன்னது

திருந்திழை நெகிழ்ந்து பெருந்தோள் சாஅய்
அரிமதர் மழைக்கண் கலுழச் செல்வீர்
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ
உவர் உணப் பறைந்த ஊன் தலைச் சிறாஅரொடு
அவ்வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப்  5
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
பூந்துகில் இமைக்கும் பொலங்காழ் அல்குல்
அவ்வரி சிதைய நோக்கி வெவ்வினைப்
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ
வரிப் புற இதலின் மணிக்கண் பேடை  10
நுண் பொறி அணிந்த எருத்தின் கூர் முள்
செங்கால் சேவல் பயிரும் ஆங்கண்
வில் ஈண்டு அருஞ்சமம் ததைய நூறி
நல்லிசை நிறுத்த நாணுடை மறவர்
நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது  15
இரை நசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி
சிறிய தெற்றுவதாயின் பெரிய
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்
நின்று ஆங்குப் பெயரும் கானம்
சென்றோர் மன்னென இருக்கிற் போர்க்கே.  20