ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

பாலைத்திணை


361. 
உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகந்துறை
வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத் 
தொடலை தை இய மடவரல் மகளே
கண்ணினும் கதவநின் முலையே
முலையினும் கதவநின் தடமென் தோளே.

362.
பதுக்கைத் தாய ஒதுக்கருங் கவலைச்
சிறுகண் யானை உறுபகை நினையாது
யாக்குவந் தனையோ பூந்தார் மார்ப
அருள்புரி நெஞ்சம் உய்த்தர
இருள்பொர நின்ற இரவி னானே.

363.
சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்
கொலைவல் எயினர் தங்கைநின் முலைய
சுணங்கென நினைதி நீயே
அணங்கென நினையும்என் அணங்குறு நெஞ்சே.

364.
முளமா வல்சி எயினர் தங்கை 
இளமா எயிற்றிக்கும் இந்நிலை அறியச்
சொல்லினேன் இரக்கும் அளவை
வெள்வேல் விடலை விரையா தீமே.

365.
கணமா தொலைச்சித் தன்னையர் தந்த 
நிணவூன் வல்சிப் படுபுள் ஒப்பும்
நலமாண் எயிற்றி போலப் பலமிகு
நல்நலம் நயவர உடையை
என்நோற் றனையோ மாஇன் தளிரே.

366.
அன்னாய் வாழிவேண் டன்னை தோழி
பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை
கொன்னே கடவுதி யாயின் என்னதூஉம்
அறிய ஆகுமோ மற்றே
முறியிணர்க் கோங்கM பயந்த மாறே.

367.
பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ
விரியிணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சி
விரிவுமலர் அணிந்த வேனில் கான்யாற்றுத்
தேரொடு குறுக வந்தோன்
பேரொடு புணர்ந்தன்று அன்னைஇவள் உயிரே.

368.
எரிப்பூ இலவத்து ஊழ்கழி பன்பலர்
பொரிப்பூம் புன்கின் புகர்நிழல் வரிக்கும்
தண்பத வேனில் இன்ப நுகர்ச்சி
எம்மொடு கொண்மோ பெருமநின்
எம்மெல் ஓதி அழிவிலள் எனினே.

369.
வளமலர் ததிந்த வண்டுபடு நறும்பொழில்
முளைநிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்
குறிநீ செய்தனை என்ப அலரே
குரவ நீள்சினை உறையும்
பருவ மாக்குயில் கௌவையில் பெரிதே.

370.
வண்சினைக் கோங்கின் தண்கமழ் படலை
இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப
நீநயந்து உறையப் பட்டோ ள்
யாவ ளோஎம் மறையா தீமே.