ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

மருதத்திணை


21.
முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண்டுறை ய்ய்ரன் தளிப்பவும்
உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய்

22.
அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்
முள்ளி வேரளைச் செல்லும் ஊரன்
நல்லசொல்லி மணந்துஇனி
நீயேன் என்றது எவன்கொல் அன்னாய்

23.
முள்ளி வேரளைக் கள்வன் ஆட்டிப்
பூக்குற்று எய்திய புனல் அணி யூரன்
தேற்றஞ் செய்துநப் புணர்ந்தினித்
தாக்கணங்கு ஆவ தெவன்கொல் அன்னாய்.

24.
தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு
பிள்லை தன்னும் முதலைத்து அவனூர்
எய்தினன் அகின்று கொல்லோ மகிழ்நன்
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்பது எவன்கொல் அன்னாய்.

25.
அயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய்
வயலைச் செங்கொடி கள்வன் அறுக்கும்
கழனி யூரன் மார்புபலர்க்கு
இழைநெகிழ் செல்லல் ஆகும் அன்னாய்.

26.
கரந்தைஅம் செறுவில் துணைதுறந்து கள்வன்
வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன்
எம்மும் பிறரும் அறியான்
இன்னன் ஆவது எவன்கொல் அன்னாய்.

27.
செந்நெலம் செறுவில் கதிகொண்டு கள்வன்
தண்அக மண் அளைச் செல்லும் ஊரற்கு
எவ்வளை நெகிழ சாஅய்
அல்லல் உழப்பது எவன்கொல் அன்னாய்.

28.
உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின்
தண்சேறு கள்வன் வரிக்கும் ஊரற்கு
ஒண்டொடி நெகிழச் சாஅய்
மெந்தோள் பசப்பது எவன்கொல் அன்னாய்.

29.
மாரி கடிகொளக் காவலர் கடுக
வித்திய வென்முளை கள்வன் அறுக்கும்
கழனி ஊரன் மார்புற மரீஇத்
திதலை அல்குல் நின்மகள்
பசலை கொள்வது எவன்கொல் அன்னாய்.

30.
வேப்புநனை யன்ன நெடுங்கள் கள்வன்
தண்அக மண்அளை நிறைய நெல்லின்
இரும்பூ உறைக்கும் ஊரற்குஇவள்
பெருங்கவின் இழப்பது எவன்கொல் அன்னாய்.