ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

மருதத்திணை


51.
நீருறை கோழி நீலச் சேவல்
கூருகிர்ப் பேடை வயாஅம் ஊர
புளிங்காய் வேட்கைத்து அன்றுநின்
மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே

52.
வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச்
செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண்
செவ்வாய்க் குறுமகள் இனைய
எவ்வாய் முன்னின்று மகிழ்நநின் தேரே.

53.
துறைஎவன் அணங்கும் யாம்உற்ற நோயே
சிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித் தாமரை மலரும்
பழன ஊர நீயுற்ற சூளே.

54.
திண்தேர்த் தென்னவன் நல்நாட்டு உள்ளதை
வேனில் ஆயினும் தண்புனல் ஒழுகும்
தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ
ஊரின் ஊரனை நீதர வந்த
பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு
அஞ்சுவல் அம்ம அம்முறை வரினே.

55.
கரும்பின் எந்திரம் களிறெதிர் பிளிற்ரும்
தேர்வண் கோமான் தேனூர் அன்னஇவள்
நல்லணி நயந்துநீ துறத்தலின்
பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே.

56.
பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா
வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள் 
நலம்பெறு சுடர்நுதல் தேம்ப
எவன்பயம் செய்யும்நீ தேற்றிய மொழியே.

57.
பகலின் தோன்றும் பல்கதிர்த் தீயின்
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன
இவள் நலம் புலம்பப் பிரிய
அனைநலம் உடையளோ மகிழ்நநின் பெண்டே.

58.
விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்
கைவண் விராஅன் இருப்பை அன்ன
இவள் அணங்கு உற்றனை போறி
பிறர்க்கு மனையையால் வாழி நீயே.

59.
கேட்சின் வாழியோ மகிழ்ந ஆற்றுற
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர
நினக்குமருந் தாகிய யான்இனி
இவட்குமருந்து அன்மை நோம்என் நெஞ்சே.

60.
பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்
கழனியுரநின் மொழிவல் என்றும்
துங்சுமனை நெடுநகர் வருதி
அஞ்சா யோஇவள் தந்தைகை வேலே.