ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

மருதத்திணை


41.
தன்பார்ப்புத் தின்னும் அன்புஇல் முதலையொடு
வெண்பூம் பொய்கைத்து அவனூர்என்ப அதனால்
தன்சொல் உணர்ந்தோர் மேனி
பொன்போல் செய்யும் ஊர்கிழ வோனே.

42.
மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொலோ
யாணர் ஊரநின் மானிழை யரிவை
காவிரி மலிர்நிறை யன்னநின் 
மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே.

43.
அம்பணத் தன்ன யாமை யேறிச்
செம்பின் அன்ன பார்ப்புப் பலதுஞ்சும்
யாணர் ஊர நின்னினும் 
பாணன் பொய்யன் பல்சூ ளினனே.

44.
தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத்
தாய்முகம் நோக்கி வளர்ந்திசின் ஆஅங்கு
அதுவே ஐயநின் மார்பே
அறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே.

45.
கூதிர் ஆயின் தன்கலிழ் தந்து
வேனில் ஆயின் மணிநிறங் கொள்ளும்
யாறுஅணிந் தன்றுநின் ஊரே
பச்ப்பணிந் தனவால் மகிழ்நஎன் கண்ணே.

46.
நினக்கே அன்றுஅஃது எமக்குமார் இனிதே
நின்மார்பு நய்ந்த நன்னுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை யாகி
ஈண்டுநீ அருளாது ஆண்டுறை தல்லே.

47.
முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த
அகன்பெரு வட்டி நிறைய மனையோள்
அரிகால் பெரும்பயறு நிறைக்கும் ஊர
மாணிமழை ஆயம் அறியும்நின் 
பாணன் போலப் பலபொய்த் தல்லே.

48.
வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்
வராஅல் அஒரிந்த வட்டியுள் மனையோள்
யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர
வேண்டேம் பெருமநின் பரத்தை
யாண்டுச் செய்குறியோடு ஈண்டுநீ வரவே.

49.
அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சில்மீன் சொரிந்து பல்நெல் பெறூஉம்
யாணர் ஊரநின் பாண்மகன்
யார்நலம் சிதயப் பொய்க்குமோ இனியே.

50.
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர
தஞ்சம் அருளாய் நீயேநின்
நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே.