ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

முல்லைத்திணை


481.
சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல்
சேயிழை மாதரை உள்ளி நோய்விட
முள் இட்டு ஊர்மதி வலவநின் 
புன்இயல் கலிமாப் பூண்ட தேரே.

482.
தெரியிழை அரிவைக்குப் பெருவிருந் தாக
வல்விரைத்து கடவுமதி பாகவெள்வேல்
வென்றடு தானை வேந்தனொடு
நாளிடைச் சேப்பின் ஊழியின் நெடிதே.

483.
ஆறுவனப்பு எய்த அலர்தா யினவே
வேந்துவிட் டனனே மாவிரைந் தனவே
முன்னுறக் கடவுமதி பாக
நன்னுதல் அரிவை தன்னலம் பெறவே.

484.
வேனில் நீங்கக் கார்மழை தலைஇக்
காடுகவின் கொண்டன்று பொழுது பாடுசிறந்து 
கடியக் கடவுமதி பாக 
நெடிய நீடினம் நேரிழை மறந்தே.

485.
அரும்படர் அவலம் அவளும் தீரப்
பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க
ஏமதி வலவ தேரே
மாருண்டு உகளும் மலரணிப் புறவே.

486.
பெரும்புன் மாலை ஆனது நினைஇ
அரும்படர் உழைத்தல் யாவது என்றும்
புல்லி ஆற்றாப் புரையோள் காண
வன்புதெரிந்து ஊர்மதி வலவநின்
புள்ளியல் கலைமாப் பூண்டதேரே.

487.
இதுமன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே
செறிதொடி உள்ளம் உவப்ப
மதியுடை வலவ ஏமதி தேரே.

488.
கருவி வானம் பெயல் தொடங்கின்றே
பெருவிறல் காதலி கருதும் பொழுதே
விரிஉளை நன்மாப் பூட்டிப்
பருவரல் தீரக் கடவுமதி தேரெ.

489.
அம்சிரை வண்டின் அரியினம் மொய்ப்ப
மெண்புல முல்லை மலரும்மாலைப்
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப
நுண்புரி வண்கயிறு இயக்கிநின்
வண்பரி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.

490.
அம்தீம் கிளவி தான்தர எம்வயின்
வந்தன்று மாதோ காரே ஆவயின்
ஆய்த்தொடி அரும்படர் தீர
ஆய்மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.