கலித்தொகை

கலித்தொகை

நெய்தல்கலி


146    
உரை செல உயர்ந்து ஓங்கிச் சேர்ந்தாரை ஒரு நிலையே    
வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து, தெறல் மாலை 
அரைசினும் அன்பு இன்றாம், காமம்; புரை தீர    
அன்ன மெல் சேக்கையுள் ஆராது அளித்தவன்    
துன்னி அகலத் துறந்த அணியளாய்,    
நாணும் நிறையும் உணர்கல்லாள், தோள் ஞெகிழ்பு,    
பேர் அமர் உண்கண் நிறை மல்க, அந்நீர் தன்,    
கூர் எயிறு ஆடி, குவி முலை மேல் வார்தர,    
தேர் வழி நின்று தெருமரும், ஆய் இழை    
கூறுப கேளாமோ, சென்று?    

'எல் இழாய்! எற்றி வரைந்தானை, நாணும் மறந்தாள்' என்று, 
உற்றனிர் போல, வினவுதிர்! மற்று இது    
கேட்டீமின், எல்லீரும் வந்து:    
வறம் தெற மாற்றிய வானமும் போலும்;    
நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் -    
சிறந்தவன் தூ அற நீப்ப, பிறங்கி வந்து,    
என் மேல் நிலைஇய நோய்.    

'நக்கு நலனும் இழந்தாள், இவள்' என்னும்    
தக்கவிர் போலும்! இழந்திலேன் மன்னோ - 
மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும்    
அக்கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன!    
உக்காண் - இ·தோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆகச் 
செக்கர் அம் புள்ளித் திகிரி அலவனொடு, யான்    
நக்கது, பல் மாண் நினைந்து.    

கரை காணா நோயுள் அழுந்தாதவனைப்    
புரை தவ கூறிக், கொடுமை நுவல்வீர்!    
வரைபவன் என்னின் அகலான் - அவனைத்,    
திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம்,    
நிரை கதிர் ஞாயிற்றை, நாடு என்றேன்; யானும்    
உரை கேட்புஉழி எல்லாம் செல்வேன்; புரை தீர்ந்தான் 
யாண்டு ஒளிப்பான் கொலோ மற்று?    

மருள் கூர் பிணை போல் மயங்க, வெந்நோய் செய்யும்    
மாலையும் வந்து, மயங்கி எரி நுதி    
யாமம் தலை வந்தன்று ஆயின், அதற்கு என் நோய் 
பாடுவேன், பல்லாருள் சென்று.    
யான் உற்ற எவ்வம் உரைப்பின், பலர்த் துயிற்றும் 
யாமம், நீ துஞ்சலை மன்.    
எதிர்கொள்ளும் ஞாலம், துயில் ஆராது ஆங்கண் 
முதிர்பு என் மேல் முற்றிய வெந்நோய் உரைப்பின் 
கதிர்கள் மழுங்கி, மதியும் அதிர்வது போல்    
ஓடிச் சுழல்வது மன்.    

பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே!    
நீரைச் செறுத்து, நிறைவுற ஓம்புமின்;    
கார் தலைக்கொண்டு பொழியினும், தீர்வது    
போலாது, என் மெய் கனலும் நோய்.    
இருப்பினும் நெஞ்சம் கனலும்; செலினே,    
வருத்துறும் யாக்கை, வருந்துதல் ஆற்றேன்;    
அருப்பம் உடைத்து, என்னுள் எவ்வம் பொருத்திப் 
பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கிச் 
செல்வேன், விழுமம் உழந்து.    

என ஆங்கு பாட, அருள் உற்று,     
வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும்    
புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு, மற்றுத் தன்    
நல் எழில் மார்பன் முயங்கலின்    
அல்லல் தீர்ந்தன்று ஆய் இழை பண்பே.    

147    
ஆறு அல்ல மொழி தோற்றி, அற வினை கலக்கிய,    
தேறுகள் நறவு உண்டார் மயக்கம் போல், காமம்    
வேறு ஒரு பாற்று ஆனது கொலோ? சீறு அடிச்    
சிலம்பு ஆர்ப்ப இயலியாள் - இவள் மன்னோ, இனி மன்னும் 
புலம்பு ஊரப் புல்லென்ற வனப்பினாள் - விலங்கு ஆக,    
வேல் நுதி உற நோக்கி, வெயில் உற, உருகும் தன்    
தோள் நலம் உண்டானைக் கெடுத்தாள் போல், தெருவில் பட்டு, 
ஊண் யாதும் இலள் ஆகி, உயிரினும் சிறந்த தன்    
நாண் யாதும் இலள் ஆகி, நகுதலும் நகூஉம்; ஆங்கே 
பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம்; தோழி! ஓர் 
ஒள் நுதல் உற்றது உழைச் சென்று கேளாமோ? 

இவர் யாவர்? ஏமுற்றார் கண்டீரே! ஓஒ!    
அமையும் தவறிலீர்மன் கொலோ? - நகையின்    
மிக்க தன் காமமும் ஒன்று என்ப; அம் மா    
புது நலம் பூ வாடி அற்று, தாம் வீழ்வார்    
மதி மருள நீத்தக்கடை.    

என்னையே மூசிக், கதுமென நோக்கன்மின்; வந்து 
கலைஇய கண், புருவம், தோள், நுசுப்பு, ஏஎர்    
சில மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல், அவற்றை 
விலை வளம் மாற அறியாது, ஒருவன்    
வலை அகப்பட்டது - என் நெஞ்சு.    

வாழிய, கேளிர்!    
பலவும் சூள் தேற்றத் தெளித்தவன் என்னை     
முலை இடை வாங்கி முயங்கினன்; நீத்த     
கொலைவனைக் காணேன் கொல், யான்?    
காணினும், என்னை அறிதிர்; கதிர் பற்றி,     
ஆங்கு எதிர் நோக்குவன்- ஞாயிறே? - எம் கேள்வன்    
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ? காட்டாயேல், 
வானத்து எவன் செய்தி, நீ?    

ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல,    
நீர் உள்ளும் தோன்றுதி, ஞாயிறே! அவ்வழித்    
தேரை தினப்படல் ஓம்பு.    

நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை,    
பல் கதிர் சாம்பிப் பகல் ஒழியப், பட்டீமோ -    
செல் கதிர் ஞாயிறே! நீ .    

அறாஅல் இன்று அரி முன்கைக் கொட்கும்    
பறாஅப் பருந்தின் கண் பற்றிப் புணர்ந்தான்    
கறாஅ எருமைய காடு இறந்தான் கொல்லோ? 
உறாஅத் தகை செய்து, இவ் ஊர் உள்ளான் கொல்லோ?    
செறாஅது உளன் ஆயின், கொள்வேன்; அவனைப் 
பெறாஅது யான் நோவேன்; அவனை என் காட்டிச் 
சுறாஅக் கொடியான் கொடுமையை, நீயும்    
உறாஅ அரைச! நின் ஓலைக் கண் கொண்டீ;    
மறாஅ அரைச! நின் மாலையும் வந்தன்று;    
அறாஅ தணிக, இந்நோய்.    
தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும் 
அன்னவோ - காம! நின் அம்பு?    

கையாறு செய்தானைக் காணின், கலுழ் கண்ணால் 
பையென நோக்குவேன்; தாழ் தானை பற்றுவேன்;    
ஐயம் கொண்டு, என்னை அறியான் விடுவானேல்,    
'ஒய்' எனப் பூசல் இடுவேன்மன், யான் - அவனை    
மெய் ஆகக் கள்வனோ என்று.    

வினவன்மின் ஊரவிர்! என்னை, எஞ்ஞான்றும் -     
மடாஅ நறவு உண்டார் போல, மருள    
விடாஅது உயிரொடு கூடிற்று - என் உண்கண்    
படாஅமை செய்தான் தொடர்பு.     

கனவினான் காணிய, கண்படா ஆயின்,    
நனவினான் ஞாயிறே! காட்டாய் நீ ஆயின்,     
பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வரக் காமன்    
கணை இரப்பேன், கால் புல்லிக்கொண்டு.     

என ஆங்கு,    
கண் இனைபு, கலுழ்பு ஏங்கினள்;     
தோள் ஞெகிழ்பு, வளை நெகிழ்ந்தனள்;    
அன்னையோ! எல்லீரும் காண்மின்; மடவரல்    
மெல் நடை பேடை துனை தரத் தன் சேர்ந்த    
அன்ன வான் சேவல் புணர்ச்சி போல், ஒள் நுதல்    
காதலன் மன்ற அவனை வரக் கண்டு, ஆங்கு     
ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள், பேதை,     
நகை ஒழிந்து, நாணு மெய் நிற்ப, இறைஞ்சி,    
தகை ஆகத் தையலாள் சேர்ந்தாள் - நகை ஆக,    
நல் எழில் மார்பன் அகத்து !    

148    
தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி ஞாயிறு, 
வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல்,    
கல் அடைபு, கதிர் ஊன்றி, கண் பயம் கெடப் பெயர, 
அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல, 
மல்லல் நீர்த் திரை ஊர்பு, மால் இருள் மதி சீப்ப, 
இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப, 
செல்லும் என் உயிர் புறத்து இறுத்தந்த மருள் மாலை! 

மாலை நீ -    
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்மன்; 
அன்புற்றார் அழ, நீத்த அல்லலுள், கலங்கிய    
துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ, நினக்கு?     

மாலை நீ -    
கலந்தவர் காமத்தை கனற்றலோ செய்தாய்மன்;     
நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின் கண்    
அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ, நினக்கு? 

மாலை நீ -    
எம் கேள்வன் தருதல் உம் தருகல்லாய்; துணை அல்லை! 
பிரிந்தவர்க்கு நோய் ஆகிப் புணர்ந்தவர்க்குப் புணை ஆகித் 
திருந்தாத செயின் அல்லால் இல்லையோ, நினக்கு? 

என ஆங்கு,    
ஆய் இழை மடவரல் அவலம் அகல,    
பாய் இருள் பரப்பினை பகல் களைந்தது போலப்    
போய் அவர் மண் வௌவி வந்தனர் -    
சேய் உறை காதலர் செய் வினை முடித்தே.    

149    
நிரை திமில் களிறு ஆகத் திரை ஒலி பறை ஆகக், 
கரை சேர் புள் இனத்து அம் சிறை படை ஆக,     
அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்;    
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான், விச்சைக்கண் 
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்;    

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான், மற்று அவன் 
எச்சத்துள் ஆயினும், அ·து எறியாது விடாதே காண்;    
கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் 
தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்;     

சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின், மற்று அவன்    
வாள் வாய் நன்று ஆயினும், அ·து எறியாது விடாதே காண்; 

ஆங்கு, 
அனைத்து, இனி - பெரும! - அதன் நிலை, நினைத்துக் காண்; 
சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த    
வினை வரு பருவரல் போல,    
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே.     

150    
அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான் 
இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ் வாயும், 
கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ    
மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல் 
மயங்கு அதர் மறுகலின், மலை தலைக்கொண்டென, 
விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு அரும் வெம் சுரம் - 

இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்,    
அறம் துறந்து - ஆய் இழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர்; 
பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம் 
பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ?    

கரி காய்ந்த கவலைத்தாய்க், கல் காய்ந்த காட்டு அகம், 
'வெரு வந்த ஆறு' என்னார், விழுப் பொருட்கு அகன்றவர்; 
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின் 
உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ? 

கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக் கொண்ட கோடையால், 
'ஒதுக்கு அரிய நெறி' என்னார், ஒண் பொருட்கு அகன்றவர்; 
புதுத் திங்கள் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, நின் 
கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ? 

ஆங்கு    
அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த    
பெரும் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர்    
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் -    
மை ஈர் ஓதி மட மொழியோயே!