குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகை


201. குறிஞ்சி - தலைவி கூற்று 

அமிழ்த முண்கநம் அயலி லாட்டி 
பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபு 
நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை 
நெல்லி யம்புளி மாந்தி யயலது 
முள்ளி லம்பணை மூங்கிற் றூங்கும் 
கழைநிவந் தோங்கிய சோலை 
மலைகெழு நாடனை வருமென் றாளே. 
 

202. மருதம் - தலைவி கூற்று 

நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே 
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக் 
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங் 
கினிய செய்தநங் காதலர் 
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே. 
-அள்ளூர் நன்முல்லையார்.

203. மருதம் - தலைவி கூற்று 

மலையிடை யிட்ட நாட்டரு மல்லர் 
மரந்தலை தோன்றா ஊரரு மல்லர் 
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும் 
கடவுள் நண்ணிய பாலோர் போல 
ஒரீஇ ஒழுகும் என்னைக்குப் 
பரியலென் மன்யான் பண்டொரு காலே. 
-நெடும் பல்லியத்தனார்.

204. குறிஞ்சி - பாங்கன் கூற்று 

காமம் காமம் என்ப காமம் 
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் 
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல் 
மூதா தைவந் தாங்கு 
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.
-மிளைப்பெருங் கந்தனார்.

205. நெய்தல் - தலைவி கூற்று 

மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க 
விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப் 
பொலம்படைப் பொலிந்த வெண்டேர் ஏறிக் 
கலங்குகடல் துவலை ஆழி நனைப்ப 
இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன் 
யாங்கறிந் தன்றுகொல் தோழியென் 
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே. 
-உலோச்சனார்.

206. குறிஞ்சி - தலைவன் கூற்று 

அமிழ்தத் தன்ன அந்தீங் கிளவி 
அன்ன இனியோள் குணனும் இன்ன 
இன்னா அரும்படர் செய்யு மாயின் 
உடனுறை வரிதே காமம் 
குறுக லோம்புமின் அறிவுடை யீரே. 
-ஐயூர் முடவனார்.

207. பாலை - தலைவி கூற்று 

செப்பினஞ் செலினே செலவரி தாகுமென் 
றத்த வோமை அங்கவட் டிருந்த 
இனந்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி 
சுரஞ்செல் மாக்கட் குயவுத்துணை யாகும் 
கல்வரை யயலது தொல்வழங்கு சிறுநெறி 
நல்லடி பொறிப்பத் தாஅய்ச் 
சென்றெனக் கேட்டனம் ஆர்வலர் பலரே. 
-உறையனார்.

208. குறிஞ்சி - தலைவி கூற்று 

ஒன்றே னல்லேன் ஒன்றுவென் குன்றத்துப் 
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை 
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் 
நின்றுகொய மலரும் நாடனொ 
டொன்றேன் றோழி ஒன்றினானே. 
-கபிலர்.

209. பாலை - தலைவன் கூற்று 

அறந்தலைப் பட்ட நெல்லியம் பசுங்காய் 
மறப்புலிக் குருளை கோளிடங் கறங்கும் 
இறப்பருங் குன்ற மிறந்த யாமே 
குறுநடை பலவுள் ளலமே நெறிமுதற் 
கடற்றிற் கலித்த முடச்சினை வெட்சி 
தளையவிழ் பல்போது கமழும் 
மையிருங் கூந்தன் மடந்தை நட்பே.
-பாலைபாடிய பெருங்கடுங்கோ.

210. முல்லை - தோழி கூற்று 

திண்டேர் நள்ளி கானத் தண்டர் 
பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி 
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ 
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி 
பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு 
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே. 
-காக்கை பாடினியார் நச்செள்ளையார்.

211. பாலை - தோழி கூற்று 

அஞ்சி லோதி யாய்வளை நெகிழ 
நேர்ந்துநம் அருளார் நீத்தோர்க் கஞ்சல் 
எஞ்சினம் வாழி தோழி யெஞ்சாத் 
தீய்ந்த மராஅத் தோங்கல் வெஞ்சினை 
வேனி லோரிணர் தேனோ டூதி 
ஆராது பெயருந் தும்பி 
நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே. 
-காவன்முல்லைப் பூதனார்.

212. நெய்தல் - தோழி கூற்று 

கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர் 
தெண்கட லடைகரைத் தௌிமணி யொலிப்பக் 
காண வந்து நாணப் பெயரும் 
அளிதோ தானே காமம் 
விளிவது மன்ற நோகோ யானே. 
-நெய்தற் கார்க்கியன்.

213. பாலை - தோழி கூற்று 

நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக் 
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப் 
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉம்பெருந் ததரல் 
ஒழியின் உண்டு வழுவி னெஞ்சிற் 
றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி 
நின்றுவெயில் கழிக்கு மென்பநம் 
இன்றுயில் முனிநர் சென்ற வாறே. 
-கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்.

214. குறிஞ்சி - தோழி கூற்று 

மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய 
பிறங்குகுரல் இறடி காக்கும் புறந்தாழ் 
அஞ்சி லோதி அசையியற் கொடிச்சி 
திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச் 
செயலை முழுமுதல் ஒழிய அயல 
தரலை மாலை சூட்டி 
ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே. 
-கூடலூர்கிழார்.

215. பாலை - தோழி கூற்று 

படரும் பைப்பயப் பெயருஞ் சுடரும் 
என்றூழ் மாமலை மறையும் இன்றவர் 
வருவர்கொல் வாழி தோழி நீரில் 
வறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை 
குறும்பொறை மருங்கின் அமர்துணை தழீஇக் 
கொடுவரி இரும்புலி காக்கும் 
நெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே. 
-மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்.

216. பாலை - தலைவி கூற்று 

அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை 
வாடா வள்ளியங் காடிறந் தோரே 
யானே, தோடார் எல்வளை ஞெகிழ ஏங்கிப் 
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே 
அன்னள் அளியள் என்னாது மாமழை 
இன்னும் பெய்ய முழங்கி 
மின்னுந் தோழியென் இன்னுயிர் குறித்தே. 
-கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்.

217. குறிஞ்சி - தோழி கூற்று 

தினைகிளி கடிகெனிற் பகலும் ஒல்லும் 
இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல் 
யாங்குச் செய்வாமெம் இடும்பை நோய்க்கென 
ஆங்கியான் கூறிய அனைத்திற்குப் பிறிதுசெத் 
தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற 
ஐதே காமம் யானே 
கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே. 
-தங்கால் முடக்கொல்லனார்.

218. பாலை - தலைவி கூற்று 

விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக் 
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம் 
புள்ளும் ஓராம் விரிச்சியு நில்லாம் 
உள்ளலு முள்ளா மன்றே தோழி 
உயிர்க்குயிர் அன்ன ராகலிற் றம்மின் 
றிமைப்புவரை யமையா நம்வயின் 
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே. 
-கொற்றனார்.

219. நெய்தல் - தலைவி கூற்று 

பயப்பென் மேனி யதுவே நயப்பவர் 
நாரில் நெஞ்சத் தாரிடை யதுவே 
செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே 
ஆங்கட் செல்கம் எழுகென வீங்கே 
வல்லா கூறியிருக்கு முள்ளிலைத் 
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க் 
கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே. 
-வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்.

220. முல்லை - தலைவி கூற்று 

பழமழைக் கலித்த புதுப்புன வரகின் 
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை 
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை 
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணி 
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின் 
வண்டுசூழ் மாலையும் வாரார் 
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே. 
-ஒக்கூர் மாசாத்தியார்.

221. முல்லை - தலைவி கூற்று 

அவரோ வாரார் முல்லையும் பூத்தன 
பறியுடைக் கையர் மறியினத் தொழியப் 
பாலொடு வந்து கூழொடு பெயரும் 
யாடுடை இடைமகன் சென்னிச் 
சூடிய வெல்லாம் சிறுபசு முகையே. 
-உறையூர் முதுகொற்றனார்.

222. குறிஞ்சி - தலைவன் கூற்று 

தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் 
கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் 
புணைகை விட்டுப் புனலோ டொழுகின் 
ஆண்டும் வருகுவள் போலு மாண்ட 
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் 
செவ்வெரி நுறழும் கொழுங்கடை மழைக்கட் 
டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே. 
-சிறைக்குடி யாந்தையார்.

223. குறிஞ்சி - தலைவி கூற்று 

பேரூர் கொண்ட ஆர்கலி விழவில் 
செல்வாம் செல்வாம் என்றி அன்றிவண் 
நல்லோர் நல்ல பலவாற் றில்ல 
தழலும் தட்டையும் முறியுந் தந்திவை 
ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி 
அன்னை யோம்பிய ஆய்நலம் 
என்னை கொண்டான்யாம் இன்னமா லினியே. 
-மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார்.

224. பாலை - தலைவி கூற்று 

கவலை யாத்த அவல நீளிடைச் 
சென்றோர் கொடுமை யெற்றித் துஞ்சா 
நோயினு நோயா கின்றே கூவற் 
குராலான் படுதுயர் இராவிற் கண்ட 
உயர்திணை ஊமன் போலத் 
துயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே. 
-கூவன் மைந்தனார்.

225. குறிஞ்சி - தோழி கூற்று 

கன்றுதன் பயமுலை மாந்த முன்றில் 
தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட 
கெட்டிடத் துவந்த உதவி கட்டில் 
வீறுபெற்று மறந்த மன்னன் போல 
நன்றிமறந் தமையா யாயின் மென்சீர்க் 
கலிமயிற் கலாவத் தன்ன இவள் 
ஒலிமென் கூந்தல் உரியவா நினக்கே. 
-கபிலர்.