குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகை


51. நெய்தல் - தோழி கூற்று 

கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர் 
நூலறு முத்திற் காலொடு பாறித் 
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை 
யானும் காதலென் யாயுநனி வெய்யள் 
எந்தையுங் கொடீஇயர் வேண்டும் 
அம்ப லூரும் அவனொடு மொழிமே. 
-குன்றியனார்.

52. குறிஞ்சி - தோழி கூற்று 

ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற் 
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே 
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல் 
நிரந்திலங்கு வெண்பல் மடந்தை 
பரிந்தனென் அல்லனோ இறையிறை யானே.
-பனம்பாரனார்.

53. மருதம் - தோழி கூற்று 

எம்மணங் கினவே மகிழ்ந முன்றில் 
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் 
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும் 
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன 
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை 
நேரிறை முன்கை பற்றிச் 
சூரர மகளிரோ டுற்ற சூளே. 
-கோப்பெருஞ் சோழன்.

54. குறிஞ்சி - தலைவி கூற்று 

யானே யீண்டை யேனே யென்னலனே 
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக் 
கான யானை கைவிடு பசுங்கழை 
மீனெறி தூண்டிலி னிவக்கும் 
கானக நாடனொ டாண்டொழிந் தன்றே. 
-மீனெறிதூண்டிலார்.

55. நெய்தல் - தோழி கூற்று 

மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப் 
பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக் 
கையற வந்த தைவரல் ஊதையொடு 
இன்னா உறையுட் டாகும் 
சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே. 
-நெய்தற் கார்க்கியர்.

56. பாலை - தலைவன் கூற்று 

வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் 
குளவி மொய்த்த அழுகற் சின்னீர் 
வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர் 
வருகதில் அம்ம தானே 
அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே. 
-சிறைக்குடி ஆந்தையார்.

57. நெய்தல் - தலைவி கூற்று 

பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன 
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் 
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு 
உடனுயிர் போகுக தில்ல கடனறிந் 
திருவேம் ஆகிய வுலகத் 
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே. 
-சிறைக்குடி ஆந்தையார்.

58. குறிஞ்சி - தலைவன் கூற்று 

இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக 
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல 
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் 
கையில் ஊமன் கண்ணிற் காக்கும் 
வெண்ணெய் உணங்கல் போலப் 
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. 
-வெள்ளி வீதியார்.

59. பாலை - தோழி கூற்று 

பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் 
அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக் 
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின் 
நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும் 
சுரம்பல விலங்கிய அரும்பொருள் 
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே. 
-மோசி கீரனார்.

60. குறிஞ்சி - தலைவி கூற்று 

குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் 
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன் 
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து 
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் 
நல்கார் நயவா ராயினும் 
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே. 
-பரணர்.

61. மருதம் - தோழி கூற்று 

தச்சன் செய்த சிறுமா வையம் 
ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின் 
ஈர்த்தின் புறூஉம் இளையோர் போல 
உற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப் 
பொய்கை யூரன் கேண்மை 
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே. 
-தும்பிசேர் கீரனார்.

62. குறிஞ்சி - தலைவன் கூற்று 

கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை 
நாறிதழ்க் குவளையொ டிடையிடுபு விரைஇ 
ஐதுதொடை மாண்ட கோதை போல 
நறிய நல்லோள் மேனி 
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே. 
-சிறைக்குடி ஆந்தையார்.

63. பாலை - தலைவன் கூற்று  

ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச் 
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு 
அம்மா அரிவையும் வருமோ 
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே. 
-உகாய்க்குடிகிழார்.

64. முல்லை - தலைவி கூற்று 

பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப் 
புன்றலை மன்றம் நோக்கி மாலை 
மடக்கண் குழவி அலவந் தன்ன 
நோயேம் ஆகுதல் அறிந்தும் 
சேயர்தோழி சேய்நாட் டோரே. 
-கருவூர்க் கதப்பிள்ளை.

65. முல்லை - தலைவி கூற்று 

வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன் 
இன்புறு துணையொடு மறுவந் துகளத் 
தான்வந் தன்றே தளிதரு தண்கார் 
வாரா துறையுநர் வரனசைஇ 
வருந்திநொந் துறைய இருந்திரோ எனவே. 
-கோவூர்கிழார்.

66. முல்லை - தோழி கூற்று 

மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை 
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய 
பருவம் வாரா அளவை நெரிதரக் 
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த 
வம்ப மாரியைக் காரென மதித்தே. 
-கோவர்த்தனார்.

67. பாலை - தலைவி கூற்று 

உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை 
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம் 
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப் 
பொலங்கல ஒருகா சேய்க்கும் 
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. 
-அள்ளூர் நன்முல்லையார்.

68. குறிஞ்சி - தலைவி கூற்று 

பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின் 
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும் 
அரும்பனி அற்சிரந் தீர்க்கும் 
மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே. 
-அள்ளூர் நன்முல்லையார்.

69. குறிஞ்சி - தோழி கூற்று 

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக் 
கைம்மை உய்யாக் காமர் மந்தி 
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி 
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் 
சாரல் நாட நடுநாள் 
வாரல் வாழியோ வருந்துதும் யாமே. 
-கடுந்தோட் கரவீரனார்.

70. குறிஞ்சி - தலைவன் கூற்று 

ஒடுங்கீர் ஓதி ஒண்ணுதற் குறுமகள் 
நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே 
இனையள் என்றவட் புனையள வறியேன் 
சிலமெல் லியவே கிளவி 
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே. 
-ஓரம்போகியார்.

71. பாலை - தலைவன் கூற்று 

மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே 
அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப் 
பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற் 
கல்கெழு கானவர் நல்குறு மகளே.
-கருவூர் ஓதஞானியார்.

72. குறிஞ்சி - தலைவன் கூற்று 

பூவொத் தலமருந் தகைய ஏவொத்து 
எல்லாரும் அறிய நோய்செய் தனவே 
தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப் 
பரீஇ வித்திய ஏனற் 
குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே.
-மள்ளனார்.

73. குறிஞ்சி - தோழி கூற்று 

மகிழ்நன் மார்பே வெய்யை யானீ 
அழியல் வாழி தோழி நன்னன் 
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய 
ஒன்று மொழிக் கோசர் போல 
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே. 
-பரணர்.

74. குறிஞ்சி - தோழி கூற்று 

விட்ட குதிரை விசைப்பி னன்ன 
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன் 
யாம்தற் படர்ந்தமை அறியான் தானும் 
வேனில் ஆனேறுபோலச் 
சாயினன் என்பநம் மாணலம் நயந்தே. 
-விட்டகுதிரையார்.

75. மருதம் - தலைவி கூற்று 

நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ 
ஒன்று தௌிய நசையினம் மொழிமோ 
வெண்கோட் டியானை சோணை படியும் 
பொன்மலி பாடலி பெறீஇயர் 
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. 
-படுமரத்து மோசிகீரனார்.