குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகை


76. குறிஞ்சி - தலைவி கூற்று 

காந்தள் வேலி ஓங்குமலை நல்நாட்டுச் 
செல்ப என்பவோ கல்வரை மார்பர் 
சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை 
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇத் 
தண்வரல் வாடை தூக்கும் 
கடும்பனி அச்சிரம் நடுங்கஞர் உறவே. 
-கிள்ளி மங்கலங்கிழார்.

77. பாலை - தலைவி கூற்று 

அம்ம வாழி தோழி யாவதும் 
தவறெனின் தவறோ இலவே வெஞ்சுரத்து 
உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை 
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும் 
அரிய கானஞ் சென்றோர்க்கு 
எளிய வாகிய தடமென் தோளே.
-மதுரை மருதன் இளநாகனார்.

78. குறிஞ்சி - பாங்கன் கூற்று 

பெருவரை மிசையது நெடுவெள் ளருவி 
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச் 
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப 
நோதக் கன்றே காமம் யாவதும் 
நன்றென உணரார் மாட்டும் 
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே. 
-நக்கீரனார்.

79. பாலை - தலைவி கூற்று 

கான யானை தோனயந் துண்ட 
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை 
அலங்கல் உலவை யேறி ஒய்யெனப் 
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் 
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச் 
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்கு 
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லா தகறல் வல்லு வோரே. 
-குடவாயிற் கீரத்தனார்.

80. மருதம் - பரத்தை கூற்று 

கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப் 
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி 
யாமஃ தயர்கம் சேறும் தானஃது 
அஞ்சுவ துடையள் ஆயின் வெம்போர் 
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி 
முனையான் பெருநிரை போலக் 
கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே. 
-ஔவையார்.

81. குறிஞ்சி - தோழி கூற்று 

இவளே, நின்சொற் கொண்ட என்சொல் தேறிப் 
பசுநனை ஞாழற் பல்சினை ஒருசிறைப் 
புதுநலன் இழந்த புலம்புமார் உடையள் 
உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும் 
நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக் 
கடலும் கானலுந் தோன்றும் 
மடல்தாழ் பெண்ணையெம் சிறுநல் லூரே. 
-வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்.


82. குறிஞ்சி - தலைவி கூற்று 

வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு 
அழாஅல் என்றுநம் அழுதகண் துடைப்பார் 
யாரா குவர்கொல் தோழி சாரற் 
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற் 
கொழுங்கொடி அவரை பூக்கும் 
அரும்பனி அச்சிரம் வாரா தோரே. 
-கடுவன் மள்ளனார்.

83. குறிஞ்சி - தோழி கூற்று 

அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் 
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை 
தம்மில் தமதுண் டன்ன சினைதொறும் 
தீம்பழந் தூங்கும் பலவின் 
ஓங்குமலை நாடனை வரும்என் றாளே. 
-வெண்பூதனார்.

84. பாலை - செவிலி கூற்று 

பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள் 
இனியறிந் தேனது துனியா குதலே 
கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் 
வேங்கையும் காந்தளும் நாறி 
ஆம்பல் மலரினும் தான்தண் தணியளே. 
-மோசிகீரனார்.

85. மருதம் - தோழி கூற்று 

யாரினும் இனியன் பேரன் பினனே 
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் 
சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர் 
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் 
நாறா வெண்பூக் கொழுதும் 
யாண ரூரன் பாணன் வாயே. 
-வடம வண்ணக்கன் தாமோதரனார்.

86. குறிஞ்சி - தலைவி கூற்று 

சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண் 
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப் 
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து 
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து 
ஆனுளம் புலம்புதொ றுளம்பும் 
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.
-வெண்கொற்றனார்.

87. குறிஞ்சி - தலைவி கூற்று 

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் 
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும் 
கொடியர் அல்லரெங் குன்றுகெழு நாடர் 
பசைஇப் பசந்தன்று நுதலே 
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே. 
-கபிலர்.

88. குறிஞ்சி - தோழி கூற்று 

ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன் 
சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித் 
தொல்முரண் சோருந் துன்னருஞ் சாரல் 
நடுநாள் வருதலும் வரூஉம் 
வடுநா ணலமே தோழி நாமே. 
-மதுரைக் கதக்கண்ணனார்.

89. மருதம் - தோழி கூற்று 

பாவடி உரல பகுவாய் வள்ளை 
ஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப 
அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே 
பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் 
கருங்கண் தெய்வம் குடவரை யெழுதிய 
நல்லியற் பாவை அன்னஇம் 
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே. 
-பரணர்.

90. குறிஞ்சி - தோழி கூற்று 

எற்றோ வாழி தோழி முற்றுபு 
கறிவளர் அடுக்கத் திரவின் முழங்கிய 
மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க் 
கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி 
வரையிழி அருவி உண்துறைத் தரூஉம் 
குன்ற நாடன் கேண்மை 
மென்தோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே. 
-மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்.

91. மருதம் - தலைவி கூற்று 

அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி 
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம் 
தண்டுறை ஊரன் பெண்டினை யாயிற் 
பலவா குகநின் நெஞ்சிற் படரே 
ஓவா தீயு மாரி வண்கைக் 
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி 
கொன்முனை இரவூர் போலச் 
சிலவா குகநீ துஞ்சு நாளே. 
-ஔவையார்.

92. நெய்தல் - தலைவி கூற்று 

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து 
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை 
இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த 
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய 
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே. 
-தாமோதரனார்.

93. மருதம் - தலைவி கூற்று 

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் 
இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு 
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி 
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே. 
-அள்ளூர் நன்முல்லையார்.

94. முல்லை - தலைவி கூற்று 

பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து 
அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே 
மானே மருள்வேன் தோழி பானாள் 
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும் 
என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே 
அருவி மாமலை தத்தக் 
கருவி மாமழைச் சிலை தருங் குரலே. 
-கதக்கண்ணனார்.

95. குறிஞ்சி - தலைவன் கூற்று 

மால்வரை இழிதருந் தூவெள் அருவி 
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல் 
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள் 
நீரோ ரன்ன சாயல் 
தீயோ ரன்னவென் உரனவித் தன்றே. 
-கபிலர்.

96. குறிஞ்சி - தலைவி கூற்று 

அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு 
யானெவன் செய்கோ என்றி யானது 
நகையென உணரேன் ஆயின் 
என்னா குவைகொல் நன்னுதல் நீயே. 
-அள்ளூர் நன்முல்லையார்.

97. நெய்தல் - தலைவி கூற்று 

யானே ஈண்டை யேனே யென்னலனே 
ஆனா நோயொடு கான லஃதே 
துறைவன் தம்மூ ரானே 
மறையல ராகி மன்றத் தஃதே. 
-வெண்பூதியார்.

98. முல்லை - தலைவி கூற்று 

இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த் 
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே 
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை 
நீர்வார் பைம்புதற் கலித்த 
மாரிப் பீரத் தலர்சில கொண்டே. 
-கோக்குள முற்றனார்.

99. முல்லை - தலைவன் கூற்று 

உள்ளினென் அல்லனோ யானே உள்ளி 
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து 
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே 
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை 
இறைத்துணச் சென்றற் றாஅங்கு 
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே. 
-ஔவையார்.

100. குறிஞ்சி - தலைவன் கூற்று 

அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் 
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும் 
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற் 
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும் 
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் 
பாவையின் மடவந் தனளே 
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே. 
-கபிலர்.