தொல்காப்பியம்

தொல்காப்பியம்

சொல்லதிகாரம்


இடை எனப்படுப பெயரொடும் வினையொடும் 
நடைபெற்று இயலும் தமக்கு இயல்பு இலவே.    1 
அவைதாம், 
புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதநவும் 
வினை செயல் மருங்கின் காலமொடு வருநவும் 
வேற்றுமைப் பொருள்வயின் உருபு ஆகுநவும் 
அசைநிலை கிளவி ஆகி வருநவும் 
இசைநிறைக் கிளவி ஆகி வருநவும் 
தம்தம் குறிப்பின் பொருள் செய்குநவும் 
ஒப்பு இல் வழியான் பொருள் செய்குநவும் என்று 
அப் பண்பினவே நுவலும் காலை.    2 
அவைதாம், 
முன்னும் பின்னும் மொழி அடுத்து வருதலும் 
தம் ஈறு திரிதலும் பிறிது அவண் நிலையலும் 
அன்னவை எல்லாம் உரிய என்ப.    3 
கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று 
அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே.    4 
விழைவே காலம் ஒழியிசைக் கிளவி என்று 
அம் மூன்று என்ப தில்லைச் சொல்லே.    5 
அச்சம் பயம் இலி காலம் பெருமை என்று 
அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே.    6 
எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை 
முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம் என்று 
அப் பால் எட்டே உம்மைச் சொல்லே.    7 
பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை 
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ 
இரு மூன்று என்ப ஓகாரம்மே.    8 
தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே 
ஈற்றசை இவ் ஐந்து ஏகாரம்மே.    9 
வினையே குறிப்பே இசையே பண்பே 
எண்ணே பெயரொடு அவ் அறு கிளவியும் 
கண்ணிய நிலைத்தே என என் கிளவி.    10 
என்று என் கிளவியும் அதன் ஓரற்றே.    11 
விழைவின் தில்லை தன்னிடத்து இயலும்.    12 
தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும் 
அளபின் எடுத்த இசைய என்ப.    13 
மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை 
அப் பால் இரண்டு என மொழிமனார் புலவர்.    14 
எற்று என் கிளவி இறந்த பொருட்டே.    15 
மற்றையது என்னும் கிளவிதானே 
சுட்டு நிலை ஒழிய இனம் குறித்தன்றே.    16 
மன்ற என் கிளவி தேற்றம் செய்யும்.    17 
தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே.    18 
அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி என்று 
ஆயிரண்டு ஆகும் இயற்கைத்து என்ப.    19 
கொல்லே ஐயம்.    20 
எல்லே இலக்கம்.    21 
இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி 
பலர்க்கு உரி எழுத்தின் வினையொடு முடிமே.    22 
அசைநிலைக் கிளவி ஆகு வழி அறிதல்.    23 
ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை 
ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப.    24 
மா என் கிளவி வியங்கோள் அசைச்சொல்.    25 
மியா இக மோ மதி இகும் சின் என்னும் 
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்.    26 
அவற்றுள், 
இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் 
தகு நிலை உடைய என்மனார் புலவர்.    27 
அம்ம கேட்பிக்கும்.    28 
ஆங்க உரையசை.    29 
ஒப்பு இல் போலியும் அப் பொருட்டு ஆகும்.    30 
யா கா 
பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம் 
ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி.    31 
ஆக ஆகல் என்பது என்னும் 
ஆவயின் மூன்றும் பிரிவு இல் அசைநிலை.    32 
ஈர் அளபு இசைக்கும் இறுதியில் உயிரே 
ஆயியல் நிலையும் காலத்தானும் 
அளபெடை நிலையும் காலத்தானும் 
அளபெடை இன்றித் தான் வரும் காலையும் 
உள என மொழிப பொருள் வேறுபடுதல் 
குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும்.    33 
நன்று ஈற்று ஏயும் அன்று ஈற்று ஏயும் 
அந்து ஈற்று ஓவும் அன் ஈற்று ஓவும் 
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்.    34 
எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும் 
தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே.    35 
எஞ்சுபொருட் கிளவி செஞ்சொல் ஆயின் 
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்.    36 
முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின் 
எச்சக் கிளவி உரித்தும் ஆகும்.    37 
ஈற்று நின்று இசைக்கும் ஏ என் இறுதி 
கூற்றுவயின் ஒர் அளபு ஆகலும் உரித்தே.    38 
உம்மை எண்ணும் என என் எண்ணும் 
தம்வயின் தொகுதி கடப்பாடு இலவே.    39 
எண் ஏகாரம் இடையிட்டுக் கொளினும் 
எண்ணுக் குறித்து இயலும் என்மனார் புலவர்.    40 
உம்மை தொக்க எனா என் கிளவியும் 
ஆ ஈறு ஆகிய என்று என் கிளவியும் 
ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன.    41 
அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும் 
பெயர்க்கு உரி மரபின் செவ்வெண் இறுதியும் 
ஏயின் ஆகிய எண்ணின் இறுதியும் 
யாவயின் வரினும் தொகை இன்று இயலா.    42 
உம்மை எண்ணின் உருபு தொகல் வரையார்.    43 
உம் உந்து ஆகும் இடனுமார் உண்டே.    44 
வினையொடு நிலையினும் எண்ணு நிலை திரியா 
நினையல் வேண்டும் அவற்று அவற்று இயல்பே.    45 
என்றும் எனவும் ஒடுவும் தோன்றி 
ஒன்று வழி உடைய எண்ணினுள் பிரிந்தே.    46 
அவ் அச் சொல்லிற்கு அவை அவை பொருள் என 
மெய் பெறக் கிளந்த இயல ஆயினும் 
வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றி 
திரிந்து வேறு வரினும் தெரிந்தனர் கொளலே.    47 
கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும் 
கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே.    48