நற்றிணை

நற்றிணை

நற்றிணை


141 பாலை - சல்லியங்குமரனார்

இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய் 
மாரி யானையின் மருங்குல் தீண்டி 
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை 
நீடிய சடையோடு ஆடா மேனிக் 
குன்று உறை தவசியர் போல பல உடன் 
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும் 
அருஞ் சுரம் எளியமன் நினக்கே பருந்து பட 
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை 
ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி 
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த 
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள் 
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் 
தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது

142 முல்லை - இடைக்காடனார்

வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள் 
பாணி கொண்ட பல் கால் மெல் உறி 
ஞெலி கோல் கலப் பை அதளடு சுருக்கி 
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன் 
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப 
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி 
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் 
புறவினதுவே பொய்யா யாணர் 
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் 
முல்லை சான்ற கற்பின் 
மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே

வினை முற்றி மீளும்தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது

143 பாலை - கண்ணகாரன் கொற்றனார்

ஐதே கம்ம யானே ஒய்யென 
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து 
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும் 
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும் 
கிள்ளையும் கிளை எனக் கூஉம் இளையோள் 
வழு இலள் அம்ம தானே குழீஇ 
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர் 
இன்னா இன் உரை கேட்ட சில் நாள் 
அறியேன் போல உயிரேன் 
நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே

மனை மருட்சி

144 குறிஞ்சி - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

பெருங் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடி 
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு 
போது ஏர் உண் கண் கலுழவும் ஏதில் 
பேதை நெஞ்சம் கவலை கவற்ற 
ஈங்கு ஆகின்றால் தோழி பகுவாய்ப் 
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை 
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக் 
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி 
விரவு மலர் பொறித்த தோளர் 
இரவின் வருதல் அறியாதேற்கே

ஆற்றது ஏதத்திற்குக்கவன்று 
சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது

145 நெய்தல் - நம்பி குட்டுவன்

இருங் கழி பொருத ஈர வெண் மணல் 
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி 
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும் 
காமர் கொண்கன் நாம் வெங் கேண்மை 
ஐது ஏய்ந்தில்லா ஊங்கும் நம்மொடு 
புணர்ந்தனன் போல உணரக் கூறி 
தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை 
யான் எழில் அறிதலும் உரியள் நீயும் நம் 
பராரைப் புன்னைச் சேரி மெல்ல 
நள்ளென் கங்குலும் வருமரோ 
அம்ம வாழி தோழி அவர் தேர் மணிக் குரலே

இரவுக்குறி வந்து தலைமகன் 
சிறைப்புறத்தானாக தோழி வரைவுகடாயது

146 குறிஞ்சி - கந்தரத்தனார்

வில்லாப் பூவின் கண்ணி சூடி 
நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு 
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே 
கடன் அறி மன்னர் குடை நிழற் போலப் 
பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து 
இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என 
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் 
நல்லேம் என்னும் கிளவி வல்லோன் 
எழுதி அன்ன காண் தகு வனப்பின் 
ஐயள் மாயோள் அணங்கிய 
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே

பின்னின்ற தலைவன்முன்னிலைப் புறமொழியாக 
தோழி கேட்பச்சொல்லியது

147 குறிஞ்சி - கொள்ளம்பக்கனார்

யாங்கு ஆகுவமோ அணி நுதற் குறுமகள் 
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல் 
செவ் வாய்ப் பைங் கிளி கவர நீ மற்று 
எவ் வாய்ச் சென்றனை அவண் எனக் கூறி 
அன்னை ஆனாள் கழற முன் நின்று 
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை 
அறியலும் அறியேன் காண்டலும் இலனே 
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து 
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவிலை 
பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு 
தலை இறைஞ்சினளே அன்னை 
செலவு ஒழிந்தனையால் அளியை நீ புனத்தே

சிறைப்புறமாகத்தோழி சொல்லியது

148 பாலை - கள்ளம்பாளனார்

வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும் 
நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம் 
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றே 
நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை 
செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி 
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது 
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின் 
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து 
செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை 
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் 
அருஞ் சுரம் இறப்ப என்ப 
வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே

பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது

149 நெய்தல் - உலோச்சனார்

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி 
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி 
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற 
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப 
அலந்தனென் வாழி தோழி கானல் 
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல் 
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ 
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு 
செலவு அயர்ந்திசினால் யானே 
அலர் சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே

தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது 
சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம்

150 மருதம் - கடுவன் இளமள்ளனார்

நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன் 
மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி 
அரண் பல கடந்த முரண் கொள் தானை 
வழுதி வாழிய பல எனத் தொழுது ஈண்டு 
மன் எயில் உடையோர் போல அ·து யாம் 
என்னதும் பரியலோ இலம் எனத் தண் நடைக் 
கலி மா கடைஇ வந்து எம் சேரித் 
தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய 
நெஞ்சம் கொண்டமை விடுமோ அஞ்ச 
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக் 
கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே

தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை 
தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது

151 குறிஞ்சி - இளநாகனார்

நல் நுதல் பசப்பினும் பெருந் தோள் நெகிழினும் 
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச் 
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை 
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல் 
வாரற்கதில்ல தோழி கடுவன் 
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி 
கறி வளர் அடுக்கத்து களவினில் புணர்ந்த 
செம் முக மந்தி செய்குறி கருங் கால் 
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர் 
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து தன் 
புன் தலைப் பாறு மயிர் திருத்தும் 
குன்ற நாடன் இரவினானே

இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது

152 நெய்தல் - ஆலம்பேரி சாத்தனார்

மடலே காமம் தந்தது அலரே 
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே 
இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படர 
புலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம் 
எல்லாம் தந்ததன்தலையும் பையென 
வடந்தை துவலை தூவ குடம்பைப் 
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ 
கங்குலும் கையறவு தந்தன்று 
யாங்கு ஆகுவென்கொல் அளியென் யானே

மடல் வலித்த தலைவன்முன்னிலைப் 
புறமொழியாக தோழி கேட்பச்சொல்லியது

153 பாலை - தனிமகனார்

குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி 
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர் 
செம்பு சொரி பானையின் மின்னி எவ் வாயும் 
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி 
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு 
நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டு ஒழிந்து 
உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர் 
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி 
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் 
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே

பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது

154 குறிஞ்சி - நல்லாவூர் கிழார்

கானமும் கம்மென்றன்றே வானமும் 
வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி 
பல் குரல் எழிலி பாடு ஓவாதே 
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த 
வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை 
அஞ்சுதக உரறும் ஓசை கேளாது 
துஞ்சுதியோ இல தூவிலாட்டி 
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம் 
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர் 
வாரார் ஆயினோ நன்றே சாரல் 
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும் 
நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே

இரவுக்குறித் தலைவன்சிறைப்புறமாக வரைவு கடாயது

155 நெய்தல் - பராயனார்

ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய் 
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய் 
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய் 
யாரையோ நிற் தொழுதனெம் வினவுதும் 
கண்டோர் தண்டா நலத்தை தெண் திரைப் 
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ 
இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ 
சொல் இனி மடந்தை என்றனென் அதன் எதிர் 
முள் எயிற்று முறுவல் திறந்தன 
பல் இதழ் உண்கணும் பரந்தவால் பனியே

இரண்டாம் கூட்டத்துத்தலைவியை எதிர்ப்பட்டுத் 
தலைவன் சொல்லியது உணர்ப்பு வயின் வாரா 
ஊடற்கண் தலைவன் சொற்றதூஉம் ஆம்

156 குறிஞ்சி - கண்ணங் கொற்றனார்

நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம் 
கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும் 
பேர் அன்பினையே பெருங் கல் நாட 
யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள் 
சிறு தினை காக்குவம் சேறும் அதனால் 
பகல் வந்தீமோ பல் படர் அகல 
எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி 
அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர் 
பாடு இமிழ் விடர் முகை முழங்க 
ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே

இரவுக்குறி மறுத்தது

157 பாலை - இளவேட்டனார்

இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப் 
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து 
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப 
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில் 
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும் 
நம்வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகக் 
கேட்டொறும் கலுழுமால் பெரிதே காட்ட 
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை 
அம் பூந் தாது உக்கன்ன 
நுண் பல் தித்தி மாஅயோளே

பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் 
உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது

158 குறிஞ்சி - வெள்ளைக்குடி நாகனார்

அம்ம வாழி தோழி நம்வயின் 
யானோ காணேன் அதுதான் கரந்தே 
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே 
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே 
விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி 
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி 
குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய் 
வேங்கை முதலொடு துடைக்கும் 
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே

ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப்புறமாகச் சொல்லியது

159 நெய்தல் - கண்ணம் புல்லனார்

மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின் 
உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை 
நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை 
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி 
எல்லை கழிப்பினம்ஆயின் மெல்ல 
வளி சீத்து வரித்த புன்னை முன்றில் 
கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய 
எழு எனின் அவளும் ஒல்லாள் யாமும் 
ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து 
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற் 
சில் குடிப் பாக்கம் கல்லென 
அல்குவதாக நீ அமர்ந்த தேரே

தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி வரைவு கடாயது

160 குறிஞ்சி

நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும் 
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும் 
நும்மினும் அறிகுவென்மன்னே கம்மென 
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை 
விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின் 
ஐம் பால் வகுத்த கூந்தல் செம் பொறி 
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி 
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை 
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் 
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே

கழற்று எதிர்மறை