நற்றிணை

நற்றிணை

நற்றிணை


181 முல்லை

உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல் 
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி 
வந்ததன் செவ்வி நோக்கி பேடை 
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன 
சிறு பல் பிள்ளையடு குடம்பை கடிதலின் 
துவலையின் நனைந்த புறத்தது அயலது 
கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து 
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப 
கையற வந்த மையல் மாலை 
இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த 
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப 
வந்தன்று பெருவிறல் தேரே 
உய்ந்தன்றாகும் இவள் ஆய் நுதற் கவினே

வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது
182 குறிஞ்சி

நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று 
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின் 
பாவை அன்ன நிற் புறங்காக்கும் 
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள் 
கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு 
நன் மார்பு அடைய முயங்கி மென்மெல 
கண்டனம் வருகம் சென்மோ தோழி 
கீழும் மேலும் காப்போர் நீத்த 
வறுந் தலைப் பெருங் களிறு போல 
தமியன் வந்தோன் பனியலை நீயே

வரைவு நீட்டிப்ப தலைமகள் ஆற்றாமை அறிந்த 
தோழி சிறைப்புறமாகச் சொல்லி வரைவு கடாயது
183 நெய்தல்

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து 
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி 
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி 
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து 
உமணர் போகலும் இன்னாதாகும் 
மடவை மன்ற கொண்க வயின்தோறு 
இன்னாது அலைக்கும் ஊதையடு ஓரும் 
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே 
இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த 
வறு நீர் நெய்தல் போல 
வாழாள் ஆதல் சூழாதோயே

வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி சொல்லியது
184 பாலை

ஒரு மகள் உடையேன் மன்னே அவளும் 
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையடு 
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள் 
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று 
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே 
உள்ளின் உள்ளம் வேமே உண்கண் 
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என் 
அணி இயற் குறுமகள் ஆடிய 
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே

மனை மருட்சி
185 குறிஞ்சி

ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி 
காமம் கைம்மிக கையறு துயரம் 
காணவும் நல்காய் ஆயின் பாணர் 
பரிசில் பெற்ற விரி உளை நல் மான் 
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி 
இரவலர் மெலியாது ஏறும் பொறையன் 
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின் 
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து 
பறவை இழைத்த பல் கண் இறாஅல் 
தேனுடை நெடு வரை தெய்வம் எழுதிய 
வினை மாண் பாவை அன்னோள் 
கொலை சூழ்ந்தனளால் நோகோ யானே

பாங்கற்குத் தலைவன் சொல்லியது சேட்படுக்கும் 
தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்
186 பாலை

கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி 
இரும் பிணர்த் தடக் கை நீட்டி நீர் நொண்டு 
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும் 
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை 
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து 
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர் 
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில 
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு 
காமர் பொருட் பிணி போகிய 
நாம் வெங் காதலர் சென்ற ஆறே

பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது
187 நெய்தல் - ஒளவையார்

நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக 
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய 
பல் பூங் கானலும் அல்கின்றன்றே 
இன மணி ஒலிப்ப பொழுது படப் பூட்டி 
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய 
தேரும் செல் புறம் மறையும் ஊரொடு 
யாங்கு ஆவதுகொல் தானே தேம் பட 
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின் 
மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு 
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே

தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கி 
தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது
188 குறிஞ்சி

படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக் 
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை 
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம் 
மெல் விரல் மோசை போல காந்தள் 
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப 
நன்றி விளைவும் தீதொடு வரும் என 
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்துத் 
தேம் முதிர் சிலம்பில் தடைஇய 
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே

பகற்குறி மறுத்து வரைவு கடாயது
189 பாலை

தம் அலது இல்லா நம் நயந்து அருளி 
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர் 
தெறல் அருங் கடவுள் முன்னர் சீறியாழ் 
நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின் 
கங்கை வங்கம் போகுவர்கொல்லோ 
எவ் வினை செய்வர்கொல் தாமே வெவ் வினைக் 
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய 
கானப் புறவின் சேவல் வாய் நூல் 
சிலம்பி அம் சினை வெரூஉம் 
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
190 குறிஞ்சி

நோ இனி வாழிய நெஞ்சே மேவார் 
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த் 
திதலை எ·கின் சேந்தன் தந்தை 
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி 
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் 
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன 
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய 
வலை மான் மழைக் கண் குறுமகள் 
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே

பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் 
சொல்லியது அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் 
சொல்லியதூஉம் ஆம் இடைச் சுரத்துச் சென்று 
தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் 
கழறியதூஉம் ஆம்
191 நெய்தல் - உலோச்சனார்

சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் 
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த 
வண்டற் பாவை வன முலை முற்றத்து 
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம் 
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி 
எல்லி வந்தன்றோ தேர் எனச் சொல்லி 
அலர் எழுந்தன்று இவ் ஊரே பலருளும் 
என் நோக்கினளே அன்னை நாளை 
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின் 
அணிக் கவின் உண்மையோ அரிதே மணிக் கழி 
நறும் பூங் கானல் வந்து அவர் 
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே

தோழி தலைமகன் சிறைப்புறமாக செறிப்பு 
அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது
192 குறிஞ்சி

குருதி வேட்கை உரு கெழு வய மான் 
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் 
மரம் பயில் சோலை மலிய பூழியர் 
உருவத் துருவின் நாள் மேயல் ஆரும் 
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை 
நீ நயந்து வருதல் எவன் எனப் பல புலந்து 
அழுதனை உறையும் அம் மா அரிவை 
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப் 
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை 
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின் 
ஆய் நலம் உள்ளி வரின் எமக்கு 
ஏமம் ஆகும் மலைமுதல் ஆறே

இரவுக்குறி மறுக்கப்பட்டு 
ஆற்றானாய தலைமகன் சொல்லியது
193 பாலை

அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத் 
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ 
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ ஆனாய் 
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை 
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே 
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் 
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக 
யாரும் இல் ஒரு சிறை இருந்து 
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது
194 குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்

அம்ம வாழி தோழி கைம்மாறு 
யாது செய்வாங்கொல் நாமே கய வாய்க் 
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும் 
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர்த் தடக் கை 
அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசைத் 
தனி நிலை இதணம் புலம்பப் போகி 
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை 
குன்ற வெற்பனொடு நாம் விளையாட 
இரும்பு கவர்கொண்ட ஏனற் 
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே

சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது
195 நெய்தல்

அருளாயாகலோ கொடிதே இருங் கழிக் 
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி 
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும் 
மெல்லம் புலம்ப யான் கண்டிசினே 
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி 
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென 
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் 
நீர் அலைத் தோற்றம் போல 
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே

களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக 
ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது
196 நெய்தல் - வெள்ளைக்குடி நாகனார்

பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை 
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின் 
மால்பு இடர் அறியா நிறையுறு மதியம் 
சால்பும் செம்மையும் உடையை ஆதலின் 
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின் 
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய் 
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய் 
சிறுகுபு சிறுகுபு செரீஇ 
அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே

நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த 
காலத்து ஆற்றாளாகிய தலைமகள் திங்கள் 
மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது
197 பாலை - நக்கீரர்

தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலே 
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே 
கண்ணும் தண் பனி வைகின அன்னோ 
தௌ ந்தனம் மன்ற தேயர் என் உயிர் என 
ஆழல் வாழி தோழி நீ நின் 
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு 
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய 
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல் 
பொலந் தொடி போல மின்னி கணங் கொள் 
இன் இசை முரசின் இரங்கி மன்னர் 
எயில் ஊர் பல் தோல் போலச் 
செல் மழை தவழும் அவர் நல் மலை நாட்டே

வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது
198 பாலை - கயமனார்

சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து 
ஓமை நீடிய கான் இடை அத்தம் 
முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள் 
கண்பட நீர் ஆழ்ந்தன்றே தந்தை 
தன் ஊர் இடவயின் தொழுவேன் நுண் பல் 
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை 
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர் 
சில் வளை பல் கூந்தலளே அவளே 
மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை 
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த் 
தந்தைதன் ஊர் இதுவே 
ஈன்றேன் யானே பொலிக நும் பெயரே

பின் சென்ற செவிலி இடைச் 
சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது
199 நெய்தல் - பேரி சாத்தனார்

ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை 
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு 
நள்ளென் யாமத்து உயவுதோறு உருகி 
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து 
உளெனே வாழி தோழி வளை நீர்க் 
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர் 
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி 
வளி பொரக் கற்றை தாஅய் நளி சுடர் 
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய 
பைபய இமைக்கும் துறைவன் 
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே

வன்புறை எதிரழிந்தது
200 மருதம் - கூடலூர்ப் பல் கண்ணனார்

கண்ணி கட்டிய கதிர அன்ன 
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி 
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில் 
சாறு என நுவலும் முது வாய்க் குயவ 
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ 
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப் 
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி 
கை கவர் நரம்பின் பனுவற் பாணன் 
செய்த அல்லல் பல்குவ வை எயிற்று 
ஐது அகல் அல்குல் மகளிர் இவன் 
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின் எனவே

தோழி தலைமகளது குறிப்பு அறிந்து வாயிலாகப் புக்க 
பாணன் கேட்ப குயவனைக் கூவி இங்ஙனம் 
சொல்லாயோ என்று குயவற்குச் சொல்லியது