அகநானூறு

அகநானூறு

மணிமிடை பவளம்


253
பாடியவர்: நக்கீரர்,
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

வைகல் தோறும் பசலை பாய என்
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென
அன்னையும் அமரா முகத்தினள் அலரே
வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி
நாடு பல தந்த பசும்பூண் பாண்டியன்  5
பொன் மலி நெடுநகர்க் கூடல் ஆடிய
இன்னிசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான்
சில நாள் உய்யலென் போன்ம் எனப் பல நினைந்து
ஆழல் வாழி தோழி வடாஅது
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்யப்  10
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய்
கணம் சால் கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து
இனம் தலைத்தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத்
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
அம் தூம்பு அகல் அமைக் கமம் செலப் பெய்த  15
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி
கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம்
நேரா வன்தோள் வடுகர் பெருமகன்
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
அயிரியாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து  20
உள்ளுப தில்ல தாமே பணைத்தோள்
குரும்பை மென் முலை அரும்பிய சுணங்கின்
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங்கூந்தல்
மாக விசும்பின் திலகமொடு பதித்த
திங்கள் அன்ன நின் திருமுகத்து  25
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே.

254
பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

நரை விராவுற்ற நறு மென் கூந்தல்
செம் முது செவிலியர் பல பாராட்டப்
பொலஞ்செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
மணன் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ
மனை உறை புறவின் செங்கால் சேவல்  5
துணையொடு குறும்பறை பயிற்றி மேல் செல
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும்
நம் வயின் நினையும் நல் நுதல் அரிவை
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி  10
வந்து வினை முடித்தனம் ஆயின் நீயும்
பணை நிலை முனஇய வினை நவில் புரவி
இழை அணி நெடுந்தேர் ஆழி உறுப்ப
நுண் கொடி மின்னின் பைம்பயிர் துமியத்
தளவ முல்லையொடு தலைஇத் தண்ணென  15
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
நெடி இடை பின்படக் கடவுமதி என்று யான்
சொல்லிய அளவை நீடாது வல்லெனத்
தார் மணி மா அறிவுறாஅ
ஊர் நணித் தந்தனை உவகை யாம் பெறவே.  20

255
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின்று ஆகி
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்
கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்  5
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே அழி படர் அகல
வருவர் மன்னால் தோழி தண் பணைப்
பொருபுனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்  10
கருவிளை முரணிய தண் புதல் பகன்றைப்
பெருவளம் மலர அல்லி தீண்டிப்
பலவுக் காய்ப் புறத்த பசும்பழப் பாகல்
கூதள மூது இலைக் கொடி நிரைத் தூங்க
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை  15
கடி மனை மாடத்துக் கங்குல் வீசத்
திருந்து இழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய
நிரை வளை ஊருந்தோள் என
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.


256
பாடியவர்: மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்,
திணை: மருதத் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில்
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
நொடி விடு கல்லிற் போகி அகன் துறைப்
பகுவாய் நிறைய நுங்கின் கள்ளின்
உகுவார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு  5
தீம் பெரும் பழனம் உழக்கி அயலது
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர
பொய்யால் அறிவென் நின் மாயம் அதுவே
கையகப்பட்டவும் அறியாய் நெருநை
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை  10
ஏர்தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து
பரத்தை ஆயம் கரப்பவும் ஒல்லாது
கவ்வை ஆகின்றால் பெரிதே காண்தகத்
தொல் புகழ் நிறைந்த பல் பூங்கழனிக்
கரும்பு அமல் படப்பைப் பெரும் பெயர்க் கள்ளூர்த்  15
திருநுதல் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற
திறன் இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறி ஆர் பெருங்கிளை செறியப் பற்றி
நீறு தலைப் பெய்த ஞான்றை  20
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே.

257
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தலைவியிடம் சொன்னது

வேனில் பாதிரிக் கூனி மாமலர்
நறைவாய் வாடல் நாறும் நாள் சுரம்
அரிஆர் சிலம்பின் சீறடி சிவப்ப
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின்
பொம்மல் ஓதி பொதுள வாரி  5
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச்
சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின்
தேம்பாய் கூந்தல் குறும்பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் அணி கொள
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன் கை  10
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி
வல்லுவை மன்னால் நடையே கள்வர்
பகை மிகு கவலைச் செல்நெறி காண்மார்
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்துக்  15
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும்
துன்புறு தகுவன ஆங்கண் புன்கோட்டு
அரிலிவர் புற்றத்து அல்கு இரை நசைஇ
வெள் அரா மிளிர வாங்கும்  20
பிள்ளை எண்கின் மலை வயினானே.

258
பாடியவர்: பரணர், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை நற்கு அறிந்தும் அன்னோள்
துன்னல மாதோ எனினும் அஃது ஒல்லாய்
தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக்  5
கடுங்காற்று எடுக்கும் நெடும் பெருங்குன்றத்து
மாய இருள் அளை மாய் கல் போல
மாய்க தில் வாழிய நெஞ்சே நாளும்
மெல் இயர் குறுமகள் நல் அகம் நசைஇ
அரவு இயல் தேரும் அஞ்சுவரு சிறு நெறி  10
இரவின் எய்தியும் பெறாஅய் அருள் வரப்
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு உலகத்து
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக
காமம் கைம்மிக உறுதர
ஆனா அரும் படர் தலைத்தந்தோயே.  15.

259
பாடியவர்: கயமனார்,
திணை: பாலைத் திணை 
தோழி தலைவியிடம் சொன்னது

வேலும் விளங்கின இளையரும் இயன்றனர்
தாரும் தையின தழையும் தொடுத்தன
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப்
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்துக்
குறு முறி ஈன்றன மரனே நறு மலர் 5
வேய்ந்தன போலத் தோன்றிப் பல உடன்
தேம்படப் பொதுளின பொழிலே கானமும்
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள்
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப்
போது வந்தன்று தூதே நீயும்  10
கலங்கா மனத்தை ஆகி என் சொல்
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி
தெற்றி உலறினும் வயலை வாடினும்
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும்
நின்னினும் மடவள் நனி நின் நயந்த  15
அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர்
புலி மருள் செம்மல் நோக்கி
வலியாய் இன்னும் தோய்க நின் முலையே.

260
பாடியவர்: மோசி கரையனார், 
திணை: நெய்தற் திணை 
தோழியும் தலைவியும் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

மண்டிலம் மழுக மலை நிறம் கிளர
வண்டு இனம் மலர் பாய்ந்து ஊத மீ மிசைக்
கண்டல் கானல் குருகினம் ஒலிப்பக்
கரை ஆடு அலவன் அளைவயின் செறியத்
திரை பாடு அவியத் திமில் தொழில் மறப்பச்  5
செக்கர் தோன்றத் துணை புணர் அன்றில்
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேரக்
கழி மலர் கமழ் முகம் கரப்பப் பொழில் மனைப்
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ
எல்லை பைப்பய கழிப்பி எல் உற  10
யாங்கு ஆகுவள் கொல் தானே நீங்காது
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள்
கதுமெனக் குழறும் கழுது வழங்கு அரை நாள்
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த
அன்பிலாளன் அறிவு நயந்தேனே.  15

261
பாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ,
திணை: பாலைத் திணை 
தலைவன் தோழியிடம் சொன்னது

கானப் பாதிரிக் கருந்தகட்டு ஒள் வீ
வேனில் அதிரலொடு விரைஇக் காண்வர
சில் ஐங்கூந்தல் அழுத்தி மெல் இணர்த்
தேம்பாய் மராஅம் அடைச்சி வான் கோல்
இலங்கு வளை தெளிர்ப்ப வீசிச் சிலம்பு நகச்  5
சில மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின்
அணி மாண் சிறுபுறம் காண்கம் சிறு நனி
ஏகு என ஏகல் நாணி ஒய்யென
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய்
நின்று தலை இறைஞ்சியோளே அது கண்டு  10
யாம் முந்துறுதல் செல்லேம் ஆயிடை
அருஞ்சுரத்து அல்கி யேமே இரும் புலி
களிறு அட்டுக் குழுமும் ஓசையும் களி பட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்
வல்வாய்க் கடுந்துடிப் பாணியும் கேட்டே.  15

262
பாடியவர்: பரணர், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

முதைபடு பசுங்காட்டு அரில் பவர் மயக்கிப்
பகடு பல பூண்ட உழவுறு செஞ்செய்
இடு முறை நிரம்பி ஆகு வினைக் கலித்துப்
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென
வாய்மொழித் தந்தையைக் கண் களைந்து அருளாது  5
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறங் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து அவர் 10
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னி மிஞிலி போல மெய்ம் மலிந்து
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும்  15
வண்டுபடு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி
அம் தீம் கிளவி வந்தமாறே.

263
பாடியவர்: கருவூர்க் கண்ணம்பலனார், 
திணை: பாலைத் திணை 
மகட்போக்கிய தாய் சொன்னது

தயங்கு திரைப் பெருங்கடல் உலகு தொழத் தோன்றி
வயங்கு கதிர் விரிந்த உருகெழு மண்டிலம்
கயங் கண் வறப்பப் பாஅய் நல் நிலம்
பயங் கெடத் திருகிய பைது அறு காலை
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு  5
ஆறு செல் வம்பலர் வருதிறம் காண்மார்
வில் வல் ஆடவர் மேலான் ஒற்றி
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ்சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு
அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ  10
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க
இனி தினின் புணர்க்குவென் மன்னே துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதை
வருமுலை முற்றத்து ஏமுறு துயிலே.  15

264
பாடியவர்: உம்பற்காட்டு இளங்கண்ணனார், 
திணை: முல்லைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது

மழை இல் வானம் மீன் அணிந்தன்ன
குழை அமல் முசுண்டை வாலிய மலர
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப்
பெரிய சூடிய கவர் கோல் கோவலர்
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு  5
நீர் திகழ் கண்ணியர் ஊர் வயின் பெயர்தர
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து
ஏர்தரு கடு நீர் தெருவு தொறு ஒழுகப்
பேரிசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கிக்
கூதிர் நின்றன்றால் பொழுதே காதலர்  10
நம் நிலை அறியார் ஆயினும் தம் நிலை
அறிந்தனர் கொல்லோ தாமே ஓங்கு நடைக்
காய் சின யானை கங்குல் சூழ
அஞ்சுவர இறுத்த தானை
வெஞ்சின வேந்தன் பாசறையோரே?  15