கலித்தொகை

கலித்தொகை

பாலைக்கலி


31
கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற, 
நெடும் கயத்து அயல் அயல் அயிர் தோன்ற, அம்மணல் 
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உகப், 
பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீயக், காதலர்ப் 
புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன, 
மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால், 
கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுதுமன் - 
'பொய்யேம்' என்று, ஆய் இழாய்! புணர்ந்தவர் உரைத்ததை; 

மயங்கு அமர் மாறு அட்டு, மண் வௌவி வருபவர், 
தயங்கிய களிற்றின் மேல், தகை காண விடுவதோ - 
பயம் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு, 
வயங்கு இழை தண்ணென, வந்த இவ் அசை வாடை? 

தாள் வலம்பட வென்று, தகை நல் மா மேல் கொண்டு, 
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ - 
நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு, 
தோள் அதிர்பு அகம் சேரத் துவற்றும் இச் சில் மழை? 

பகை வென்று திறை கொண்ட பாய் திண்தேர் மிசையவர் 
வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ - 
புகை எனப் புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா 
முகை வெண் பல் நுதி பொர, முற்றிய கடும் பனி? 

என ஆங்கு 
வாளாதி வயங்கு இழாய்! 'வருந்துவள் இவள்' என, 
நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி, 
மீளி வேல் தானையர் புகுதந்தார் - 
நீள் உயர் கூடல் நெடு கொடி எழவே. 

32
எ·கு இடை தொட்ட, கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் - 
மை அற - விளங்கிய, துவர் மணல் அது; அது 
ஐது ஆக நெறித்தன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் 
அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல், 
பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ, வெறி கொளத் - 
துணி நீரால், தூ மதி நாளால், அணிபெற - 
ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும், 
ஆன்றவர் அடக்கம் போல் அலர்ச் செல்லாச் சினையொடும், 
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும், 
நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும், 
உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும், 
புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும் - 
நயந்தார்க்கோ நல்லைமன், இளவேனில்! எம் போல? 

பசந்தவர் பைதல் நோய், பகை எனத் தணித்து, நம் 
இன் உயிர் செய்யும் மருந்து ஆகப், பின்னிய 
காதலர் - எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப் 
போது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும் - 
தூது வந்தன்றே, தோழி! 
துயர் அறு கிளவியோடு! அயர்ந்தீகம் விருந்தே! 

33
வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய 
யாறு கண் விழித்த போல், கயம் நந்திக் கவின் பெற, 
மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போலப், 
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உகத், 
துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப, 
மணி போல அரும்பு ஊழ்த்து, மரம் எல்லாம் மலர் வேயக் 
காதலர்ப் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது, 
தாது அவிழ் வேனிலோ வந்தன்று; வாரார், நம் 
போது எழில் உண் கண் புலம்ப நீத்தவர்; 

எரி உரு உறழ இலவம் மலரப், 
பொரி உரு உறழப் புன்கு பூ உதிரப், 
புது மலர்க் கோங்கம் பொன் எனத் தாது ஊழ்ப்பத், 
தமியார்ப் புறத்து எறிந்து எள்ளி, முனிய வந்து, 
ஆர்ப்பது போலும் பொழுது; என் அணி நலம் 
போர்ப்பது போலும் பசப்பு; 

நொந்து நகுவன போல் நந்தின கொம்பு; நைந்து உள்ளி 
உகுவது போலும், என் நெஞ்சு; எள்ளித் 
தொகுபு உடன் ஆடுவ போலும், மயில்; கையில் 
உகுவன போலும், வளை; என் கண் போல் 
இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார்; 
மிகுவது போலும் இந் நோய்; 

நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல் 
இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊதத் - 
தூது அவர் விடுதரார்; துறப்பார் கொல்? நோதக 
இரும் குயில் ஆலும் அரோ; 

என ஆங்கு, 
புரிந்து நீ எள்ளும் குயிலையும், அவரையும், புலவாதி; 
நீல் இதழ் உண் கண்ணாய் நெறி கூந்தல் பிணி விட 
நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்ற, 
மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் - 
கால் உறழ் கடு திண் தேர் கடவினர் விரைந்தே. 

34
மன் உயிர் ஏமுற, மலர் ஞாலம் புரவு ஈன்று, 
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி, இறந்த பின், 
சில் நீரால் அறல் வார, அகல் யாறு கவின் பெற, 
முன் ஒன்று தமக்கு ஆற்றி, முயன்றவர் இறுதிக் கண் 
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல், 
பல் மலர் சினை உகச் சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப, 
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்; 

விரி காஞ்சித் தாது ஆடி இரும் குயில் விளிப்பவும், 
பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும், 
கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி, 
எரி பொத்தி, என் நெஞ்சம் சுடும் ஆயின், எவன் செய்கோ? 

பொறை தளர் கொம்பின் மேல் சிதர் இனம் இறைகொள 
நிறை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும், 
முறை தளர்ந்த மன்னவன் கீழ்க் குடி போலக் கலங்குபு, 
பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின், எவன் செய்கோ? 

தளை அவிழ் பூஞ் சினைச் சுரும்பு யாழ் போல இசைப்பவும், 
கொளை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும், 
கிளை அழிய வாழ்பவன் ஆக்கம்போல் புல் என்று, 
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின், எவன் செய்கோ? 

என ஆங்கு, 
நின் உள் நோய் நீ உரைத்து அலமரல்; எல்லா! நாம் 
எண்ணிய நாள் வரை இறவாது, காதலர் 
பண்ணிய மாவினர் புகுதந்தார் 
கண் உறு பூசல் கை களைந்தாங்கே. 

35
மடி இலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம் 
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப, 
மாயவள் மேனி போல் தளிர் ஈன, அம் மேனித் 
தாய சுணங்கு போல் தளிர் மிசைத் தாது உக, 
மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப, 
அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார, 
நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால், 
'துறந்து உள்ளார் அவர்' எனத், துனி கொள்ளல், எல்லா! நீ; 

வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர்த் 
தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுது அன்றோ- 
கண் நிலா நீர் மல்கக் கவவி, நாம் விடுத்தக்கால் 
ஒள் நுதால்! நமக்கு அவர் 'வருதும்' என்று உரைத்ததை? 

மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து, அவர் 
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ - 
'வலன் ஆக, வினை!' என்று வணங்கி, நாம் விடுத்தக்கால், 
ஒளி இழாய்! நமக்கு அவர் 'வருதும்' என்று உரைத்ததை? 

நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார் 
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ- 
பல நாடு நெஞ்சினேம் பரிந்து, நாம் விடுத்தக்கால், 
சுடர் இழாய்! நமக்கு அவர் 'வருதும்' என்று உரைத்ததை? 

என ஆங்கு, 
உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி, 
எள் அறு காதலர் இயைதந்தார் - புள் இயல் 
காமர் கடும் திண்தேர் பொருப்பன், 
வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே. 

36
கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல், மராத்து 
நெடு மிசைச் சூழும் மயில் ஆலும் சீர, 
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்பத், 
தொடி மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர, 
இயன் எழீஇயவை போல, எவ்வாய்யும் 'இம்' மெனக் 
கயன் அணி பொதும்பருள் கடி மலர்த் தேன் ஊத, 
மலர் ஆய்ந்து வயின் வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப, 
இரும் குயில் ஆலப், பெரும் துறை கவின் பெறக் 
குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும் 
சீரார் செவ்வியும் வந்தன்று; 
வாரார் தோழி நம் காதலோரே; 

பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று, நுதல்; 
சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள்; 
நனி அறல் வாரும் பொழுது என, வெய்ய 
பனி அறல் வாரும், என் கண்; 

மலை இடை போயினர் வரல் நசைஇ நோயொடு 
முலை இடைக் கனலும், என் நெஞ்சு; 

காதலின் பிரிந்தார் கொல்லோ? வறிது, ஓர் 
தூதொடு மறந்தார் கொல்லோ? நோதகக், 
காதலர் காதலும் காண்பாம் கொல்லோ? 
துறந்தவர் ஆண்டு ஆண்டு உறைகுவர் கொல்லோ? யாவது -
'நீள் இடைப்படுதலும் ஒல்லும், யாழ நின் 
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி! 
நாள் அணி சிதைத்தலும் உண்டு' என நயவந்து 
கேள்வி அந்தணர் கடவும் 
வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே.