அகநானூறு

அகநானூறு

நித்திலக்கோவை


337
பாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனிப்
பேர் அமர் மழைக் கண் புலம்பு கொண்டு ஒழிய
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிதன்று ஆகலின்
அவணதாகப் பொருள் என்று உமணர்  5
கண நிரை அன்ன பல் கால் குறும்பொறைத்
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்
படையுடைக் கையர் வருதிறம் நோக்கி
உண்ணா மருங்குல் இன்னோன் கையது
பொன் ஆகுதலும் உண்டு எனக் கொன்னே  10
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிச்
செங்கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயரக்
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை  15
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலைக்
கள்ளி நீழல் கதறுபு வதிய
மழை கண் மாறிய வெங்காட்டு ஆர் இடை
எமியம் கழி தந்தோயே பனி இருள்
பெருங்கலி வானம் தலைஇய  20
இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே.

338
பாடியவர்: மதுரைக் கணக்காயனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
மறங் கெழு தானை அரசர் உள்ளும்
அறங் கடைப்பிடித்த செங்கோலுடன் அமர்
மறஞ் சாய்த்து எழுந்த வலன் உயர் திணிதோள்
பலர் புகழ் திருவின் பசும்பூண் பாண்டியன்  5
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன்
சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல்
துணை ஈர் ஓதி மாஅயோள் வயின்
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
முயங்கல் இயையாது ஆயினும் என்றும்  10
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக
ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும்
துன் அருந்துப்பின் வென் வேல் பொறையன்
அகல் இருங்கானத்துக் கொல்லி போலத்
தவாஅலியரே நட்பே அவள் வயின்  15
அறாஅலியரே தூதே பொறாஅர்
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன்
தொகு போர்ச் சோழன் பொருள் மலி பாக்கத்து
வழங்கல் ஆனாப் பெருந்துறை  20
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே.

339
பாடியவர்: நரைமுடி நெட்டையர், 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

வீங்கு விசைப் பிணித்த விரை பரி நெடுந்தேர்
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கிற்
பாம்பு என முடுகு நீர் ஓடக் கூம்பிப்
பற்று விடு விரலின் பயறுகாய் ஊழ்ப்ப
அற்சிரம் நின்றன்றாற் பொழுதே முற்பட   5
ஆள் வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து
ஆண்மை வாங்கக் காமம் தட்பக்
கவைபடு நெஞ்சம் கண்கண் அகைய
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்  10
நோம் கொல் அளியள் தானே யாக்கைக்கு
உயிர் இயைந்தன்ன நட்பின் அவ் வுயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவு அரியோளே.

340
பாடியவர்: நக்கீரனார், 
திணை: நெய்தற் திணை 
தோழி தலைவனிடம் சொன்னது

பன்னாள் எவ்வம் தீரப் பகல் வந்து
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி
மாலை மால் கொள நோக்கிப் பண் ஆய்ந்து
வலவன் வண் தேர் இயக்க நீயும்
செலவு விருப்புறுதல் ஒழிக தில் அம்ம  5
செல்லா நல்லிசைப் பொலம் பூண் திரையன்
பல் பூங்கானல் பவத்திரி அனவிவள்
நல் எழில் இள நலம் தொலைய ஒல்லெனக்
கழியே ஓதம் மல்கின்று வழியே
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்  10
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது என
நின் திறத்து அவலம் வீட இன்று இவண்
சேப்பின் எவனோ பூக்கேழ் புலம்ப
பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅத்
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே  15
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம் திண் திமில்
எல்லுத் தொழின் மடுத்த வல் வினைப் பரதவர்
கூர் வளிக் கடு விசை மண்டலின் பாய்புடன்  20
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை
தண் கடல் அசை வளி எறிதொறும் வினை விட்டு
முன்றில் தாழைத் தூங்கும்
தெண் கடல் பரப்பின் எம் உறைவின் ஊர்க்கே.

341
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

உய்தகை இன்றால் தோழி பைபயக்
கோங்கும் கொய் குழை உற்றன குயிலும்
தேம்பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக்
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள்  5
மழை கழிந்தன்ன மாக்கால் மயங்கு அறல்
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு
மதவு நடை நாக்கொடு அசைவீடப் பருகி
குறுங்கால் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்
பொன் தகை நுண் தாது உறைப்பத் தொக்கு உடன்  10
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும்
யாணர் வேனில் மன் இது
மாண் நலம் நுகரும் துணையுடையோர்க்கே.

342
பாடியவர்: மதுரைக் கணக்காயனார், 
திணை: குறிஞ்சித் திணை
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை
புணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்கு யான்
கிளைஞன் அல்லனோ நெஞ்சே தெனாஅது
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்  5
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்
அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்து படப்
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை
கெடாஅ நல் இசைத் தென்னன் தொடாஅ  10
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
வரையர மகளிரின் அரியள்
அவ்வரி அல்குல் அணையாக் காலே.


343
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார் 
திணை: பாலைத் திணை 
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது 

வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத்தோள்
சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை
நல்லெழில் ஆகம் புல்லுதல் நயந்து
மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்தலை சிதைத்த வன்தலை நடுகல் 5
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து அவ்
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ்சினை 10
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார்
நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப்
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த
பெயர்படை கொள்ளார்க்கு உயவுத்துணை ஆகி
உயர்ந்த ஆள் வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று 15
உள்ளினை வாழி என் நெஞ்சே கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண்
சின்மொழிப் பொலிந்த துவர் வாய்ப்
பன் மாண் பேதையின் பிரிந்த நீயே.

344
பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்,
திணை: முல்லைத் திணை 
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

வள மழை பொழிந்த வால் நிறக் களரி
உளர் தரு தண் வளி உறு தொறும் நிலவெனத்
தொகு முகை விரிந்த முடக்கால் பிடவின்
வை ஏர் வால் எயிற்று ஒண்ணுதல் மகளிர்
கை மாண் தோளி கடுப்பப் பையென  5
மயில் இனம் பயிலும் மரம் பயில் கானம்
எல்லிடை உறாஅ அளவை வல்லே
கழல் ஒளி நாவின் தெண் மணி கறங்க
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி
வயக்குறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து  10
இயக்குமதி வாழியோ கையுடை வலவ
பயப்புறு படர் அட வருந்திய
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே.

345
பாடியவர்: குடவாயில் கீரத்தனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

விசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கித்
தண் பதம் படுதல் செல்கெனப் பன்மாண்
நாம் செல விழைந்தனமாக ஓங்கு புகழ்க்
கான் அமர் செல்வி அருளலின் வெண்கால்
பல் படைப் புரவி எய்திய தொல்லிசை  5
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய
இன மழை தவழும் ஏழில் குன்றத்துக்
கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல்
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
சின்னாள் கழிக என்று முன்னாள்  10
நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார்
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப
உறை கழிந்து உலந்த பின்றைப் பொறைய
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த  15
கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான் பூச்
செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்பக்
காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ்
கல் கண் சீக்கும் அத்தம்  20
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே.

346
பாடியவர்: நக்கீரர்,
திணை: மருதத் திணை 
தோழி தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது

நகை நன்று அம்ம தானே இறை மிசை
மாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும்பறைச் சேவல்
வெள்ளி வெண் தோடு அன்ன கயல் குறித்துக்
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர்  5
காஞ்சி அம் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து
பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருந்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை
மீது அழி கடு நீர் நோக்கிப் பைப்பயப்  10
பார்வல் இருக்கும் பயங் கேழ் ஊர
யாம் அது பேணின்றோ இலமே நீ நின்
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு விசி பிணி
மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி  15
எம் மனை வாராயாகி முன்னாள்
நும் மனைச் சேர்ந்த ஞான்றை அம்மனைக்
குறுந்தொடி மடந்தை உவந்தனள் நெடுந்தேர்
இழை அணி யானைப் பழையன் மாறன்
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்  20
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்க்
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி
ஏதின் மன்னர் ஊர் கொளக்
கோதை மார்பன் உவகையின் பெரிதே.  25

347
பாடியவர்: மாமூலனார், 
திணை: பாலைத் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது

தோளும் தொல் கவின் தொலைய நாளும்
நலம் கவர் பசலை நல்கு இன்று நலியச்
சால் பெருந் தானைச் சேரலாதன்
மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன  5
கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழியச்
சென்றனர் ஆயினும் செய் வினை அவர்க்கே
வாய்க்க தில் வாழி தோழி வாயாது
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து  10
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென குவவு அடி
வெண் கோட்டு யானை முழக்கிசை வெரீஇக்
கன்று ஒழித்து ஓடிய புன்தலை மடப் பிடி
கைதலை வைத்த மையல் விதுப்பொடு
கெடு மகப் பெண்டிரின் தேரும்  15
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே.

348
பாடியவர்: மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார், 
திணை: குறிஞ்சித் திணை 
தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

என் ஆவது கொல் தானே முன்றில்
தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்துக்
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறுந் தீங்கனிப்
பயிர்ப்புறுப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ
இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல்  5
நெடுங்கண் ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல்
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக்
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கிக் குறவர்
முறித் தழை மகளிர் மடுப்ப மாந்தி
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி  10
யானை வவ்வின தினை என நோனாது
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇச்
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நல்மொழி தேறிய நெஞ்சே?